Published:Updated:

செவிலியர்கள் தினப் பாராட்டு ஒருபுறம் - உணவு, தண்ணீர், இடமில்லாமல் தவிப்பு மறுபுறம்!

செவிலியர்கள்
செவிலியர்கள் ( Representational Image2 )

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை செவிலியர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஈன்றெடுத்த தாய்க்கு முன்னர் ரத்தமும் சதையுமாகப் பிறக்கும் நம்மைத் தூக்கித் தாலாட்டும் மண்ணுலகின் தேவதைகளான செவிலியர்களுக்கு இன்று உலக செவிலியர் தின வாழ்த்துகள். இந்தப் பேரிடர் காலத்தில் செவிலியர்களின் பணி அளப்பரியது. பெற்றோர், குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு, முன்களப் பணியாளர்களாக அயராது உழைத்துவருகின்றனர். பாராட்டுகள் ஒருபுறமிருந்தாலும், சரியாக உணவு, தண்ணீர், தங்கும் இடம் இல்லாமல் தவிப்பதாகத் தெரிவிக்கிறார்கள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களிடம் பேசினோம். ``சேலம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 350 செவிலியர்கள் பணியாற்றுகிறோம். இதில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் என 50 பேர் இருக்கிறார்கள். 300 பேர் சுழற்சி முறையில் ஒரு வாரம் கொரோனா வார்டிலும், ஒரு வாரம் மருத்துவமனை மற்றும் செவிலியர் விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை

நாங்கள் கொரோனா பணிகளை மேற்கொண்டுவருவதால் வீடுகளுக்குச் செல்ல முடியாது. வீட்டுக்குச் சென்றால் எங்களுடைய வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. அதனால் மருத்துவமனையிலும், செவிலியர் விடுதியிலும் தங்கிக்கொள்கிறோம். கடந்த முறை கொரோனா பணி முடிந்ததும் எங்களுடைய உடல்நலத்தின் மீதும் கவனம் செலுத்தினார்கள்.

`நீங்க மட்டும் இல்லைன்னா..!' - செவிலியர்கள் காலில் விழுந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்

தனியார் லாட்ஜுகளில் தங்க வைத்து சிறந்த உணவுகளை வழங்கியதோடு, மருத்துவமனை வாகனத்தில் மீண்டும் பணிக்கு அழைத்து வந்தார்கள். நாங்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் எங்கள் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் தற்போது பணியை முடித்து வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். அதனால் நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் எளிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகிறோம்.

பணியின்போது மருத்துவமனை அறைகளிலும், செவிலியர் விடுதிகளிலும் தங்கச் சொல்லுகிறார்கள். போதிய உணவு இல்லை. ஓர் அறையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வேண்டிய நிலை இருக்கிறது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வு ஏற்படுகிறது. அதேநேரத்தில் 100 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற சூழல் இருப்பதால், எங்களுடைய பணி கடினமாக இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றிவருகிறோம். அரசு எங்களுக்குச் சிறந்த முறையில் தங்கும் விடுதியும், உணவும் வழங்குவதோடு கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இது பற்றி தமிழ்நாடு அரசு நர்ஸுகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவி சுதாவிடம் கேட்டதற்கு,``இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் பணியாற்றிவருகிறோம். தற்போதைய சூழலில் செவிலியர்கள் நலமாக இருந்தால் மட்டுமே மக்களுக்குச் சேவை செய்ய முடியும். எங்களுக்குப் பல குறைகள் இருக்கின்றன. அதை மருத்துவமனை டீனிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், அரசுக்கும் தெரிவித்திருக்கிறோம். அதை உடனே நிறைவேற்றித் தர வேண்டும்’’ என்றார்.

செவிலியர்கள்...
செவிலியர்கள்...
எம்.விஜயகுமார்

இது பற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தனபால் கூறுகையில், ``இந்தப் பேரிடர் காலத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதோ, மாவட்ட நிர்வாகத்தின் மீதோ, அரசு மீதோ குறை சொல்வது ஏற்புடையதல்ல. உயிர்ப்பலி ஏற்படாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும். சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவப் பணியாளர்களும் பணிகளைத் தாண்டி சேவை மனப்பான்மையோடு அர்ப்பணிப்போடு பணியாற்றிவருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும், அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்கள். நம்முடைய செயலைப் பார்த்து அனைத்து உதவிகளும் கிடைக்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு