Published:Updated:

கண்காணிப்பு வளையத்தில் கருத்தரிப்பு மையங்கள்: மத்திய அரசின் பதிவேடு சொல்லும் செய்தி என்ன?

எப்படி இ-சிகரெட்டை மட்டும் மத்திய அரசு தடை செய்ததோ அதேபோன்று இந்தச் சட்டத்தை மட்டும் இயற்றியதுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள்
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ( Freepik )

குழந்தை வரம் தேடும் தம்பதிகள் அனைவருக்கும் அது இயற்கையாக அமைந்துவிடுவதில்லை. அதுபோன்ற நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் (Artificial Reproductive Technology - ART) கைகொடுத்து வருகின்றன. 1978-ம் ஆண்டு உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்தது. அன்றிலிருந்து தொடங்கியது இந்தத் துறையின் அபார வளர்ச்சி. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தால் பலருக்குக் குழந்தை பாக்கியம் சாத்தியமாகியுள்ளது. அதே நேரம் இந்தத் துறையின் சந்தை மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. 2026-ம் ஆண்டில் இந்தத் துறையின் மதிப்பு ரூ.3,63,641 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Child birth
Child birth

இந்தியாவிலும் இந்தத் துறை கோலோச்சி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்கள் அனைத்தும் மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மையங்களைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 1,846 மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் இதுவரை 478 மையங்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 15 செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப வங்கிகள் உட்பட மொத்தம் 225 மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 48 மையங்கள் இதுவரை தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளன.

இது மத்திய அரசின் நடைமுறை. அதன் மூலம் ஏ.ஆர்.டி மையங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முடியும். வாடகைத்தாய் முறையில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கும் இது உதவும்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
 ```வாட்டர் பர்த்' மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை!" - பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின்!

16 மையங்கள் பதிவுசெய்யும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், குறைந்தபட்சம் 46 மையங்கள் இது தொடர்பாக இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் சௌபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவச் செயற்பாட்டாளரும் சமூக சமத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்:

''செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அந்த மசோதா சட்டமாகவில்லை. அதற்குள் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப மசோதாவின் ஓர் அம்சமான வாடகைத்தாய் முறைக்கு அவசரகதியில் சட்டமம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் ஓர் அம்சம்தான் ஏ.ஆர்.டி மையங்களை மத்திய பதிவேட்டில் பதிவு செய்வது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐ.சி.எம்.ஆர் உருவாக்கியுள்ளது.

Dr.Shanthi Ravindranath
Dr.Shanthi Ravindranath

ஆனால் ஏ.ஆர்.டி மசோதாவைச் சட்டமாக்காமல் வாடகைத்தாய் சட்டத்தை இயற்றியது முட்டாள்தனமானது. எப்படி இ-சிகரெட்டை மட்டும் மத்திய அரசு தடை செய்ததோ அதோபோன்று இந்தச் சட்டத்தை மட்டும் இயற்றியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், பதிவேட்டில் பதிவுசெய்யும் முறையை அமல்படுத்துவதால் ஏ.ஆர்.டி மையங்களைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடியும். இதன் மூலம் ஏ.ஆர்.டி மையங்களின் பின்னால் சட்ட சிக்கல்கள், வாரிசு பிரச்னை, சமூகப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். மேலும், அதிக பணத்தைப் பெற்று நோயாளிகளை ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னைகளையெல்லாம் ஒழுங்குபடுத்த இந்தப் பதிவு முறை உதவும். மேலும், போலியான மையங்களை ஒழித்து, தரமான மையங்கள் செயல்பட வழிவகுக்கும்" என்றார்.

மத்திய அரசின் பதிவேட்டில் தமிழகத்தில் வெறும் 48 மையங்கள்தான் பதிவு செய்துள்ளன. மீதமுள்ள மையங்கள் ஏன் இன்னும் பதிவு செய்யவில்லை? இந்த விஷயத்தில் தமிழக அரசின் பங்கு என்ன என்று அறிந்துகொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

கருத்தரிப்பு
கருத்தரிப்பு
கருத்தரிப்பு சிகிச்சைகள்... கண்டுகொள்ளாத
அரசு மருத்துவமனைகள்...
கல்லாகட்டும் 
தனியார் மையங்கள்!

"தமிழக அரசின் கீழ் மருத்துவமனைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவமனைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் ஒரு மருத்துவர் பணியாற்றும் கிளினிக்குகள் முதல் கார்ப்பரேட் மருத்துவமனைகள்வரை பதிவு செய்ய வேண்டும். அதில் ஏ.ஆர்.டி மையங்களும் அடங்கும்.

இது மத்திய அரசின் நடைமுறை. அதன் மூலம் ஏ.ஆர்.டி மையங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முடியும். வாடகைத்தாய் முறையில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கும் இது உதவும்.

குழந்தைசாமி
குழந்தைசாமி

ஜூன் மாதம்தான் வாடகைத்தாய் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இது செயல்பாட்டில் இருந்துகொண்டிருக்கும் ஒரு நடைமுறைதான். அதனால் தமிழகத்தில் இத்தனை மையங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்பதைக் குற்றமாகக் கூற முடியாது. படிப்படியாகப் பதிவுசெய்யும் நடைமுறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்றார்.