Published:Updated:

Sputnik V: ₹995.4 விலை, 91.6% செயல்திறன்... இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த 3-வது தடுப்பூசி

A shot of Russia's Sputnik V vaccine
A shot of Russia's Sputnik V vaccine ( AP Photo/Pavel Golovkin )

சராசரியான சளித்தொல்லையை உண்டாக்கக்கூடிய அடினோ வைரஸ் என்ற ஒரு வகை வைரஸின் ஆபத்தில்லாத இரண்டு வடிவங்களை (disarmed strains) இந்தத் தடுப்பூசி பயன்படுத்துகிறது.

ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக், இந்தியர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. புது டெல்லியில் இருக்கும் ரஷ்ய தூதர் நிக்கோலே குடஷேவ் (Nikolay Kudashev) 60,000 டோஸ் மருந்துகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத் வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆய்வு நிறுவனமான கமாலேயா மற்றும் ரஷ்ய ராணுவத்துறை அமைச்சகம் இணைந்து உருவாக்கிய ஸ்புட்னிக் வி (Sputnik V) கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்தை (Emergency Use Authorisation, EUA) கடந்த மாதம் பெற்றது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி செயல்படவிருக்கிறது.

A health worker administers the Sputnik V coronavirus vaccine to a man
A health worker administers the Sputnik V coronavirus vaccine to a man
AP Photo / Mahesh Kumar A

ஸ்புட்னிக் வி என்ற சோவியத் ஆட்சிக்காலத்தைய செயற்கைக் கோளின் நினைவாக, இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, இது கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இந்தத் தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்காக, 2020-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ரஷ்யாவில் அனுமதியளிக்கப்பட்டது.

அதன்பிறகு, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (Russian Direct Investment Fund, RDIF), டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் (Dr. Reddy's Laboratories) என்ற பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தோடு கூட்டுப் பங்காண்மை வைத்துக்கொண்டு, இந்தியாவில் அதன் பரிசோதனைகளைத் தொடங்கியது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்பாடு எப்படி?

சராசரியான சளித்தொல்லையை உண்டாக்கக்கூடிய அடினோ வைரஸ் என்ற ஒரு வகை வைரஸின் ஆபத்தில்லாத இரண்டு வடிவங்களை (disarmed strains) இந்தத் தடுப்பூசி பயன்படுத்துகிறது. கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை உடல் முழுக்க கொண்டுசெல்ல அது உதவுவதாகக் கூறப்படுகிறது. இதை உருவாக்கியவர்கள், ``இந்த அடினோ வைரஸ் அனைவரின் உடலிலும் சளியை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொதுவான வைரஸ் வகைதான். ஆகவே, இது கோவிட் தடுப்பு மருந்தைச் சுமந்து செல்லும்போது, நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் பக்க விளைவுகள் குறைகின்றன. ஆகவே, தடுப்பூசியும் திறம் மிக்கதாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளனர்.

Corona Vaccine
Corona Vaccine
Claudio Furlan/LaPresse via AP

இப்போதைக்கு இந்தத் தடுப்பூசி, இரண்டு டோஸ்களாகக் கொடுக்கப்படுகிறது. முதல் டோஸ் கொடுத்து, 21 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும். உச்சபட்ச நோய் எதிர்ப்பாற்றல், 28-வது நாளிலிருந்து 42-வது நாளுக்குள் உடலில் உருவாகும். மேலும், விரைவில் ஒரே டோஸ் மட்டும் போட்டாலே போதும் என்ற அளவுக்குத் திறனுடைய மற்றொரு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யா, இந்தியாவுக்குள் கொண்டுவரப்போகிறது. இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதால் சிலருக்குக் காய்ச்சல் ஏற்படலாம். ஆனால், அதைத் தாண்டி குறிப்பிடத்தக்க எதிர்வினைகள் இதுவரை இந்த மருந்தில் இல்லையென்று சொல்லப்படுகிறது. கூடுதலாக, மிகக் குறைந்த பக்கவிளைவுகளைக் கொண்ட தடுப்பூசியாகவும் ஸ்புட்னிக் வி குறிப்பிடப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தி லேன்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்பாடு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள், 91.6 சதவிகிதம் செயல்திறன் மிக்கதாக இது இருக்கிறதென்று கூறுகின்றன. ஃபைஸர் உட்பட மற்ற பல தடுப்பூசிகளோடு இதை ஒப்பிடும்போது, இதுவே அதிக செயல் திறனோடு இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதன் மூன்றாம்கட்ட பரிசோதனையின்போது, 14,963 பேருக்கு இது வழங்கப்பட்டது. மேலும், இந்திய மக்களிடமும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி அவர்களிடமும் இதன் செயல்திறன் எப்படியிருக்கிறது என்பதை பரிசோதனை செய்துள்ளதாக, டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

A health worker prepares to administer the Sputnik V coronavirus vaccine
A health worker prepares to administer the Sputnik V coronavirus vaccine
AP Photo / Mahesh Kumar A

கூடுதலாக, இது வயது அடிப்படையில் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் ஆய்வு செய்ததன் மூலம், அனைத்து வயதினரிடமும் இது செயல்திறன் மிக்கதாக இருக்கிறதென்று உறுதி செய்துள்ளனர். இதுவரை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தோடு இணைந்து, பெலாரஸ், வெனிசுலா, பொலிவியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் இந்த மருந்தை வாங்குவதற்குப் பதிவு செய்துள்ளன.

கடந்த மே 1-ம் தேதியன்று 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி டோஸ்கள் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தன. இந்தியாவில் இதன் விலை, 5% ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து 995.4 ரூபாய். அப்போலோ மருத்துவமனை, ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ரூ.1,250 நிர்ணயித்துள்ளது.

ஏப்ரல் 12-ம் தேதியன்று, இந்தியாவில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதன் மூலம் விரைந்து மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதால், அதற்கான வேலைகளில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்விளைவாக, இந்தியாவில் இதன் தயாரிப்பு ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்கள் என்ற கணக்கில் அதிகரிக்கப் போவதாக புது டெல்லியில் இருக்கும் ரஷ்ய தூதர் கூறியுள்ளார்.

Vaccination - Representational image
Vaccination - Representational image
Manish Swarup

இந்தியாவை ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி மையமாக மாற்றுவதில் ரஷ்யா மிகவும் உறுதியாக உள்ளது. இப்போதே, க்ளாண்ட் ஃபார்மா, ஹெடிரோ ஃபார்மா, பனாசியா ஃபார்மா, ஸ்டெலிஸ் பயோஃபார்மா, விர்சோவ் பயோடெக் போன்ற இந்தியாவிலுள்ள பல்வேறு மருந்து நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக இது குறிப்பிடப்பட்டாலும், பல்வேறு வல்லுநர்கள் இதன் செயல்திறன் குறித்து சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதன் மூன்றாம்கட்ட பரிசோதனை குறித்த தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த மருந்தின் செயல்திறனை உறுதி செய்துகொள்வதற்குப் போதுமான தரவுகள் இல்லையென்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அதோடு, மூன்றாம்கட்ட பரிசோதனை மற்றும் அதன் முடிவுகளை வெளிப்படைத்தன்மையோடு வைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அதோடு, முதல் டோஸ் போட்டவுடன் நடக்க வேண்டிய முதல்கட்ட மதிப்பாய்வு, இரண்டாம் டோஸ் முடிந்தவுடன்தான் நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்கட்ட மதிப்பாய்வு முறையாக நடக்காததால், அதன் முடிவுகள் தெளிவின்றி இருப்பதாகவும் அதனால் தரவுகளிலும் பற்றாக்குறை நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது.

Russia's Sputnik V vaccine
Russia's Sputnik V vaccine
AP Photo / Antonio Calanni

ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரித்த ஆய்வாளர்கள், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தபோது, ``மூன்று கட்டப் பரிசோதனைகளுமே தெளிவாக நடந்துள்ளன. அதோடு, அவற்றின் தரவுகளும் வெளிப்படையாகவே உள்ளன. மேலும் 51 நாடுகளில் இதை முழுமையாகப் பரிசோதித்து உறுதி செய்துகொண்ட பிறகே, தங்கள் பயன்பாட்டுக்காகப் பதிவு செய்துள்ளனர். உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளோடும் தான் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அது பலகட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யவும் பட்டுள்ளது" என்று பதிலளித்துள்ளார்கள்.

இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகும் இந்தத் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் பெரிதாவதற்குள், அரசே முன்வந்து அதை உரிய ஆதாரங்களோடு மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான், முதல் இரண்டு தடுப்பு மருந்துகள் விஷயத்தில் சமூகத்தில் குழப்பம் ஏற்பட்டது போல், இதில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு