கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, பூமிப் பந்து தன் அச்சிலிருந்து மாறி மாற்றுப் பாதையில் வலம் வருகிறதோ என்று தோன்றும் அளவுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரோக்கியம் தொடங்கி பொருளாதாரம் வரை அனைத்திலும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கோவிட்-19 காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோர் தங்கள் திட்டத்தைத் தள்ளிப்போட்டு வருகின்றனர். இந்தியா முதல் அனைத்து நாடுகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியதையடுத்து அமல்படுத்தப்பட்ட லாக்டௌன் உள்ளிட்ட நடவடிக்கைகளால் வேலையிழப்பு, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சரிந்த வர்த்தகம் ஆகியவை ஏற்பட்டன. இதனால் அந்நாட்டுப் பொருளாதாரமும் சரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொருளாதாரச் சரிவால் பாதிக்கப்பட்ட பல தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தைத் தள்ளி வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு அரசு குழந்தைக்குத் திட்டமிடும் பெற்றோருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், "பொருளாதார வீழ்ச்சியால் பல தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளி வைத்துள்ளதாக சுகாதாரத்துறை மூலம் அரசுக்குத் தகவல் கிடைத்தது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க தம்பதியருக்கு உதவ அரசு திட்டமிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் காரணமாகப் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் தம்பதிக்கு உதவித்தொகை வழங்கப்படும். எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். கோவிட்-19 பாதிப்பால் குறைவான இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது சிங்கப்பூரில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டால் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் என்ற எண்ணம், கொரோனா காலத்தில் கருச்சிதைவு ஏற்படும் என்ற பயம், வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் குழந்தையை வளர்க்க சிரமம், குழந்தை பிறக்கும்போதே அதற்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் ஆகிய காரணங்களால் இந்தியாவிலும் தமிழகத்திலும் தம்பதியர் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தள்ளிப்போடுகின்றனர். பொருளாதார காரணம் தவிர, மருத்துவக் காரணங்களுக்காகக் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தள்ளிப்போட வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை.