Published:Updated:

`சொந்த கிளினிக்.. பழிவாங்கல்!’ -பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடையே `ஈகோ’ மோதல்?

டாக்டர் சிவக்குமார் செந்தில் முருகன்
டாக்டர் சிவக்குமார் செந்தில் முருகன் ( எம். விஜயகுமார் )

கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களைக் கடவுளாக பார்க்கப்படுகிறது. இச்சூழலில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்குள் நடக்கும் மோதல் ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் சிவக்குமார் செந்தில்முருகன். இவர் மீது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் கனிமொழி பொது சுகாதாரத்துறை இயக்குநருக்குப் புகார் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, டாக்டர் சிவக்குமார் செந்தில்முருகன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாறுதல்ஆணை
மாறுதல்ஆணை

பென்னாகரம் தலைமை மருத்துவ அலுவலர் கனிமொழி அனுப்பிய கடிதத்தில், ``பென்னாகரம் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக மரு. சிவக்குமார் செந்தில்முருகன் பணிபுரிந்து வருகிறார். இம்மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகள் இருந்தும் நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் அவர்களை அலைக்கழித்து வருகிறார். நோயாளிகளைத் திட்டுவதும் அவர்களைத் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போகச் சொல்லியும் அலைக்கழிக்கிறார்.

பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்வதில்லை. முதன்மை மருத்துவராகிய என்னை ஒரு பெண் என்றும் பாராமல் அனைவர் முன்னிலையிலும் அவதூறாகப் பேசுகிறார். முதன்மை மருத்துவ அலுவலராகிய எனக்கு எந்த தகவலும் கொடுக்காமல் இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிப்பதும், சங்கத்துக்குச் சென்றும் முறையிடுகிறார். பணிகளைச் செய்ய எனக்கு உத்தரவிடுகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தர்மபுரியில் உள்ள அவருடைய சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளித்த பிறகு இரண்டு, மூன்று நாள்கள் கழித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தொடர் சிகிச்சை தருவார். இவர் பணியில் இல்லாத விடுமுறை நாள்களிலும் அரசு மருத்துவமனைக்கு வருவார். நோயாளிகளைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவருக்குச் சொந்தமான கிளினிக்குக்கு அழைத்துச் செல்வார்.

இவருக்கு உடந்தையாக ஆண் செவிலியர் வீரமணி செயல்படுகிறார். இவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்தே தனியார் ஆம்புலன்ஸுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயாளிகளை அனுப்பி வைக்கிறார். இதற்காக வீரமணி மரு. சிவக்குமார் செந்தில்முருகனிடம் கமிஷன் பெறுகிறார். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இதற்கு உடந்தை உள்ளார். மரு. சிவக்குமார் செந்தில்முருகன் மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தொடர்ந்து எதிராகச் செயல்படுவதோடு அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்,

டாக்டர் சிவக்குமார் செந்தில்முருகன்
டாக்டர் சிவக்குமார் செந்தில்முருகன்

இதுபற்றி மருத்துவர் சிவக்குமார் செந்தில்முருகனிடம் பேசிய போது, ``ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்கள். பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் சொந்தமாக வெளியில் கிளினிக் வைத்திருக்கிறார்கள். என்னுடைய சொந்த கிளினிக்கில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவருக்குக் கூட ஆபரேஷன் செய்ததில்லை. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவருக்கு ஆபரேஷன் செய்ததாக நிரூபித்தால் உடனே ராஜினாமா செய்கிறேன். கொரோனா பரிசோதனை அனைவருக்கும் செய்ய வேண்டுமெனப் போராடினேன். அதற்காகப் பழிவாங்கப்பட்டிருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு