Published:Updated:

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஆயுஷ் மருந்துகள் தரமற்றவையா? உண்மை நிலவரம் என்ன?

ஆயுஷ் மருந்துகள்
ஆயுஷ் மருந்துகள் ( Pixabay )

`இந்தப் புள்ளிவிவரங்கள் முழுக்க முழுக்க தமிழகத்துக்குச் சிறப்பு சேர்க்கும் அம்சங்கள். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.’

உலகம் முழுவதும் அலோபதி மருத்துவம் கோலோச்சி வந்தாலும், நோய்த் தடுப்புக்காகவும் பக்கவிளைவுகளற்ற மருத்துவத்துக்காகவும் பாரம்பர்ய மருத்துவ முறைகளின் பக்கம் மக்கள் பார்வை திரும்பியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 மருத்துவ முறைகள் புகழ் பெற்று விளங்கி வருகின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ஆயுஷ் மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

Ayush Drugs
Ayush Drugs
Pixabay

இந்நிலையில் மாநிலங்களவையில் போலி ஆயுஷ் மருந்துகள் தயாரிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபட் யெஸ்ஸோ நாயக், தமிழகத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை அளித்தார்.

அதில், தமிழகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2,251 சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளின் மாதிரிகளில் 92 மருந்துகள் போலியானவை மற்றும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 74 மருந்துகள் போலி என்று கண்டறியப்பட்டன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான போலி மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 69 மருந்துகள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ள தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையிலும் தொடர் கண்காணிப்பிலும் மருந்துகள் பரிசோதிக்கப்படுவதால் தரமற்ற மருந்துகள் விற்பனை வெளியே தெரிய வருகிறது.
மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி

கூடுதல் தகவலாக, கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 69 மருந்து தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு மருந்து உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 5 ஆயுஷ் மருத்துவ முறைகளில் ஒரு சிலவற்றை மக்கள் பின்பற்றுகிறார்கள். அதற்கான மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி போன்றவையும் இருக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இந்த ஐந்து மருத்துவ முறைகளும் பின்பற்றப்படுகின்றன. ஐந்து மருத்துவ முறைகளுக்கென்று அரசு சார்பில் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது மத்திய அமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரங்கள் சற்று கவலையளிக்கின்றன.

Drugs
Drugs
Pixabay
Vikatan

தமிழகத்தில் போலி மருந்துகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா என்று அறிந்துகொள்ள தமிழக சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவத் துறையின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பிச்சையாகுமாரிடம் பேசினோம்.

``இந்தப் புள்ளிவிவரங்கள் முழுக்க முழுக்க தமிழகத்துக்குச் சிறப்பு சேர்க்கும் அம்சங்கள். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

முதலில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 340 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த மருந்துகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான ஆயுஷ் சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 23 பேர் பணியில் இருக்கின்றனர்.

Pechaiah Kumar
Pechaiah Kumar

பிற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் சுகாதார அலுவலர்கள் உள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த 23 அலுவலர்களும் மாதத்துக்குக் குறைந்தது 8 மருந்துகளையாவது பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதற்காக மருந்துக் கடைகள், மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மருந்துகளைச் சேமித்து வைக்கும் கிடங்குகள், வாகனத்தில் மருந்துகளை அனுப்பும்போது என அனைத்து இடங்களிலிருந்தும் மாதிரிகளைச் சேகரித்து அனுப்ப அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறு அனுப்பப்படும் மருந்துகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில மருந்து பரிசோதனைக்கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு மருந்துகளின் தரம் கண்டறியப்படும். ஆயுஷ் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்கும் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் மருந்துகளின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனையின் பேரில் மருந்துகள் தரமற்றவை அல்லது போலி என்று கண்டறியப்பட்டுவிட்டால் குறிப்பிட்ட மருந்தைத் தடை செய்வது, மருந்து நிறுவனத்தின் உரிமத்தை இடைக்காலமாகத் தடை செய்வது அல்லது நிரந்தரமாக ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Testing
Testing
Pixabay

தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையிலும் தொடர் கண்காணிப்பிலும் மருந்துகள் பரிசோதிக்கப்படுவதால் தரமற்ற மருந்துகளின் விற்பனை வெளியே தெரிய வருகிறது. இதனால் தரமான மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு