Published:Updated:

கொரோனா சமூகப் பரவலாக மாறி உள்ளதா..? - விளக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வு #MyVikatan

Coronavirus
Coronavirus ( tam wai on Unsplash )

இந்த நோய் 85% நபர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களில் பலர் தங்களைப் பரிசோதனை செய்து கொள்வதில்லை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா நோய்த்தொற்று இப்போது சமூகப் பரவலாகி உள்ளதா என்பதே பலரின் கவலையாக இருக்கிறது. அரசும் பல முறை இந்த நோய் சமூகப் பரவலாக மாறவில்லை. அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால், அதிகரிக்கும் நோய்த் தொற்று காரணமாக மக்கள் அச்ச உணர்வுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

Covid-19
Covid-19
Pixabay

ஒரு நோய் சமூக அளவில் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நமது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செரோ சர்வே (Sero Survey) என்ற ஆராய்ச்சியைச் செய்து வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் தோராயமாக இந்தத் தொற்று உள்ளதா என்று கணக்கிடுவது இந்த ஆராய்ச்சியின் முறையாகும்.

இந்த நோய்த்தொற்று ஒருவருக்கு உள்ளதா என்பதை அவரின் சளி மாதிரிகளைக் கொண்டு தெரிந்துகொள்வது ஒரு முறை. இந்த முறையில்தான் தினந்தோறும் அரசு நோய்த்தொற்று பாதித்தவர்களைக் கணக்கீடு செய்கிறது. ஆனால், இந்த நோய் 85% நபர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களில் பலர் தங்களைப் பரிசோதனை செய்து கொள்வதில்லை. அதனால் ஒரு சமூகத்தில் எத்தனை பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாக சளி மாதிரி பரிசோதனையைக் கொண்டு கணக்கிடவே முடியாது.

Social Distancing
Social Distancing
Pixabay

ஆனால், ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அவரின் ரத்தத்தில் அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி (antibodies) ஏற்பட்டு இருக்கும். அதனால் செரோ சர்வேயின்படி தோராயமாக ஒரு பகுதியில் வசிப்பவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதா என்று ஆராயப்படும். இதன் மூலம் ஒரு பகுதியில் வசிக்கும் நபர்களில் எத்தனை சதவிகிதம் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை ஓரளவு அறிய முடியும்.

அதன்படி, இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலமாகிய மே மாத மத்தியில் முதல் சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை போன்ற 10 நகரங்களில் ஒவ்வொரு நகரத்திலும் 500 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. மேலும், பல மாநிலங்களில் உள்ள 60 மாவட்டங்கள் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன.

Lab Testing
Lab Testing
Pixabay

அந்தப் பரிசோதனை முடிவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பெருநகரங்களில் தொற்று பாதித்தவர்கள் என்று அரசு கணக்கிட்ட எண்ணிக்கையை விட 15 முதல் 30 மடங்கு நபர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதன் படி ஓர் உதாரணமாக சென்னையில் 10,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசு அறிவித்தால் உண்மையான எண்ணிக்கை அதைவிட 15 முதல் 30 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

இதன் தொடர்ச்சியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஜூன் மாத முதல் வாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் மற்றொரு சர்வே மேற்கொண்டது. இதன்படி அங்கு கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வேறு பல மாவட்டங்களில் தோராயமாக 400 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.

Corona tests
Corona tests
Pixabay

இதன் முடிவை ஜூன் மாத இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டது. அதன்படி கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்ட 400 மாதிரிகளில் 56 நபர்களுக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது 14 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். கொல்கத்தா நகரத்தில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவின்படி 14 சதவிகித மக்கள் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருந்தால் ஏறக்குறைய 22 லட்சம் மக்கள் இந்தப் பாதிப்பை அடைந்திருப்பர். ஆனால், மேற்கு வங்க மாநில கணக்கீட்டின்படி அந்த மாநிலத்தில் இன்றளவும் 40,000 நபர்கள் மட்டும்தான் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதனால் கணக்கில் காட்டப்பட்ட எண்ணிக்கைக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கலாம் என்பதை இதன் மூலம் உணர முடியும்.

இந்த ஆராய்ச்சியைப் பல இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இப்போது செய்து வருகிறது. அதன்படி மும்பை தாராவி பகுதியில் 36 சதவிகித மக்களிடம் இந்த நோய்க்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது என்றும், அகமதாபாத் போன்ற நகரங்களில் சில இடங்களில் 40 சதவிகித மக்களிடம் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது. மேலும், டெல்லியில் மிக அதிக எண்ணிக்கையில், 20,000 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதன் பாதிப்பு 15 முதல் 25 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Corona Tests
Corona Tests
Pixabay

உச்ச நீதிமன்றமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை இதே பரிசோதனைகளை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் எடுப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் பல நகரங்களில் இந்தப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பேர் சொல்லா பிள்ளையும் டீ வியாபாரமும்! - லாக்டெளன் சிறுகதை #MyVikatan

குழு நோய் எதிர்ப்பாற்றல் (Herd immunity) என்பது ஒரு பகுதியில் 60% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிட்டால் அந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லாமல்தானே அழிந்துவிடும். இந்த நோய் அதிகம் பாதித்த நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் இந்த நோயின் பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருவது இந்த நகரங்களில் குழு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டதாலும் இருக்கலாம்.

ஆனால், அந்த ஆராய்ச்சியில் மேற்கு வங்கத்தில் சில நகரங்களில் பரிசோதிக்கப்பட்ட 400 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே நோய்த் தொற்று ஏற்பட்டது தெரிந்தது. அதனால் இந்த நோய் ஆரம்ப நாள்களில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகம் பரவாமல் இருந்திருக்கலாம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால் இந்த நோய்த்தொற்று நாளடைவில் பிற பகுதிகளில் பரவும்போது அந்தந்த இடங்களில் அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிகிறது. இப்போது பெங்களூரு, ஹைதராபாத், மதுரை போன்ற நகரங்களில் அதிக பாதிப்பு ஏற்படுவது இதனாலும் இருக்கலாம்.

Lockdown
Lockdown
Pixabay

சமூகப் பரவல் ஏற்பட்டது வெளியே தெரிந்தால் கெட்ட பெயர் ஏற்படும் என்று அரசு தயக்கம் கொள்ளத் தேவையில்லை. அமெரிக்கா போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளிலேயே சமூகப் பரவலைத் தடுக்க முடியவில்லை. நம் நாட்டிலும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மரண எண்ணிக்கையை அரசின் நடவடிக்கைகள் பெருமளவு கட்டுப்படுத்தி உள்ளன.

மிக அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த நோய் கூடிய விரைவில் நமது நாட்டை விட்டுச் சென்றுவிடும் என்ற பாசிட்டிவ் செய்தியும் நமக்கு வருகிறது. இந்த நோய் காரணமாக இந்தியாவில் 25,000 நபர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.

நமது நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் 1.5 லட்சம் நபர்களும், தற்கொலை செய்து கொள்வதால் 1.35 லட்சம் நபர்களும் ஹெச்.ஐ.வி தொற்று போன்ற நோய்களால் 80,000 நபர்களும் மரணமடைகின்றனர். மேலும் ஒவ்வோர் ஆண்டும் டெங்கு போன்ற பலவித காய்ச்சல் காரணமாகப் பல ஆயிரம் மக்கள் மரணமடைந்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மரணமடைந்த 25,000 நபர்களில் பலர் வேறு பல உடல் உபாதைகள் காரணமாக மரணம் அடைந்திருக்கலாம்.

Covid-19
Covid-19
Martin Sanchez on Unsplash

தமிழகத்தில் அரசு அறிவித்த கணக்கீட்டின் படி 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் சமூகப் பரவல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இதை உணர்ந்து அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பெருமளவில் உதவி செய்யும். இன்னும் 10 நாள்களில் இந்தத் தொற்று குறையும் என்று கூறுவதைவிட அறிவியல் பூர்வமாக அரசு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் மக்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

Lab Tests
Lab Tests
Drew Hays on Unsplash

மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல இடங்களில் மேற்கொண்டுவரும் பரிசோதனைகளை விரைவில் முடிக்க வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவின்படி நோய்த்தொற்றை எதிர்ப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெளிவான வலியுறுத்தல்களை மாநில அரசுகளுக்குத் தெரிவிப்பது மிக முக்கியமானது. மத்திய மாநில அரசுகளும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து இந்த நோய்த் தொற்றுக்கு முடிவுகட்டும் என்பதே ஒவ்வோர் இந்தியனின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றும் கடமை அரசுகளிடமே உள்ளது.

- ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு