Published:Updated:

`நோய் எதிர்ப்பு சக்தி; வீடுதேடிச் சென்று சேவை!’ - நெகிழவைக்கும் சேலம் மருத்துவரின் பணி

மக்களுக்கு மருத்துவர் மாத்திரை வழங்கல்
மக்களுக்கு மருத்துவர் மாத்திரை வழங்கல் ( எம். விஜயகுமார் )

ஏழை, எளிய மக்களைச் சந்தித்து ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்குகிறார்.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இச்சூழலில் மக்களுக்குக் கண் கண்ட தெய்வமாக மருத்துவர்கள் விளங்கி வருகிறார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த அரசு ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார்.

எம்.பி-க்கு மாத்திரை வழங்கல்.
எம்.பி-க்கு மாத்திரை வழங்கல்.

இவர் பணி முடித்த பிறகு தன் சொந்தச் செலவில் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களைச் சந்தித்து ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்குவதோடு இயலாதவர்களுக்குப் பொருளுதவியும் செய்து வருகிறார். அரசு உத்தரவை மதித்து தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் தனித்திருக்கச் சொல்லியும் அட்வைஸ் செய்து வருகிறார்.

இதுபற்றி இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவரும், அரசு மருத்துவருமான சசிகுமாரிடம் கேட்டதற்கு, ``கொரோனா வைரஸைப் பொறுத்தவரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் சசிகுமார்
மருத்துவர் சசிகுமார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மத்திரையை ஆயுஷ் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்த ஆரோக்கியா திட்டத்திலும் இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரையைக் காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாத்திரைகளை மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த ஒரு நோய்த் தொற்றும் வராது. வந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

மற்ற மத்திரைகளைப்போல ஹோமியோபதி மாத்திரைகள் ரத்தத்தில் கலக்காமல் சுரபிகள் மூலம் உறிஞ்சப்பட்டு உடனடியாக பலன் தரக்கூடியவை. இந்த மாத்திரைகள் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்களும், நோயுற்றவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் சாப்பிடலாம். இந்த மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இருமல், சளி, நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை உடனே குணப்படுத்தும். உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றிய ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

எதிர்ப்பு மாத்திரை வழங்கல்
எதிர்ப்பு மாத்திரை வழங்கல்

கொரோனா வைரஸ் இந்தியாவில் 80 சதவிகிதம் ஏ சின்டமெட்டிக் அதாவது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் என எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் தாக்குகிறது. நோய் அறிகுறி தெரியாதவர்களால் அதிகம் நோய் பரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படும். அதனாலேயே அனைவருக்கும் இந்த மாத்திரைகளை வழங்கி வருகிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு