Published:Updated:

`கிருமிநாசினியை மக்கள் மீது தெளிக்கலாமா; விளைவுகள் என்ன தெரியுமா?!’-எச்சரிக்கும் சுகாதாரத்துறை

பரேலியில் மக்கள் மீது ரசாயனம் தெளிக்கப்பட்ட காட்சிகள்
பரேலியில் மக்கள் மீது ரசாயனம் தெளிக்கப்பட்ட காட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் மக்களை தூய்மை செய்கிறோம் என்ற பெயரில் மக்களை சாலையில் அமரவைத்து ரசாயனங்கள் மூலம் குளிப்பாட்டியது பெரும் சர்ச்சையானது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அறிவிப்பு கூலித்தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்து பேருந்து, ரயில்நிலையங்களை வந்தடைந்தனர். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் தடைபட்டிருந்ததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து பல மாநிலங்களில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே புறப்பட்டனர்.

மோடி
மோடி

உ.பியில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல கிலோமீட்டர்கள் நடைபயணமாக வந்த மக்களை தூய்மை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களை சாலையில் அமரவைத்து ரசாயனங்கள் மூலம் குளிப்பாட்டியது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த அம்மாநில உயரதிகாரிகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை தூய்மை செய்து அனுமதிக்குமாறு கூறினோம். ஆர்வக்கோளாறில் மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

`ரசாயன திரவத்தால் மக்களைக் குளிப்பாட்டுவதா?’ - பரேலி வீடியோவால் கொதித்த பிரியங்கா #corona

மக்கள் மீது கிருமிநாசிகளை தெளிப்பது உடல்ரீதியிலாகவும், உளவியல் ரீதியிலாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``மக்கள் மீது கிருமிநாசிகளை தெளிக்கும் விஷயங்கள் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், சில கிராமப்புற பகுதிகளில் இதுபோன்று நடப்பதாக கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தனிநபர் மீதோ அல்லது ஒரு குழுக்களின் மீதோ கிருமிநாசிகளை தெளியுங்கள் என பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் மீது கிருமிநாசிகளை தெளிப்பது உடல்ரீதியிலாகவும், உளவியல் ரீதியிலாகவும் தீங்கு விளைவிக்கும்.

கொரோனா
கொரோனா

தனிநபர்களின் மீது குளோரின் தெளித்தல் சருமம் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டு இரைப்பையில் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் அவை சுவாசக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்மையில் கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு குறித்து தவறான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய வழிமுறைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு