சிசேரியனால் சுயநினைவை இழந்த தாய்! -மீட்டெடுத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

கடந்த 10-ம் தேதி மீண்டும் சிசேரியன் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்பு அடுத்தநாள் திடீரென மூச்சுவிடவே கடுமையாகச் சிரமப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே விச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா(31). இவருக்குக் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதல் பிரசவம் சிசேரியனாக இருந்துள்ளது. தற்போது இரண்டாவது பிரசவத்திற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்குக் கடந்த 10-ம் தேதி மீண்டும் சிசேரியன் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்பு அடுத்தநாள் திடீரென மூச்சுவிடவே கடுமையாகச் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுய நினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கீதா, மருத்துவர் குழுவின் ஒரு வாரத் தொடர் சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளனர்.

இதுபற்றி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது,``நோயாளி அனுமதிக்கப்பட்டபோது அதிகளவு ஜுரம் மற்றும் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் 96 சதவிகிதம் இருக்க வேண்டிய ஆக்சிஜன் செறிவு அவருக்கு 84 சதவிகிதம்தான் இருந்துள்ளது. மருத்துவர்கள் சாய் பிரபா, கணேசன் தலைமையிலான மயக்க மருத்துவர்கள் அந்த நோயாளிக்குச் செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கினர்.
சுவாசக் கோளாறு காரணமாக ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாகவும் அமிலத்தன்மை அதிகமாகவும் காணப்பட்டது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் அதிநவீன சிகிச்சையான ஏ.பி.ஜி டெஸ்டுகள் எடுக்கப்பட்டன.
ஒரு நாளைக்கு இருமுறை ரத்தத்தில் உள்ள வாயுக்களின் அளவும் அமிலத்தன்மையும் கணக்கிடப்பட்டு தினமும் 10,000 ரூபாய் அளவுக்கான மருந்துகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. இதயத்திற்குப் பக்கத்தில் மருந்துகளை எளிதில் செலுத்துவதற்காக சி.வி.பி என்னும் குழாயும் பொருத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளிலிருந்து மூக்கு வழியாக இரைப்பையில் பொருத்தப்பட்ட குழாய் வழியாக அவருக்கு உணவு அளிக்கப்பட்டது. ஐந்து நாள்கள் செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு நாள் இயற்கையாகச் சுவாசிக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதன் விளையாக ஏழாவது நாள் இயற்கையாகச் சுவாசிக்க ஆரம்பித்தார். தற்போது முற்றிலும் குணமடைந்து நலமுடன் உள்ளார். சுயநினைவு இழந்த, அதிலும் பிரசவித்த தாயைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய சாதனை. மருத்துவர்கள், செவிலியர்களின் கூட்டு முயற்சிதான் இதற்கு முக்கியக் காரணம். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ள 2 லட்ச ரூபாய் வரையிலும் ஆகும். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.