Published:Updated:

கோவிட்-19: மீண்டும் நடைமுறைக்கு வந்த ரேபிட் டெஸ்ட்... சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட்
சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட்

கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்திலேயே ரேபிட் டெஸ்ட் என்ற ஆன்டிபாடி பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் அதிகளவில் ஈடுபடுவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் IGG, IGM Antibody Test என்ற பரிசோதனை செய்யப்படவுள்ளது. பரிசோதனை செய்யும் திட்டம் இன்று சென்னை மாநகராட்சி கட்டடத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தொடங்கி களப்பணிகளில் ஈடுபடுவோர் எனச் சுமார் 44,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

Rapid Test for corporation employees
Rapid Test for corporation employees

நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், "களத்தில் பணியாற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காவது (Exposure) அதிகமாகயிருக்கும். அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் வகையில் அனைவருக்கும் படிப்படியாக இந்தப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

பரிசோதனையில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை விரைவாகத் தனிமைப்படுத்த முடியும். நோய் பாதித்து குணமாகியிருந்தால் அதையும் கண்டறிய முடியும். அப்போது பயமின்றி அவர்களால் பணியைத் தொடர முடியும்.

இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள ஆர்சனிகம் ஆல்பம் என்ற மருந்தும் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது இந்தப் பரிசோதனைகளை செய்கிறோம். ஐ.டி. நிறுவனங்கள் போன்ற அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இந்தப் பரிசோதனை பயனளிக்கும். இது தொடர்பாக அரசு மேற்கொண்டு முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்ஸின் செயல்திறன் சரியாக இல்லை என்பதால் நிறுத்தப்பட்டது.
ரேபிட் டெஸ்ட் கிட் விநியோகஸ்தர்

என்ன பரிசோதனை?

இந்தப் பரிசோதனை IGG, IGM Antibody Test அல்லது serosurveillance test என்று அழைக்கப்படும். மாநகராட்சிப் பணியாளர்களுக்குப் பரிசோதனை செய்வதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து கருவிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஏஜிஸ் ஹோம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் வி.மோகன்ராம், "கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடலில் IGG, IGM ஆகிய இரண்டு வகையான நோய் எதிர்ப்புப் பொருள்கள் (Antibody) உருவாகும். அவற்றைக் கண்டறிவதன் மூலம் ஒருவருக்குத் தற்போது தொற்று உள்ளதா, தொற்று குணமாகிவிட்டதா, தொற்று ஏற்பட்டு குணமாகும் நிலையில் இருக்கிறாரா என்ற மூன்று வகையான முடிவைப் பெற முடியும். இந்தப் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியளித்துள்ளது" என்றார்.

எப்படிச் செயல்படும்?

இந்தப் பரிசோதனை கிட்டில் பரிசோதனை எப்படிச் செய்யப்படும் என்று எஸ்.டி.ஆர்.யூ மெட் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் சந்தோஷ் மோகன் விளக்கினார்.

"கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனைக் கருவி போல ஒரு சிறிய ஸ்டிக் இருக்கும். சோதிக்கப்படும் நபரிடமிருந்து 15 முதல் 30 மைக்ரோ லிட்டர் ரத்தத்தை எடுத்து அந்த ஸ்டிக்கின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்த வேண்டும்.

Testing Stick
Testing Stick
Representational image

ஸ்டிக்கில் C, G, M என்று மூன்று எழுத்துகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் C என்பது சரியான அளவு ரத்தத்தைச் செலுத்தியிருக்கிறோமோ என்று பரிசோதிக்கும். அதில் ஒரு சிவப்புக் கோடு குறியீடு தெரிந்தால் சரியான அளவு ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதில் குறியீடு காட்டப்படவில்லை என்றால் சரியான அளவு ரத்தம் செலுத்தவில்லை என்று அர்த்தம்.

அடுத்ததாக G-யில் சிவப்புக்கோடு தெரிந்தால் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு குணமாகி IGG ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்று பொருள். கடைசியாக இருக்கும் M-ல் சிவப்புக்கோடு தெரிந்தால் தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்டு, உடனடி எதிர்ப்புப்பொருளான IGM உருவாகியிருக்கிறது என்று பொருள். G, M என இரண்டிலும் குறியீடுகள் தெரியும்பட்சத்தில், அந்த நபருக்குத் தொற்று ஏற்பட்டு குணமாகும் படிநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். C-ஐத் தவிர வேறு எந்தக் குறியீடும் காட்டப்படவில்லை என்றால் அந்த நபர் இன்னும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று அர்த்தம்.

Rapid Test for corporation employees
Rapid Test for corporation employees

இந்தப் பரிசோதனையில் 90 சதவிகிதம் உணர்திறனும், 99 சதவிகிதம் துல்லியத்தன்மையும் இருக்கிறது என்பதால் முடிவு சரியாகவே இருக்கும். பரிசோதனைக்கென்று ஆய்வக கட்டமைப்பு தேவையில்லை. எளிதாக எங்கு வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். உடனடியாக முடிவும் தெரிந்துவிடும்.

பரிசோதனை கிட்டை சரியான வெப்பநிலையில் பராமரிக்காதது, ரத்தத்தைப் பரிசோதனை ஸ்டிக்கில் செலுத்தி 30 நிமிடங்களுக்குப் பிறகு முடிவைப் பார்ப்பது போன்றவற்றால் மட்டுமே தவறான முடிவுகள் வர வாய்ப்புள்ளது" என்றார்.

புதிய மொந்தையில் பழைய கள்?

கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்திலேயே ரேபிட் டெஸ்ட் என்ற ஆன்டிபாடி பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், அதில் அதிக தவறான முடிவுகளே வெளிவந்ததால், ரேபிட் டெஸ்ட்டை நிறுத்தும்படி ஐ.சி.எம்.ஆரும் மற்றும் மத்திய அரசும் உத்தரவிட்டன. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர் முறை மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே ரேபிட் டெஸ்ட்டை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Corona infection
Corona infection

என்ன வித்தியாசம்?

இரண்டு பரிசோதனைகளுக்கும் என்ன வித்தியாசம், ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பரிசோதனையை மீண்டும் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று ஏஜிஸ் ஹோம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் வி.மோகன்ராமிடம் கேட்டதற்கு, "முதலில் பயன்படுத்தப்பட்ட பரிசோதனை கிட்ஸ் சீனாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டவை. பரிசோதனை கிட்டில் உள்ள ஸ்டிக்கில் ஒரு தகடு போன்ற அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். சீனாவில் தயாரிக்கப்பட்ட கிட்ஸில் அதன் செயல்திறன் சரியாக இல்லை என்பதால் நிறுத்தப்பட்டது.

தற்போது பயன்பாட்டில் உள்ளவை கனடா நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டவை. இவற்றின் செயல்திறன் நன்றாக இருப்பதால்தான் ஐ.சி.எம்.ஆர் அனுமதியளித்திருக்கிறது. இந்தப் பரிசோதனையில் IGM இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் அவசியம்" என்றார்.

Covid-19
Covid-19
கோவிட்-19 பரிசோதனை நெகட்டிவ் வந்தாலும் நோய்த் தொற்று இருக்கலாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற நேரத்தில், பத்திரிகையாளர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொள்வதற்காக மாநகராட்சிப் பணியாளர்கள் மூன்று பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் மூன்றில் ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதைக் குறிக்கும் IGM ஆன்டிபாடி காணப்பட்டது. பரிசோதனை செய்துகொண்ட மாநகராட்சி ஊழியர் அதுவரை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் அனைவர் மத்தியிலும் அமர்ந்திருந்தார் என்பதால் அந்தப் பகுதியில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு