Published:Updated:

தேசியமயமான தனியார் மருத்துவமனைகள்... கொரோனா அதிரடி நடவடிக்கையில் ஸ்பெயின்! #Covid-19

கொரோனா
கொரோனா

ஸ்பெயினில் அவசர பிரகடன நிலை பிறப்பிக்கப்பட்டு இருந்த கொரோனா நோய் பாதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பா கண்டத்தில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில்தான் இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனாவின் தாக்கம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இதுவரை கொரோனாவால் ஸ்பெயினில் 533 பேர் இறந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றின் காரணமாக அந்நாட்டு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

corona
corona

நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதால் ஸ்பெயினில் அவசர பிரகடன நிலை பிறப்பிக்கப்பட்டு கொரோனா நோய் பாதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்களைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்பெயின் அரசு, அந்நாட்டில் தொற்றுநோய் சிகிச்சையை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளைத் தற்காலிகமாக தேசியமயமாக்கி உள்ளது. `இதன் மூலம் நோய் பாதிப்பைக் கணிசமாகக் குறைத்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம். அதிகளவு மருத்துவமனைகளும் அதிகளவு மருத்துவர்களும் மக்களுக்கு மருத்துவம் பார்க்க இருக்கும்போது நோயின் தாக்கத்தை நிச்சயம் குறைக்க முடியும். அந்த முயற்சியைத்தான் தற்போது மேற்கொண்டு வருகிறோம்' என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஃபெர்னாடோ கிராண்டே மர்லாஸ்கா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

corona virus
corona virus

பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வர, ஆனால் அதை சமாளிக்கத் தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாமல் திணறி வரும் சூழல் நிலவி வருவதால், ஸ்பெயின் சுகாதாரத்துறை நான்காம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களையும் கொரோனா நோய் சிகிச்சையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நோய் பாதிப்பைக் குறைத்துக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

`இந்தியாவுக்கு வரத் தடை..!' - கொரோனா பீதியால் பிலிப்பைன்ஸில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள்

ஸ்பெயின் நாட்டின் இந்த முயற்சி, உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனாவின் தாக்கம் உலக நாடுகள் பலவற்றில் இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கையை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு