Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: `லாக்டெளன் அல்ல; லாக்டெளன் போன்ற கட்டுப்பாடுகள்!’ - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டெளன் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாக்டெளன் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் லாக்டெளன் காலத்தில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தினமும் 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதோடு, சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேடர்கள்கூட போதிய அளவில் இல்லாமல் இருக்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்றின் அளவு குறையவில்லை. எனவே, மீண்டும் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வந்தது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார்.

வாகனக் கண்காணிப்பில் போலீஸார்
வாகனக் கண்காணிப்பில் போலீஸார்

இதனால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவித்தனர். இந்தநிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை இரவு ஆற்றிய உரையில் பல முக்கியக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார். `உத்தவ் தாக்கரே மீண்டும் பொதுமுடக்கத்தைதான் அறிவிப்பார்’ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், `பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது’ என்று தெரிவித்தார். ஆனால் பொதுமுடக்கத்தில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மகாராஷ்டிரா: மீண்டும் லாக்டெளன் அச்சம்... மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள்

``புதன் கிழமை (14-ம் தேதி) இரவு 8 மணியிலிருந்து மே மாதம் ஒன்றாம் தேதி வரை இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். இந்தத் தடை உத்தரவு காலத்தில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வரக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் கிளாஸ்கள், சலூன் கடைகள், ஸ்பா, அழகுநிலையங்கள் போன்றவை மே 1-ம் தேதி காலை 7 மணி வரை அடைக்கப்பட்டிருக்கும். மாநில அரசு சார்பில், இந்தக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மூன்று கிலோ கோதுமையும், இரண்டு கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும்.

சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம், பொழுதுபோக்குப் பூங்கா, உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்கள் அடைக்கப்பட்டிருக்கும். சினிமா, டி.வி சீரியல்கள் மற்றும் விளம்பரப் படப்பிடிப்புகளும் வரும் 1-ம் தேதி வரை தடைசெய்யப்படும். அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர எஞ்சிய அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும். ரயில் மற்றும் பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனால் அதில் அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் முழுமையாக அடைக்கப்படும். வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

தற்போது முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் அதிக அளவில் தேவைப்படுவதால், சமீபத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் கொரோனாவை எதிர்த்துப் போராட அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் முன்வர வேண்டும். அண்டை மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வர விமானப்படை விமானங்களை கொடுத்து உதவும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொள்வேன்.

வழக்கமாக, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தான்வருகிறோம். ஆனாலும் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை தள்ளிவைத்திருக்கிறோம். கொரோனா நோய்க்கான சோதனையை அதிகரித்து, படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறோம். கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டுவிடலாம் என்று நம்பினோம். ஆனால் மீண்டும் அதை எதிர்த்துப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். மாநில அரசின் இந்த முடிவால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொரோனா: `புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளிவைத்த மகாராஷ்டிரா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு