Published:Updated:

பொறுப்பில்லாத மக்கள்... 3-ம் நிலையில் கொரோனா: மே 3-க்குப் பிறகும் தொடருமா 144..!?

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்

மத்திய அரசின் பட்டியலில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தொழில், போக்குவரத்து தளர்வுகள் இன்று முதல் அமலாகியுள்ளன. தமிழகத்தில் இந்த தளர்வு இன்னும் அமலாகவில்லை. ஏப்ரல் 20-ம் (இன்று) தேதிக்குப் பிறகு என்னாகும் தமிழ்நாடு?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடெங்கும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதார, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சில துறைகளுக்கு மட்டும் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு தளர்வு அளிக்கப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, தளர்வு அளிக்கப்படும் துறைகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகமும் வெளியிட்டது.

download

மத்திய அரசின் இந்த தளர்வுகள், இன்று (ஏப்ரல் 20-ம் தேதி) முதல் அமலுக்கு வரும் நிலையில், தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளவேண்டிய தளர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான், ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு தளர்த்தவேண்டிய துறைகள் குறித்து ஆலோசனை அளிக்க ஒரு நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் செயல்படும் இக்குழுவில் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் உட்பட 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டாலின் Vs எடப்பாடி: சூடு பிடிக்கும் அறிக்கைப் போர்கள்! #VikatanSpecials

மூன்றாம் நிலையில் கொரோனா?

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலை ஒட்டி, இக்குழுவும் தளர்வுசெய்யக் கூடிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், இதர சேவைகள் பட்டியலைத் தயார்செய்து வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகத்திலுள்ள 17 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், எந்தக் கட்டுப்பாடுகளையும் தளர்வுசெய்யும் நிலையில் தமிழக அரசு இல்லை என்பதே நிபுணர் குழுவின் எண்ணமாக இருக்கிறதாம். தங்களது பரிந்துரையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இக்குழு அளிக்கவுள்ளது. இதன்படி, முதல்வர் தன்னுடைய இறுதி முடிவை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

“தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 1,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று கண்டறியப்பட்டவர்களில் 65 பேருக்கு தொற்று எங்கேயிருந்து யார் மூலமாகப் பரவியது என்கிற விவரம் இல்லை. இது, மூன்றாம் நிலையில் கொரோனா பரவுவதற்கான அறிகுறி. ஒரு பகுதியில் அதிகப்படியான கொரோனா கேஸ்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நான்கு நாள்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் புதிய கேஸ்கள் பதிவானாலோ, அப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். இதன்படி, தமிழகத்தில் 17 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பட்டியலில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. மற்ற மாவட்டங்களில் தளர்வு ஏற்படுத்தினாலும் இம்மாவட்டங்களில் மட்டும் அத்தளர்வுகள் பொருந்தாது.

எந்தத் தளர்வும் இருக்காது!

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியிருக்கும்போதே, கொரோனா தொற்று கண்மூடித்தனமாகப் பரவும் சூழலில், இதையும் தளர்த்திவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் என்பது நிபுணர்களின் கருத்து. ஆகவே, இப்போதிருக்கும் கட்டுப்பாடுகளை ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகும் தொடர வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள் எதுவும் தமிழகத்திற்குப் பொருந்தாது” என்றவரிடம், “சிறு கடைகள், அமைப்புசாரா தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுமே, அரசு மாற்று ஏற்பாடு ஏதேனும் வைத்துள்ளதா?” என்றோம்.

ஊரடங்கு
ஊரடங்கு
பத்திரிகையாளர்கள் இருவருக்குக் கொரோனா தொற்று! - தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு பாசிடிவ்

“ஏற்கெனவே, மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலாகியிருக்கும் காலம் வரை அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி, தேவையான ரேஷன் பொருள்கள் உட்பட, அனைத்து உதவிகளையும் அரசு ஏற்கெனவே செய்துள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்கும் சிறு கடைகள் இன்றும் திறந்துள்ளன. மற்ற கடைகள் எல்லாவற்றையும் திறந்துவிட்டால், பொதுமக்களிடம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. அதேவேளையில், வேளாண் தொடர்பான பணிகள் தொய்வின்றி நடைபெறவும் சமூக விலகல் சாத்தியமாகும் மற்ற தொழில்களை மட்டும் தொடங்கவும் ஆலோசனை நடைபெறுகிறது. இம்முடிவுகளை முதல்வரே இன்று அறிவிப்பார்” என்றார். “பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்?” என்றோம்.

“மே 3-ம் தேதிக்கு முன்னதாக பொதுப் போக்குவரத்தைத் தொடங்கும் திட்டமேதும் இல்லை. மத்திய அரசின் தளர்வுப்படி, இருசக்கர வாகனத்தில் ஒருவர் பயணிக்கலாம் என்று கூறியுள்ளனர். இத்தளர்வை தமிழக அரசு அமல்படுத்தாத சூழலில், ஏற்கெனவே அமலாகியுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்” என்றார்.

