Published:Updated:

`ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி முட்டாள்தனமான செயல்!’ - எதிர்க்கும் உலக விஞ்ஞானிகள்

கோவிட்-19 ரஷ்ய தடுப்பூசி
கோவிட்-19 ரஷ்ய தடுப்பூசி

`உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்படும் என்பதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்னர்.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக உலகின் முதல் தடுப்பூசியை வெளியிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். தன் இரண்டு மகள்களில் ஒருவருக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, பரிசோதனை நடத்தியதாகவும், புதிய தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்தார். தடுப்பூசியைக் கண்டறிவதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் முயன்று வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த நற்செய்தி உலகம் முழுவதுமுள்ள மக்களை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Covid-19
Covid-19
Martin Sanchez on Unsplash

ரஷ்ய தொலைக்காட்சியில் பேசிய புதின்,``ஸ்புட்னிக் வி' (Sputnik V) என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தத் தடுப்பூசியானது கோவிட்-19 வைரஸுக்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். மேலும், தேவையான அனைத்துப் பரிசோதனைகளையும் கடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இது நற்செய்தியாக இருந்தாலும், உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்படும் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்னர். ரஷ்யா, தடுப்பூசி பரிசோதனை குறித்த முழுத் தரவுகளையும் வெளியிடவில்லை. அப்படியிருக்கும்போது தடுப்பூசியின் செயல்திறன் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

``கோவிட்-19 நோய்க்கு எந்த நாடு முதலில் தடுப்பூசியைத் தயாரிக்கும் என்ற பந்தயத்தில் முதலாவது வருவதற்காக அவசர கதியில் தடுப்பூசியை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் பொறுப்பற்ற, முட்டாள்தனமான செயல்" என்று உலக தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா அதிபர்
ரஷ்யா அதிபர்
AP

தடுப்பூசி மனிதப் பரிசோதனையின் (Human Trial) மூன்றாவது நிலையில் அதிக அளவிலான மக்கள்தொகைக்கு வழங்கி பரிசோதனை செய்ய வேண்டும். குறைந்தது 10,000 பேருக்காவது இந்தத் தடுப்பூசியை வழங்கி அதன் திறனைக் கண்டறிய வேண்டும். அதை இனிமேல்தான் ரஷ்யா நடத்தப்போகிறது. அந்தப் பரிசோதனை முடிவுக்குப் பிறகுதான் தடுப்பூசியின் திறன் குறித்த முடிவுக்கு வர முடியும். அதற்கு முன்பு பெருமளவில் தடுப்பூசி தயாரிப்பது (Mass Production) நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் கேட்கும் உலக சுகாதார நிறுவனம்!

இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி தாரிக் ஜாஸாரெவிக்,``ரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டுமானால், தடுப்பூசி பாதுகாப்பு பரிசோதனை தொடர்பான தரவுகளை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய சுகாதார அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பிலிருந்து கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

vaccine
vaccine
ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!

ஆலோசிக்கும் மத்திய அரசு!

ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெறுவதற்கு இந்தியா முதல் நாடாக பதிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து தடுப்பூசியைப் பெறுவது, இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்ச்சி செய்வது தொடர்பாக மத்திய அரசின் தடுப்பூசி நிர்வாகக் குழு தேசிய நிபுணர்களுடன் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு