Published:Updated:

`அவர்கள் நம்பிக்கையால் மீண்டிருக்கிறேன்!’-கொரோனாவை வென்ற ராணிப்பேட்டை இளைஞர்

கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்
கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பிலிருந்து ராணிப்பேட்டை இளைஞர் மீண்டுள்ளார். முழுமையாகக் குணமடைந்த அவரை மருத்துவர்கள் கைதட்டி மகிழ்வித்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர், கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் ஊர் திரும்பினார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் ‘கொரோனா’ தொற்று இருந்தது. இதையடுத்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்
கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்

மருத்துவர்களும் செவிலியர்களும் அந்த இளைஞரைத் தீவிரமாகக் கண்காணித்து சிறப்பான சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், கொரோனாவிலிருந்து அவர் மீண்டு பூரணமாகக் குணமடைந்துள்ளார். மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞரை மருத்துவர்களும் செவிலியர்களும் கைதட்டி கரவோசையுடன் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்ததால் அவர்களையும் கரவோசை எழுப்பி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனாவிலிருந்து மீண்டுவந்த கீழ்விஷாரத்தைச் சேர்ந்த இளைஞரை போனில் தொடர்புகொண்டு பேசினோம்.

கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்
கைதட்டி வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்

நம்மிடம் அவர், ``விமானத்தில் பயணம் செய்தபோது, அருகிலிருந்தவரிடமிருந்து எனக்குக் கொரோனா தொற்றியிருக்கிறது. விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பரிசோதனை செய்தனர். அப்போது, உடல்நலம் பாதிக்கப்படவில்லை. இரண்டு நாள்கள் கழித்தே சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டில் என்னை அனுமதித்தனர்.

கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். காலையில் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு இட்லி கொடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாள்கள் என்ன நடக்கப் போகிறதோ என்கிற அச்சம் இருந்தது. அதன்பிறகே, என் மனநிலை நார்மலாக மாறியது. கொரோனாவிலிருந்து மீளலாம். அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்தனர்.

`அனைத்தும் நன்றாகவே நடந்தது!’ - கொரோனாவை வென்ற நெல்லை இளைஞர் உற்சாகம்

அவர்களின் நம்பிக்கையால்தான் நான் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறேன். என் குடும்பத்தினரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுக்குத் தொற்று இல்லை. அடுத்த 28 நாள்களுக்கு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு