Published:Updated:

சமூக இடைவெளியோ, மருத்துவ வசதிகளோ இல்லை... சிறைச்சாலைகளுக்குள் முடங்கியிருக்கும் 4.78 லட்சம் பேர்!

சிறை நெருக்கடி மீதான சிறை சீர்திருத்தங்களுக்கான தேசிய மன்றத்தின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது

சமூக இடைவெளியோ, மருத்துவ வசதிகளோ இல்லை... சிறைச்சாலைகளுக்குள் முடங்கியிருக்கும் 4.78 லட்சம் பேர்!

சிறை நெருக்கடி மீதான சிறை சீர்திருத்தங்களுக்கான தேசிய மன்றத்தின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது

Published:Updated:

உலகில் வேறு எந்த நாடுகளையும்விட இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வெளியே ஒரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்கள் சிறைவாசிகள்.

சிறைகளுக்கு வெளியே கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முயலும் அதே வேளையில், சிறைக் கதவுகளுக்கு உள்ளேயும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்தச் சமூகத்துக்கு இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் சிறைகள் மிக மோசமான இடநெருக்கடியால் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சிறை புள்ளிவிவர அறிக்கை 2019-ன்படி, இந்தியாவில் சுமார் 1,300 சிறைகளில் 4.78 லட்சம் சிறைவாசிகள் இருக்கின்றனர். இதில் 70 சதவிகிதத்தினர், நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இஸ்லாமியச் சமூகத்தினரும் இதில் அதிகளவில் இருக்கிறார்கள்.

இந்தியச் சிறைகள் இடநெருக்கடி உள்பட பல்வேறு பிரச்னைகளால் திணறிக் கொண்டிருக்க, கடந்த ஆண்டு கோவிட்-19 பரவத் தொடங்கியபோது, சிறைகளில் தொற்றுப் பரவல் குறித்த அச்சமும் பதற்றமும் எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து, மார்ச் 2020-ல் உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இப்பிரச்னையை விசாரித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து மாநில அளவில் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர், உள்துறைச் செயலர், சிறைத்துறை டி.ஜி.பி ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. தற்காலிக பிணை, பரோல் மூலம் யாரெல்லாம் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இந்தக் குழு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த உத்தரவின் மூலம் சுமார் 60 ஆயிரம் சிறைவாசிகள் தற்காலிக பிணை, பரோல் மூலம் விடுவிக்கப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைவாசிகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவிகிதம் வரை குறைந்தது. கொரோனா முதல் அலையின் போது விடுவிக்கப்பட்ட இந்தச் சிறைவாசிகளில் 90 சதவிகிதம் பேர் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்கள் சிறைகளுக்குத் திரும்பிவிட்டனர்.

சிறைவாசிகள்
சிறைவாசிகள்

கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், சிறைவாசிகள் மீண்டும் சிறைகளுக்குத் திரும்பியிருப்பது மீண்டும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

1,567 சிறைவாசிகளும், சிறை ஊழியர்களும் இந்த இரண்டாவது அலையில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பின் இணையவழி கண்காணிப்பின் புள்ளிவிவரம் கூறுகிறது; கடந்த மே 2020 முதல் ஒட்டுமொத்தமாக 19,724 சிறைவாசிகளும், சிறை ஊழியர்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.

சிறையின் கொள்ளளவு 118 சதவிகிதத்தைத் தொட்டுவிட்ட நிலையில், தனிநபர் இடைவெளி என்பது சாத்தியமே இல்லாத நிலை சிறைகளில் உருவாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் சிறைகளில் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கைது எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; அதாவது கைது செய்யாமல் வழக்கை நடத்த வேண்டும். ஒருவேளை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்குரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகளை ரிமாண்ட் செய்து மட்டுமே வழக்கை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுக்கள் சிறைவாசிகளைப் பரிசோதித்து இடைக்காலப் பிணையில் அவர்களை விடுவிக்க வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா பரவலில் போது, இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகளில் 90 சதவிகிதம் பேர் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிறைக்குத் திரும்பிவிட்ட நிலையில், இடைக்காலப் பிணையில் உடனடியாக அவர்களை மீண்டும் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இடைக்காலப் பிணை, பரோல் ஆகியவற்றுக்குத் தகுதிபெற்று சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சிறைவாசிகளில் பெரும்பாலானோர் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அஞ்சுகின்றனர். சமூகம் இவர்களை அணுகும் விதம் ஒருபுறம் என்றாலும், கோவிட்-19 சூழல் மோசமாக இருப்பதால் தங்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் முதன்மையாக இருக்கிறது. எனவே, முறையான மருத்துவ வசதிகள், உடனடி சிகிச்சை, தொடர்ச்சியான பரிசோதனைகள் ஆகியவற்றைச் சிறை அதிகாரிகளுக்கும், சிறைவாசிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு எந்தச் சிரமமும் ஏற்படாத வகையில் சிறையிலிருந்து அவர்களை வாகனங்களில் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிறைவாசிகளுக்கும் தடுப்பூசி போடுவது என்பது இந்த நெருக்கடியான சூழலில் முக்கியமான ஒன்று. சிறை ஊழியர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்ட நிலையில், நாடுமுழுவதும் சிறைகளில் கொரோனா பரவலைத் தடுக்க சிறைவாசிகளுக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.

அந்த வகையில், சிறைவாசிகள் மறக்கப்பட்ட மனிதர்கள் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism