Published:Updated:

`கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு உடனடியாக உதவுங்கள்!' - உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme Court Of India
Supreme Court Of India

`மக்கள்தொகை அதிகமான இந்தியாவில் எத்தனை குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் பசியினால் இறக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிப்பது கடினம்’.

``கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் தேவைகளுக்கும் பாதுகாப்புக்கும் மாநிலம் தோறும் இருக்கிற `மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலகு’ பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு நீங்கள் எந்த உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை" என்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சில தினங்களுக்கு முன்னால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், `கொரோனா இரண்டாவது அலையின்போது ஏப்ரல் ஒன்றாம் தேதியில் ஆரம்பித்து இதுவரை 577 குழந்தைகள் நாடு முழுவதும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பெருந்தொற்றையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பின்மை தொடர்பான அவசர விண்ணப்பத்தை வழக்கறிஞர் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

குழந்தை -Representational image
குழந்தை -Representational image

இந்த அவசர விண்ணப்பத்தை விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனாவையொட்டி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சனிக்கிழமை மாலைக்குள் தேசிய குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (NCPCR) `பால் ஸ்வராஜ்’ போர்ட்டலில் பதிவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. தவிர, கடந்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பிறகு ஆதரவிழந்த குழந்தைகளைப்பற்றிய தகவல்களை வழங்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அமர்வு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு பெருந்தொற்றுக் காலத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பதில் நமக்கு முன் அனுபவம் இல்லை. இதனால், குழந்தைகள் எளிதாக பாதித்துவிட வாய்ப்பிருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில், மக்கள்தொகை அதிகமான இந்தியாவில் எத்தனை குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் பசியினால் இறக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிப்பது கடினம் என்று வேதனை தெரிவித்திருக்கிற இந்த நீதிபதிகள் அமர்வு, தெருக்களில் பாதுகாப்பில்லாமலும் உணவில்லாமலும் பரிதவித்துக்கொண்டிருக்கிற குழந்தைகளின் வேதனையைத் தாமதமின்றி தீர்த்து வையுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

முதல்வர் மு.க ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின்
31 மருத்துவர்கள், ஆன்லைனில் கோவிட் ஆலோசனை... கோவை நண்பர்களின் அசத்தல் முயற்சி!

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ``கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை வட்டியோடு அந்தக் குழந்தையிடம் வழங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார். இது தவிர, கொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு முன்னுரிமை தரப்படும் என்றும், இந்தக் குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு வரைக்குமான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், கொரோனா தொற்றினால் வாழ்க்கைத்துணையை இழந்து குழந்தையோடு இருக்கிற தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், கொரோனாவால் பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகையாக, அவர்களின் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்" என்றும் அறிவித்திருக்கிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களுடைய கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவை மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு