Published:Updated:

தீபாவளி சமயத்தில் மருத்துவர்கள் ஸ்டிரைக் ஏன்... அமைச்சர் விஜயபாஸ்கர்தான் காரணமா?

Doctors Strike
Doctors Strike

'அமைச்சரின் நடவடிக்கைதான் எங்களை போராட்டத்துக்குத் தள்ளியது.' குமுறும் அரசு மருத்துவர்கள்!

தீபாவளிப் பண்டிகை, டெங்கு காய்ச்சல் எனப் பரபரப்பாக இருக்கும் தமிழகத்தில், முக்கியப் பிரச்னையாக மாறியிருக்கிறது, அரசு மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம். பொறுப்புள்ள அரசுப் பதவியில் இருந்துகொண்டு மக்கள் சேவையை மறந்து இப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா என்று பலரின் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கின்றனர் அரசு மருத்துவர்கள். ஆனால், இந்த வேலை நிறுத்தத்தின் பின்னால் இருக்கும் பிரச்னைகளை ஆராய்ந்துபார்த்தால், மருத்துவர்களைப் போராட்டத்துக்கு உந்தித் தள்ளியதே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் செயல்பாடுகள்தான் என்று சொல்லப்படுகிறது.

Doctors Strike
Doctors Strike

பிரச்னை என்ன?

அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியப்பட்டை (Pay Band) 1 முதல் 4 படிநிலைகளில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். இதில், அரசு மருத்துவர்கள் பணியில் நுழையும்போதே படிநிலை 3-ல் சேருவார்கள். அப்படிச் சேருபவர்களுக்கு, 20 ஆண்டுகள் பணியை நிறைவுசெய்த பிறகு ஊதியத்தின் நிலை 4-ஆக உயர வேண்டும் என்று 2009-ம் ஆண்டு அரசாணை போடப்பட்டது. அதே ஆணையில், எதிர்காலத்தில் 20 ஆண்டுகள் என்பதை 12 ஆண்டுகளாக மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எதிர்காலம் என்பது எப்போது என்பதை நிர்ணயம் செய்து ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். அரசாணையின் மறுபரிசீலனை 2017-ம் ஆண்டு வந்தது. ஆனால் தமிழக அரசோ, அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

Minister Vijayabaskar
Minister Vijayabaskar

இந்நிலையில், 2018-ம் ஆண்டு ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தபோது, அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் சார்பில் பொதுநல வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மருத்துவர்களின் தரப்பில் நியாயம் இருக்கிறது. உயர் நீதிமன்றப் பதிவாளர்கூட அரசு மருத்துவர்களைவிட அதிக ஊதியம் வாங்குகிறார் என்பதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், நீதிபதியின் உத்தரவுக்கு பதிலளிக்காமல் அரசு தரப்பு அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது.

போராடிய மருத்துவர்கள்

இந்நிலையில், 6 மாதங்கள் கழித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இந்தக் கோரிக்கைகள் நிறைவேறப் போராட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்பிறகு தர்ணா போராட்டம், சாகும்வரை உண்ணாவிரதம் என்பன போன்ற அறப்போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். போராட்டங்கள் நடத்தினாலும் அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர அறுவை சிகிச்சைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, பிரசவம் போன்ற முக்கியமான சேவைகள் தடையின்றி நடைபெற்றிருக்கின்றன. புறநோயாளிகள் பிரிவு, திட்டமிடப்பட்ட அறுவைசிகிச்சைகள் மட்டுமே நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சரை மருத்துவர்கள் சந்தித்தனர்.

"நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. அதனால் தேர்தல் முடிந்ததும் உடனடியாக ஊதிய உயர்வை அறிவித்துவிடுவேன்.''
அமைச்சர் விஜயபாஸ்கர்

"முதல்வருடன் லண்டன் செல்லும் அவசரத்திலும் சந்தோஷத்திலும் இருந்த அவரோ, இன்னும் 6 வாரத்தில் ஊதிய உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று வாக்களித்தார். அதோடு மட்டுமல்லாமல், எழுத்துபூர்வமாக எங்களுக்கு அதைத் தெரிவித்தார். அவர் அளித்த கெடு அக்டோபர் 8-ம் தேதியோடு முடிவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் அமைச்சரை நேரில் சென்று பார்த்தபோதெல்லாம், 6 வார காலம் என்பது உங்களுக்கு அதிகபட்சம். அதற்குள்ளாகவே முதல்வர், நிதித்துறை செயலர் எல்லோரையும் சென்று பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஆனால், ஒருமுறைகூட அதற்கான முயற்சியை அவர் எடுக்கவேயில்லை. அமைச்சரின் செயல்பாடு ஒருவகையில் எங்களை எரிச்சல் மூட்டியது. தொடர்ந்து எதையாவது சொல்லி எங்களை ஏமாற்றிக்கொண்டே இருந்தார். அதுதான் எங்களைப் போராட்டத்துக்குள் தள்ளியது" என்கின்றனர், அமைச்சரின் செயல்பாட்டினால் நொந்துபோன அரசு மருத்துவர்கள் சிலர். இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம், அக்டோபர் 9-ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறவிருந்தது. ஆனால், அதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று அமைச்சரின் தரப்பிலிருந்து கல்லூரியின் முதல்வருக்கு அழுத்தம் வரவே, அவரும் அனுமதியை மறுத்திருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் டவர் பிளாக்கின் அருகே தரையில் அமர்ந்து கூட்டத்தை நடத்துவோம் என்று மருத்துவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதைக் கேள்விப்பட்ட விஜயபாஸ்கர், போராட்டக் களத்தில் இருந்தவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார்.

மருத்துவர்
மருத்துவர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. அதனால் தேர்தல் முடிந்ததும் உடனடியாக ஊதிய உயர்வை அறிவித்துவிடுவேன்" என்று வாக்களித்திருக்கிறார். தேர்தல் முடிந்து முடிவுகளும் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக வெளியான நிலையிலும் அமைச்சர் தரப்பிலிருந்து சாதகமான முடிவுகள் வராததால், போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் அரசு மருத்துவர்கள்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் அ.இராமலிங்கத்திடம் கேட்டபோது, "நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேர் எங்களுடன் இணைந்திருக்கின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பணிக்குச் சென்றாலும் வருகைப் பதிவில் கையெழுத்திடவில்லை. பயிற்சி மருத்துவர்களும் பணியில்தான் இருக்கின்றனர். ஆசிரியர்கள் எல்லாரும் போராட்டத்தில் இருப்பதால், அவர்களும் போராட்டத்திற்கு வருவதற்குத் தயாராகவே உள்ளனர். தீபாவளி முடிந்தும் எங்கள் கோரிக்கைக்கு பதில் கிடைக்கவில்லை என்றால், போராட்டம் தீவிரமாகும்" என்றார்.

Emergency services
Emergency services

இந்நிலையில், தற்போது அரசு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறியுள்ளார். தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் சொல்வதற்காகவாவது அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தருமாறு கோரியுள்ளனர் மருத்துவர்கள். அதுவரை போராட்டத்தைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர். பிரச்னைக்குக் காரணமான அமைச்சரோ, மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததோடு முடித்துக்கொண்டார். அவர் மருத்துவர்களிடம் உரையாடி இந்தப் பிரச்னையை விரைந்து முடிக்கவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமும்!

அடுத்த கட்டுரைக்கு