Published:Updated:

டெங்குவால் இதுவரை 1,800 பேர் பாதிப்பு... என்ன செய்கிறது தமிழக சுகாதாரத் துறை?

கொசு ஒழிப்பு நடவடிக்கையில், மருந்து அடிக்கும் பழைய முறையைப் பின்பற்றாமல், பயோ டெக்னிக் முறை, ஜெனடிக் இன்ஜினீயரிங் முறை ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும்.

Dengue
Dengue

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது, டெங்குக் காய்ச்சல். கடந்த சில ஆண்டுகளைவிட, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டில் இதுவரைக்கும் 1,800 பேர் டெங்குக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Dengue
Dengue

கடலூரில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்குத் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு, அவர்களில் ஒன்பது பேருக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சளி, காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்கூட நாளொன்றுக்கு ஐந்து பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், தேனி என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஆனால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கொசு ஒழிப்பு நடவடிக்கைக்காக, ப்ளாக்குக்கு 30 பேர் வீதம், ஒரு மாவட்டத்துக்கு 360 பேர் மஸ்தூர்களாகப் பணிபுரிகிறார்கள். காலையில் எட்டு மணிக்குத் தொடங்கி வீடு வீடாகச் சென்று, மக்களிடம் டெங்குக் கொசு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, கொசு மருந்து அடிப்பது ஆகிய வேலைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், மஸ்தூர்களில் பலர் இந்த வேலைகளை முறையாகச் செய்வதில்லை. ஒருசில வீடுகளுக்கு மட்டும் சென்றுவிட்டு, ஓர் ஊரைக் கடந்துவிடுகிறார்கள். அதனால்தான் டெங்குக் காய்ச்சல் பரவுகிறது.
சமூக ஆர்வலர்கள்

``ஒருசில மஸ்தூர்களைத் தவிர மற்றவர்கள் மிகச் சிறப்பாகவே வேலைசெய்கிறார்கள். மக்கள்தான் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. புழு இருக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது எனச் சொன்னால், பயன்படுத்த வேறு தண்ணீர் இல்லை என வாக்குவாதம் செய்வார்கள். சில இடங்களில் நாம் எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டார்கள். அவர்களையும் குறைசொல்ல முடியாது. பல கிராமங்களில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. சேமித்துவைத்துத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கொசுவை ஒழிக்க, குறிப்பிட்ட ஒரு மருந்தைப் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் அந்த மருந்தடித்தும் கொசு ஒழியாது'' என்கிறார்கள், சுகாதார ஊழியர்கள்.

Dengue
Dengue

தண்ணீர்ப் பற்றாக்குறையும் கொசு ஒழிப்புக்கான சரியான நடவடிக்கைகள் எடுக்காததும்தான் டெங்குக் காய்ச்சல் பரவக் காரணமா?

``ஒவ்வோர் ஆண்டும் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகாவது, நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். இந்தாண்டு அதுவுமில்லை. அதனால்தான் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்குத் தனிப்பிரிவுகளை உடனடியாக ஏற்படுத்தவேண்டும். கொசு பரவாமல் தடுக்க தண்ணீரைச் சேமித்துவைத்துப் பயன்படுத்தாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு, தினமும் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும். வீடுவீடாகச் சென்று மக்களிடம் டெங்குக் கொசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தண்ணீரை மூடிவைத்துப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு நிரந்தர ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும்.

டெங்குவைப் பற்றிய ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த வேண்டும். ஏற்கெனவே நான்கு வகை டெங்குப் பாதிப்புகள்தான் இருந்தன. தற்போது ஐந்தாவது வகை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கொசுக்கள் எந்தவகை, நாம் பயன்படுத்தும் மருந்துகளில் அவை சாகின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும். அதோடு, கொசு ஒழிப்பு நடவடிக்கையில், மருந்து அடிக்கும் பழைய முறையைப் பின்பற்றாமல், பயோ டெக்னிக் முறை, ஜெனடிக் இன்ஜினீயரிங் முறை ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும். கொசுக்களை மலட்டுக் கொசுக்களாக மாற்றும் முறையும் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அதற்கு, டெங்கு ஒழிப்புக்கு அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
மருத்துவர் ரவீந்திரநாத்

``நோயை வருமுன் தடுப்பதற்குப் பதிலாக வந்தபிறகு சரிசெய்து கொள்ளலாம் என அரசு மெத்தனமாக இருக்கிறது. மக்களின்மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது'' என்கிறார், சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்.

Ravindranath
Ravindranath

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் டெங்கு ஒழிப்பில் வேலை செய்த ஊழியர்களை அதிகமாகக் கணக்குக் காட்டி, கொள்ளையடிக்கும் சம்பவமும் பல இடங்களில் நடந்துவருகின்றன. இந்த ஆண்டுத் தொடக்கத்தில், உலக அளவில் என்னென்ன நோய்களால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணித்து, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எபோலா, ஜிகா, நிபா என மற்ற வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் ஒரு பிரிவிலும், டெங்கு மட்டும் தனியாக ஒரு பிரிவிலும் இடம்பெற்றிருந்தது. அந்தளவுக்கு மற்ற வைரஸ் பாதிப்புகளைவிட டெங்கு அபாயகரமானதாக அறிவிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் முன்பே எச்சரித்தும், கடந்த சில ஆண்டுகளில் டெங்குக் காய்ச்சலால் விரும்பத்தகாத பல சம்பவங்கள் நிகழ்ந்தும் அரசு மிகவும் மெத்தனமாகச் செயல்படுவது ஏன்?

``இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். டெங்கு ஒழிப்பு தொடர்பாக, சென்னையில் மாநில அளவிலான அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை கடந்தவாரம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து திருச்சியில் ஏழு மாவட்டங்களுக்கு மீட்டிங் நடத்தினோம். நேற்று கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கூட்டம் நடந்தது. லார்வா கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் இடங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், தேவையற்ற குப்பைகள் இருக்கும் இடங்களையும் கண்காணித்து வருகிறோம்.

Kulanthaisamy
Kulanthaisamy

எவ்வளவு பேர் சிகிச்சைக்காக வந்தாலும், அவர்களுக்குச் சிகிச்சை தரும் அளவுக்கான வசதிகளை உருவாக்கி இருக்கிறோம். தேவையான மாத்திரை, மருந்துகள் இருக்கின்றன. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. டெங்குவைப் பொறுத்தவரை மக்கள்தான் உரிய ஒத்துழைப்பு தரவேண்டும். வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவேண்டும். தண்ணீரைத் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்'' என்றார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி.

ஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... 
பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு!

கடந்த மாதம் லண்டனுக்குச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் `லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன்' நிறுவனத்துக்குச் சென்றார். டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அந்த நோய்களைக் கையாளும் வழிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வந்திருக்கிறார். ஆனால், கள யதார்த்தமோ இதுவரை நடைபெற்று வந்த பணிகளில்கூட மிகப்பெரிய தேக்கநிலை உண்டாக்கியிருப்பதையே காட்டுகிறது.

Edappadi palanisamy
Edappadi palanisamy

இந்தியாவிலேயே, தமிழகச் சுகாதாரத் துறை முன்னணியில் இருக்கிறது என ஒருபுறம் பெருமையடித்துக் கொண்டாலும், இதுபோன்ற வைரஸ்களால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்க முடிவதே இல்லை. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.