Published:Updated:

புதுச்சேரி: `70 பேரில் இருந்து 100 ஆக மாறும்!' - அதிகரித்த தொற்று; அச்சத்தில் கிரண் பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் கிரண் பேடி.

புதுச்சேரியின் ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களுக்கும், கிராமப்புறப் பகுதிகளுக்கும் அடிக்கடி விசிட் செய்து ஆய்வுகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தவர் கிரண் பேடி. மத்திய அரசும் புதுச்சேரி அரசும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அப்போதும் துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள் அணிவது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

ஆனால், புதுச்சேரியில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஆளுநர் மாளிகையில் முடங்கினார். கையெழுத்துக்கு வரும் கோப்புகளில்கூட கிருமி நாசினி தெளித்துவிட்டுத்தான் கையாள்கிறார் என்று தகவல்கள் வெளியானது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பொதுவெளிக்கு வந்து கொரோனா பணிகளை மேற்கொண்ட போதும், கிரண் பேடி ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வரவில்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார்.

தொற்றுநோய் மையங்களாக மாறும் கடைகள்

ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத கிரண் பேடி சுமார் 90 நாள்களைத் தாண்டி ஆளுநர் மாளிகையில் முடங்கியிருக்கிறார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் கிரண் பேடி. மேலும் 48 மணிநேரம் ஆளுநர் மாளிகை மூடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதுடன், கிரண் பேடி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கடைகளும் சந்தைகளும் கொரோனா தொற்று நோய் மையங்களாக மாறி வருகின்றன என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி
புதுச்சேரி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இரட்டை இலக்க எண்களில் இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 1,151 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, இன்று ஒரேநாளில் மட்டும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் கிரண் பேடி,``கோவிட் 19 குற்றவழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து பார்க்கும்போது, அனைத்துக் கடைகளும் விழிப்பு உணர்வின்றி செயல்பட்டு வருகின்றன.

`மகளுக்காக மருத்துவ சீட் வாங்கினாரா கிரண் பேடி? -அமைச்சரின் குற்றச்சாட்டால் அதிர்ந்த ஆளுநர் மாளிகை

அதேபோல முகக்கவசம் அணிந்துகொண்டு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் அரை நாள் மூடப்படுவதுடன், பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்கும் தொடரப்படலாம். புதுச்சேரியில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 70 புதிய நபர்கள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்தப் பரவல் 100 நபர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வருமுன் காப்பதே சிறந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு