Published:Updated:

கொரோனா: `சித்த மருந்து 'இம்ப்ரோ'வை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்!' - வழக்கும் விசாரணையும்

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

'இம்ப்ரோ' மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் பாரம்பர்ய சித்த மருத்துவத்தையும் பயன்படுத்த வேண்டும் என சித்த மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

madurai hc
madurai hc

இந்த நிலையில் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனு, இப்போது கவனம் பெற்றிருக்கிறது. "கொரோனோவைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாயப் பொடி மருந்தைக் கண்டுபிடித்துள்ளேன். 'இம்ப்ரோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொடியைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, சாப்பிடுவதற்கு முன்பு தினமும் இரு வேளை குடித்துவந்தால், கொரோனா நோயிலிருந்து விடுபட கைகொடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. சீனாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பர்ய மருத்துவமே உதவியது.

எனவே, பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. கொரோனா நோய் சிகிச்சையில் பங்களிக்கக்கூடிய இந்தச் சித்த மருந்தான மூலிகைப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு, ``மனுதாரரின் மருந்தை நிபுணர் குழுவினர் பரிசோதித்தனர். அதில், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனவே, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது'' என்றனர். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். நாடு முழுவதும் சித்த மருத்துவம் குறித்த பரிந்துரை 30,000-த்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா
கொரோனா

இதுகுறித்து சித்த மருத்துவர் மதுரை சுப்பிரமணியன் நம்மிடம்,``கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் தகவல்களைக் கொண்டு சென்றேன். இதுபோல் பல பரிந்துரைகள் அரசுக்கு இருந்ததால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது நீதிமன்றம் மூலம் சென்றதால் என்னுடைய மருந்தை ஆய்வு செய்து தற்போது நுண்ணுயிரிகளைக் கொல்லும் சக்தி உள்ளதாகப் பரிந்துரை செய்துள்ளனர். வைராலஜி ஆய்வுகளுக்குச் சித்த மருந்தை உயர்மட்டக் குழு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. வழக்கின் முடிவில் இது குறித்துத் தெரியவரும். என் மருந்தில் வைரஸ்கள் மாற்றம் அடைவதைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி உள்ளது. எனவே, அரசின் முழுமையான ஆய்வுக்குப் பின் பயன்படுத்த வாய்ப்புள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு