அரசு மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கான உண்மைப் பின்னணி என்ன?

அமைச்சரவைக் கூட்டத்திலும் எங்கள் போராட்டம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெற்றால் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கரும் உறுதியளித்திருக்கிறார்.
கடந்த ஏழு நாள்களாக நடைபெற்ற அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வழக்கம்போல் இன்று காலையிலிருந்து தங்கள் பணிகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியப்பட்டை (Pay Band) 1 முதல் 4 படிநிலைகளில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். இதில் அரசு மருத்துவர்கள் பணியில் நுழையும்போதே படிநிலை 3-ல் சேர்வார்கள். அப்படிச் சேர்பவர்களுக்கு 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பிறகு, ஊதியத்தின் நிலை 4-ஆக உயர வேண்டும் என்று 2009-ம் ஆண்டு அரசாணை போடப்பட்டது. அதே ஆணையில் எதிர்காலத்தில் 20 ஆண்டுகள் என்பதை 12 ஆண்டுகளாக மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எதிர்காலம் என்பது எப்போது என்பதை நிர்ணயம் செய்து, ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசாணையின் மறுபரிசீலனை 2017-ம் ஆண்டு வந்தது. அப்போதும் இந்த விஷயத்தை அரசு நிறைவேற்றவில்லை.
இதன் காரணமாக அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள், அக்டோபர் 25-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினமே சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் தீபாவளி சமயத்திலும் அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த ஏழு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவசர, அத்தியாவசிய சிகிச்சைகள் அனைத்தும் தடைப்படாமல் பார்த்துக்கொண்டோம். பலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் பணியில் இருந்தனர்.அரசு மருத்துவர்கள்
இந்நிலையில், திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் அக்டோபர் 29-ம் தேதி சென்னை வந்தார். அன்று இரவே, போராடிய மருத்துவர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்தார். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டடால் அவர்கள் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமனம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் இதே கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வழிமொழிந்தார். இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டக்களத்தில்தான் நின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் போராட்டத்தை ஒருங்கிணைக்கத் தீவிரமாகப் பணியாற்றிய 50 அரசு மருத்துவர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனால் சற்று குழப்பத்துக்குள்ளான மருத்துவர்கள், அடுத்தகட்டமாக என்ன நகர்வை எடுப்பது எனப் புரியாமல் திகைத்து நின்றனர்.

எட்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் என்று நினைத்த நிலையில், காலையிலேயே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து வழக்கம்போல் பணிக்குத் திரும்பினார்கள் மருத்துவர்கள். தமிழக அரசும் சுகாதாரத் துறையும் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால்தான் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
இது உண்மைதானா... அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால்தான் போராட்டத்தை வாபஸ் பெற்றார்களா என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் கேட்டோம்.
"அரசு மருத்துவர்களாகிய எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது. கடந்த ஏழு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவசர, அத்தியாவசிய சிகிச்சைகள் அனைத்தும் தடைப்படாமல் பார்த்துக்கொண்டோம்.

பலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் பணியில் இருந்தனர். 7 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் மக்கள் சேவை பாதிக்கப்படவில்லை.
நாங்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடவில்லை. ஏற்கெனவே அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊதியத் திருத்தத்தை அளிக்கும்படிதான் போராடினோம். முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும், முதல்வர் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாக இருந்தது.
நாங்கள் எதிர்பார்த்ததுபோல் முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டுவிட்டார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் எங்கள் போராட்டம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெற்றால் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கரும் உறுதியளித்திருக்கிறார். அரசின் மீது நம்பிக்கை வைத்துப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். எங்கள் நம்பிக்கையை அரசு காப்பாற்றாவிட்டால் மீண்டும் போராட்டக் களம் காண தயங்கமாட்டோம்" என்று தெரிவித்தனர்.

போராட்டத்தை விலக்கிக்கொண்ட மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் மீது எடுக்கப்பட்ட பிரேக்-இன்-சர்வீஸ் (பணி முறிவு) நடவடிக்கையும் ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார். இதனால் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட மருத்துவர்கள் தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய மருத்துவமனைகளிலேயே பணியைத் தொடர முடியும்.