Election bannerElection banner
Published:Updated:

பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம்; அலட்சியம் மறுபக்கம்! எப்படி இருக்கிறது சென்னை? #Covid19 #Corona

சென்னையில் கொரோனா
சென்னையில் கொரோனா

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா குறித்த அச்சம் பலரிடையே பரவியிருக்கும் சூழலில், சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சிலவற்றின் தற்போதைய நிலையை அறிய, நேற்று நேரில் சென்று பார்த்தோம். அதன் தொகுப்பு இது.

சீனாவில் தொடங்கிய கொரோனா புயல் சென்னையையும் அடைந்துவிட்டது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலான பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடல் முதலானவற்றை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா குறித்த அச்சம் பலரிடையே பரவியிருக்கும் சூழலில், சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சிலவற்றின் தற்போதைய நிலையை அறிய, நேற்று நேரில் சென்று பார்த்தோம். அதன் தொகுப்பு இது.

ஜார்ஜ் கோட்டை
ஜார்ஜ் கோட்டை
ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா?!

* சென்னை ஜார்ஜ் கோட்டையில் வாயிலில் காவலர்கள், அதிகாரிகள் கோட்டைக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் கிருமி நாசினியைத் தெளிப்பதோடு, வாகன ஓட்டிகளின் கைகள், கார் ஸ்டியரிங் முதலானவற்றிலும் தெளிக்கின்றனர். சட்டமன்றத்திற்கு வந்த எம்.எல்.ஏ-க்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனையிடப்பட்டு, சட்டமன்றத்துக்குள் அனுப்பப்படுகின்றனர். தலைமைச் செயலகத்துக்கும், சட்டமன்றத்தில் பார்வையாளர்களாக பங்கேற்க வருபவர்களுக்கும் தலைமைச் செயலகத்தின் சோதனைச் சாவடியிலேயே அனுமதி நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

* சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் அரசு அதிகாரிகளாலும், அரசு ஊழியர்களாலும் பயன்படுத்தப்படும் பொது வளாகம். நாம் அங்கு சென்போது, கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாத இடமாகக் காட்சியளித்தது எழிலகம். அரசுப் பணியாளர்களின் உடல் வெப்பத்தைக் கணக்கிட தெர்மல் ஸ்கேனரோ, கைகளுக்கு சேனிடைசரோ எதுவும் இல்லாமல் மிகச் சாதாரணமாக, அதிக மனித நடமாட்டம் உள்ள இடமாக இருந்தது எழிலகம்.

எழிலகம்
எழிலகம்

அந்தக் கட்டடத்தின் சார்ஜண்ட், செக்யூரிட்டி முதலானோரிடம் பேசினோம். "கொரோனா குறித்த விழிப்புணர்வுக்காக பொது சுகாதாரத்துறை சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றனர். "எழிலகத்தின் பொறுப்பு, வருவாய் நிர்வாகத்துறை ஆணையரின் கைவசம் இருக்கிறது. சுகாதாரத்துறையின் முன்னாள் செயலர் ராதாகிருஷ்ணன்தான் தற்போது வருவாய் ஆணையராக இருக்கிறார். அவரே எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடாமல் இருக்கிறார். அதனால் எழிலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை" என்றார் எழிலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.

* கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குச் சென்றபோது, பொது மக்கள் அதிகளவில் நூலகத்தைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. அண்ணா நூலகத்திலும், எந்தவித பரிசோதனையும் இல்லாமல் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூலகத்தின் தரை தளத்திலும், முதல் தளத்திலும் போட்டித் தேர்வுகளுக்காகவும், சொந்த புத்தகங்கள் படிப்பதற்காகவும் பலர் ஒரே இடத்தில் கூடியிருந்தது அதிர்ச்சியளித்தது. மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசு அறிவிப்பு, அலட்சியமாக மீறப்பட்டிருந்தது. கழிப்பிடங்களிலும் சேனிடைசர் முதலானவை வைக்கப்படவில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், அடையார், கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி முதலான பகுதிகளில் இருந்து வழக்கமாக குவியும் முதியோர் என அண்ணா நூலகம் கொரோனாவுக்குப் பாதுகாப்பற்ற இடமாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 1000 முதல் 1500 பேர் வரை கூடும் அண்ணா நூலகத்துக்குத் தற்போது அரசு அளித்துள்ள விடுமுறையைப் பயனுள்ள முறையில் கழிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வருவது மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது.

* மத்திய வர்க்கக் குடும்பங்கள் அதிகமாகக் கூடும் தி. நகரின் ரங்கநாதன் தெரு, மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கொரோனா அச்சத்தால், வழக்கமான கூட்டம் வரவில்லை என்று அப்பகுதியின் கடைக்காரர்கள் வருத்தமாகக் கூறினர். "வழக்கமா 10 சவாரி ஓட்டுவோம்... இப்போ 3 சவாரி வர்றதே பெரிய விஷயமா இருக்கு" என்று புலம்பினார் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியின் மற்ற தெருக்களிலும், மக்கள் நடமாட்டம் வழக்கத்துக்கு மாறாக குறைவாகவே இருந்தது.

ரங்கநாதன் தெரு
ரங்கநாதன் தெரு

* எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப மூடப்பட்டிருந்தது. எனினும், அதே வளாகத்தில் கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்டிருந்தது. அண்ணா நூலகத்தைப் போலவே, கன்னிமாரா நூலகத்திலும் எவ்வித சுகாதாரம் சார்ந்த பரிசோதனையும் இல்லாமல், மக்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போதைய சூழல் குறித்த எந்தவித அறிகுறியும் இல்லாமல், வழக்கம்போல செயல்பட்டு வருகிறது கன்னிமாரா நூலகம்.

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழக்கம் போல அதிகளவிலான மக்கள் நடமாட்டத்தையும், கூட்டத்தையும் கொண்டிருந்தது. பயணிகள் பலரும் தங்கள் முகத்துக்கு மாஸ்க் அணிந்திருந்தனர். ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் அதிகளவில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் கைகளில் உறை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை, தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அரசுப் பணியாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்தனர்.

`மால்கள் முதல் மெடிக்கல் வரை..!'  - சென்னை எப்படி இருக்கிறது? #SpotVisit #Corona

இந்த முகாமில் சென்னைக்கு வரும் பயணிகள் காய்ச்சல், சளி, இருமல் முதலான அறிகுறிகள் இருந்தால், அவர்களைப் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே அறிவிப்புகளை வெளியிடும்போது, பயணிகள் ஒவ்வொருவரையும் இந்த முகாமில் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. கொரோனா குறித்த விழிப்புணர்வுக்காக தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கையேடுகள் விநியோகிக்கப்படுகின்றன. பரிசோதனைக்காக தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்படுகிறது. 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர் எனக் கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை, ஒருவர் கூட 37 டிகிரி செல்சியஸ் காய்ச்சலோடு காணப்படவில்லை என அங்கு பணிபுரியும் அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை சென்ட்ரலில் மக்கள் கூட்டம் கூடுவதைக் குறைக்க, தெற்கு ரயில்வே பிளார்பார்ம் டிக்கெட் விலையை 10 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

பெருவெள்ளம், வர்தா புயல், தானே புயல், கஜா புயல் முதலானவற்றைச் சந்தித்த தமிழக அரசு, மீண்டும் ஒரு பேரிடருக்குத் தயாராகிறது. கடந்த காலங்களில், அரசு மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், சென்னை ஒரு சமூகமாகத் தன்னைக் காத்துக்கொண்டது. தற்போது அரசு முன்னெச்சரிக்கையாக எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்ற போதும், மக்கள் கொரோனாவுக்கு எதிராக, பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு