Published:Updated:

`கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்துங்கள்' - தேசிய குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு ஆணையம்!

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ( Ncpcr facebook )

சிறுவர் மற்றும் குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது இந்தியாவிலும் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள்
குழந்தைகள்
விகடன்

கொரோனா அச்சுறுத்தல் மிகத் தீவிரமாகியுள்ள நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை துரிதப்படுத்தமாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அறிவுரை கடிதம் எழுதியுள்ளது. அதில், `இது மாணவர்களுக்குத் தேர்வுநேரம் என்பதால், அவர்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எனவே, இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் போன்ற தாக்கம் அவர்களை எந்த வகையிலும் பாதித்துவிடக் கூடாது. அதனால் அவர்களை அந்தத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் கடிதம்
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் கடிதம்

குறிப்பாக, மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்த வழிகாட்டுதல்களை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு இது தேர்வுநேரம் என்பதால் இது போன்ற தேவையற்ற எந்த மன அழுத்தங்களும் அவர்களுக்கு ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டத்தின்படியே இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகம், கொரோனா வைரஸ் தொடர்பாகப் பள்ளிகளுக்கு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, `பள்ளியில் வகுப்பு நேரம் போக பள்ளியின் மற்ற நேரங்களில் மாணவர்கள் ஒன்று கூடுவதை பள்ளி நிர்வாகம் தடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளது. அதையடுத்து தீவிர கொரோனா தொற்று பரவியுள்ள நாடுகளுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் சென்றுவிட்டு தாயகம் திரும்பி இருந்தால், அந்தக் குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களை 14 நாள்களுக்குப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் தனிமையில் வைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு