Published:Updated:

உடையும் ஊசி மர்மம்... அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஊசிகள் தரமில்லாதவையா?

ஊசி
ஊசி

கடந்த நான்கு மாதங்களில் (செப்டம்பர் முதல் நவம்பர் 2019), அரசு மருத்துவமனைகளில் நான்கு இடங்களில், ஊசி உடைந்து உடலில் தங்கும் பிரச்னைகள் பதிவாகியுள்ளன. காரணம், ஊசிபோட்டவரின் தவறா... ஊசியின் தரமா?

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிசேரியன் சிகிச்சையின்போது பெண்ணின் உடலில் ஊசியை வைத்து தைத்த சம்பவம், தற்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. `மருத்துவர்களின் மேற்பார்வையின்றி, செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்ததால் இப்படி நடந்துள்ளது' என மருத்துவர்கள் மீதும் செவிலியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர், ஊர் மக்கள்.

சிசேரியனின் போது உடலில் தைக்கப்பட்ட ஊசி - ஸ்கேன் ரிப்போர்ட்.
சிசேரியனின் போது உடலில் தைக்கப்பட்ட ஊசி - ஸ்கேன் ரிப்போர்ட்.

தமிழகத்தைப் பொறுத்தவரை `ஊசி போடும்போது உடலுக்குள் ஊசியின் முனை ஒடிந்து, சதைகளுக்குள்ளேயே தங்கிவிட்டது' என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. கடந்த நான்கு மாதங்களில் (செப்டம்பர் முதல் நவம்பர் 2019), அரசு மருத்துவமனைகளில் நான்கு இடங்களில், இப்படியான பிரச்னைகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் எதிர்ப்பு, செயற்பாட்டாளர்கள் குரல் என உச்சிப்புளி சம்பவத்துக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செவிலியர் மற்றும் மருத்துவர் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் `ராமநாதபுரம் பெண்ணுக்கு நிகழ்ந்தது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள விசாரணை ஆணையம் அமைக்கப்படும். மேலும், அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட்ட மற்றும் விநியோகிக்கப்படவுள்ள ஊசிகள் அனைத்தும் தற்போது தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்' என பேட்டி அளித்திருந்தார், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம்
உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்ககத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவரிடம், `ஊசிகள் தரமின்றி இருப்பதுதான் இப்படியான பிரச்னைகளுக்கான பின்னணியா... ஊசிகள் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற கூற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்' என விசாரித்தோம்.

``இதற்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அங்கு விநியோகிக்கப்பட்டிருந்த ஊசிகள் யாவும், தடுப்பூசி முகாமின் கீழ் உபயோகப்படுத்தும்படி மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு வழங்கப்பட்டிருந்தவை. அங்கு பணிபுரிந்த நபர்கள், அதைத் தவறான நேரத்தில், தவறான மருந்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, சீர்காழி சம்பவத்தின்போது, நோயாளிக்கு ஊசி போட்ட மருத்துவப் பணியாளர், பணியிலிருந்து ஓய்வுபெற்ற நபர். முறையான அறிவுறுத்தலின்றி போட்டுள்ளார். இப்படியான விஷயங்கள் அனைத்தையும் `வெறுமனே தரம் சார்ந்த பிரச்னை' என்ற பார்வையில் மட்டுமே பார்க்கவேண்டியதில்லை. பெரும்பாலான நேரங்களில், இவை யாவும் தனிநபர் தவறுகளாகவே இருக்கின்றன.

syringe
syringe

ராமநாதபுரத்தில் நடந்த சம்பவமும்கூட, தனிநபர் ஒருவரின் தவறான கையாள்தலால், அலட்சியத்தால் நிகழ்ந்ததுதான். ஆக, எல்லாமே ஊசி போட்டுவிட்ட நபரின் தவறுகளால் (Human Errors) நிகழ்ந்தவை. மாறாக, தரக் குறைவான ஊசி பயன்பாட்டால் நிகழ்ந்தவை அல்ல. சொல்லப்போனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் பத்தரை கோடி ஊசிகள் தினமும் விநியோகிக்கப்படுகின்றன. தரம் சார்ந்த பிரச்னை இருப்பின், விஷயத்தின் வீரியம் அதிகரித்திருக்கும்.

இப்படியான விஷயங்கள் அனைத்தையும் `வெறுமனே தரம் சார்ந்த பிரச்னை' என்ற பார்வையில் மட்டுமே பார்க்க வேண்டியதில்லை. பெரும்பாலான நேரங்களில், இவை யாவும் தனிநபர் தவறுகளாகவே இருக்கின்றன.
மருத்துவச் சேவைகள் கழக அதிகாரி.

எதுவாக இருப்பினும், தமிழக அரசின் தரப் பரிசோதனைக்கான விசாரணைக் குழுவின் அமைப்பை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், வருங்காலத்தில் ஊசிகளில் தரம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, இந்தக் குழு இப்போது மேற்கொள்ளும் செயல்பாடுகள் யாவும் உதவும் என நாங்கள் நம்புகிறோம்!" என்கிறார் அவர்.ஊசிகளின் தரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த. அறத்திடம் கேட்டோம்.

ஊசி
ஊசி

ஊசிகளின் தரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் த. அறத்திடம் கேட்டோம்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்         த. அறம்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் த. அறம்

``இதுவரையில் ஊசியின் தரத்தைக் கண்காணிப்பதென்ற விஷயம், தமிழகத்தில் நடந்ததில்லை என்பதால், இதுகுறித்த முழுமையான விவரங்கள் எங்களுக்குத் (மருத்துவர்களுக்கு) தெரியவில்லை. அடிப்படையில் ஊசியை, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அடிப்பகுதி, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. மேற்பகுதி, ஊசி. இவை இரண்டும் இணையும் இடம் மிக முக்கியமானது. இப்பகுதியின் தன்மையை வைத்துதான் ஊசியின் தரம் நிர்ணயிக்கப்படும். இந்த இடம் வலுவாக இல்லையெனில் சதைக்குள் செலுத்தப்படும் ஊசி, உடைந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்தப் பகுதி எந்த அளவு வலுவாக உள்ளதென தரம் பார்க்கப்படும். ஊசியின் அடிப்பகுதியான பிளாஸ்டிக்கின் நெகிழ்வுத்தன்மையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். தற்போதைக்கு, இந்த இரண்டு முறைகள்தான் எதிர்பார்க்கப்படும் பரிசோதனை முறைகள்.

ஊசி போடுவதென்பது, சாதாரண விஷயமல்ல. ஒவ்வொருவரின் சதையையும் பொறுத்து ஊசியைக் கையாளும் விதமும், அதைப் பயன்படுத்தும் விதமும் மாறுபடும். உதாரணத்துக்கு, ஒருசிலர் ஊசி போடும்போது பயத்தில் தங்களை இறுக்கிக்கொள்வார்கள். அதனால் சதை இறுகிவிடும். இவர்களுக்கு ஊசி போடுவது சற்று கடினம். குழந்தைகளை எடுத்துக்கொண்டால், ஊசியிலிருந்து தப்பிக்க நினைத்து துள்ளிக்கொண்டே இருப்பார்கள். ஆக, அவர்களுக்கு ஊசி போடுவதும் சிரமமான காரியம்.

இன்னும் சிலருக்கு, ஊசி அதிகம் போட்டுப்போட்டு அந்த இடத்தின் சதைப்பகுதி முழுவதுமாக மரத்துப்போயிருக்கும். இவர்களுக்கெல்லாம் சதைக்குள் ஊசியை நுழைப்பது கடினம்தான். ஆகவே, நபருக்கு நபர் ஊசி போடும் விதமும் மாறும். ஊசி போட்டுவிடும் மருத்துவப் பணியாளர்கள், எப்போதும் அக்கறையோடும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். எப்போதுமே, ஊசியை வெளியில் எடுக்கும்போது முழுமையாக ஊசி வெளியே வந்துவிட்டதா என அவர்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை, எதிர்பாரா விதமாக ஊசி சதைக்குள் சிக்கிக்கொண்டால்கூட, உடனடியாக அதை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

`ஊசி உடைஞ்சு இடுப்பு எலும்புல சிக்கிக்கிச்சு!' - கோவை மருத்துவமனை மீது இளைஞர் புகார்

இந்த ராமநாதபுரம் பிரச்னையில் தொடர்புள்ள செவிலியரும் மருத்துவரும், ஊசி போடும்போதும் கவனமாக இருக்கவில்லை... ஊசி போட்ட பின்னரும் கவனமாக இருக்கவில்லை என்பதுதான் சிக்கல்! மருத்துவத்துறையில் இருப்பவர்கள், இத்தனை அலட்சியத்தோடு இருப்பது தவறு!" என்றார் அவர்.

ஊசி தரம்
ஊசி தரம்

மேலும், `யாருக்கு எந்த ஊசியென்பது, எப்படி முடிவுசெய்யப்படுகிறது' என்பதற்கான விளக்கத்தைத் தருகிறார், மருத்துவர் த. அறம்.

``ஊசிகளை, அதன் சுற்றளவைக்கொண்டு `காஜஸ்' (gauges) என்ற அளவுகோலில் தனித்தனி ரகங்களாக வகைப்படுத்தலாம். இந்த காஜஸில், பல அளவுகள் இருக்கும். பிரதானமாக உபயோகிக்கப்படும் காஜஸ் அளவுகள் - 18, 22, 24 ஆகியவை. காஜஸின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, குறிப்பிட்ட ஊசியின் சுற்றளவு குறைந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அளவுகோலை எடுத்துக்கொள்ளலாம்... அவற்றில், 24 என்ற காஜஸ் அளவுதான் மிகக் குறைவான சுற்றளவுடையது. இப்படிக் குறைந்த சுற்றளவைக்கொண்ட ஊசிகள், வலி தராதவையாக இருக்கும். அளவு குறைந்திருக்கும் ஊசிகள், வலியை அதிகமாகத் தரும்.

விஷயம் என்னவெனில், `எனக்கு வலி குறைவா தரக்கூடிய ஊசியைப் போட்டுவிடுங்கள்' எனக் கூறி நோயாளிகள் ஊசியின் அளவுகோலைத் தேர்வு செய்ய முடியாது. `இவருக்கு இந்த ஊசி' என்ற கான்செப்ட்டே தவறு. ஒருவரின் சதை தடிமன் / தன்மையைப் பொறுத்து ஊசித் தேர்வு இருக்காது. மாறாக, `இந்த மருந்துக்கு இந்த ஊசி' என்பதுதான் கான்செப்ட். அதாவது, மருந்துகளின் தன்மை மற்றும் அடர்த்தியைப் பொறுத்து, அதற்கு எந்தச் சுற்றளவுடைய ஊசியைப் பயன்படுத்தலாம் என முடிவுசெய்யப்படும். மருத்துவர்களுக்கு மருந்தின் தன்மை - அடர்த்தியெல்லாம் தெரியுமென்பதால், அவர்கள் அதை முடிவு செய்வார்கள்.

`இவருக்கு இந்த ஊசி' என்ற கான்செப்ட்டே தவறு. `இந்த மருந்துக்கு இந்த ஊசி' என்பதுதான் கான்செப்ட்.
மருத்துவர் அறம்
ஊசி
ஊசி

அடர்த்தி மற்றும் தன்மைக்கேற்ற சுற்றளவுகொண்ட ஊசி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், போதுமான அளவு மருந்து உடலுக்குள் செல்லாது. நோயாளிக்கும் நோய் சரியாகாது. உதாரணமாக, பாராசிட்டமால் வகை மருந்துகள் சற்றே எண்ணெய்த்தன்மையுடன் (Oily) இருக்கும். இதை 24 ஜி அளவுகோல் கொண்ட ஊசியில் போட்டால், மருந்து முழுமையாக உடலுக்குள் செல்லாது. ஆகவே, அதை 22 ஜி - யில்தான் பயன்படுத்துவோம். ரத்தம் ஏற்றுதல், ரத்தம் மாற்றுதல் போன்ற நேரங்களில் 18 ஜி தான் பயன்படுத்தப்படும். காரணம், ரத்தம் அடர்த்தி மிக்கது. அதைக் குறைந்த சுற்றளவுகொண்ட ஊசிக்குள் விட்டால், அவை பிரியவோ உடையவோ தொடங்கிவிடும். இந்த ஊசித் தேர்வு குறித்த தகவல்களும் விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு தேவைப்படாது. மருத்துவர்களுக்குத் தெரிந்தாலே போதுமானது" என்கிறார் அவர்.

பின் செல்ல