ஊரடங்கு என்பதையே மறந்து சுற்றித்திரியும் விருதுநகர் மக்கள்
ஊரடங்கு என்பதையே மறந்து சுற்றித்திரியும் விருதுநகர் மக்கள்

தமிழகத்தில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏதுமில்லை என்பதால், இம்மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான கடைகளை வியாபாரிகள் கடந்த சில நாள்களாக திறக்கத் தொடங்கினர். குறிப்பாக, புதுக்கோட்டையில் துணிக்கடை முதற்கொண்டு நிறைய வியாபார நிறுவனங்களும் திறந்திருந்தன. இன்றிலிருந்து தளர்வு ஏற்படும் என்கிற எண்ணத்தில் மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் அசால்ட்டாக பவனிவர ஆரம்பித்தனர். சூழல் சீரியஸாவதை உணர்ந்த அரசு, மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும், யாரும் விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று தொடங்கவிருந்த ரயில்வே அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளின் இயக்கத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது.

தென்னக ரயில்வேயின் சுற்றறிக்கை
தென்னக ரயில்வேயின் சுற்றறிக்கை

பொறுப்பில்லாத மக்கள்

மூன்றே நாள்களில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிடும் என சில நாள்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் கெடு முடியும் நாளான நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வீரியமாவதைத் தொடர்ந்து, நேற்று இரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி டெலிபோனில் ஆலோசனை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரிகள், அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி
நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி

“தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்துதான் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சில தினங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த ஐபிஸ் அதிகாரி, காஞ்சிபுரத்தில் நடைபெறும் சுகாதாரப் பணிகளை ரகசியமாகக் கண்காணிக்க சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தாண்டியபோது, இருசக்கர வாகனங்களில் சில இளைஞர்கள் ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை உற்சாகமாகக் கடந்துள்ளனர். அவர்களை விரட்டிச் சென்று வழிமறித்தவர், “எங்கேயிருந்து வருகிறீர்கள்? இப்படி ஒரே பைக்கில் இரண்டு பேர் செல்ல யார் அனுமதி கொடுத்தது?” என்று விசாரித்துள்ளார்.

அதற்கு அவர்கள், கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்வதாகவும், தங்களை யாரும் தடுத்துக் கேட்கவில்லை என்பதால் அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும் கூறிவிட்டு சிட்டாகப் பறந்துள்ளனர். இச்சம்பவத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட் போட்ட அந்த அதிகாரி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு இந்த லட்சணத்தில்தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்று எழுதிவிட்டார். பிரதமருடனான முதல்வரின் டெலிபோன் பேச்சுவார்த்தையில் இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

`ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம்!' - உள்துறை அமைச்சகத்தின் மாற்றியமைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

தமிழகத்தில், பெரும்பாலான பொதுமக்கள் கொரோனா தொற்று விவகாரத்தை சீரியஸாக அணுகவில்லை. பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர் என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு. ஊரடங்கு உத்தரவை தீர்க்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய தமிழக அரசு, மெத்தனமாகச் செயல்படுவதாக நினைக்கிறார். இதுகுறித்தெல்லாம் பேசப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் உண்மை நிலை கவலைகொள்ளும் விதத்தில் இருப்பதாகக் கவலை தெரிவித்த மோடி, தமிழக அரசு எதிர்பார்த்துள்ள 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை விரைந்து அனுப்பிவைப்பதாகவும், தீவிரமாகக் களப்பணியாற்றும்படியும் கூறியுள்ளார். இப்போதைக்கு தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்பது பிரதமரின் ஆலோசனை. மே 3-ம் தேதியோடு ஊரடங்கு முடிவுற்றாலும், அதற்கு அடுத்த ஒருமாதத்திற்கு 144 தடை உத்தரவை தமிழகத்தில் நீடிப்பது குறித்தும் பேசப்பட்டது. முதல்வர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்” என்றனர்.

சென்னையில் மீன் வாங்கத் திரண்ட பொதுமக்கள்
சென்னையில் மீன் வாங்கத் திரண்ட பொதுமக்கள்

ஏற்கெனவே, சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகத்திற்கு வந்து, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. ஆனால், 50 ஆயிரம் கருவிகளை வழங்க வேண்டுமென்று எடப்பாடி கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாம் நிலையாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் தான், ரேபிட் கிட் பரிசோதனையை அரசு துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு அமலாகியிருக்கும் மத்திய அரசின் தளர்வுகள் எதுவும் தமிழகத்தில் அமலாகவில்லை. மே 3-ம் தேதி வரையில் எந்தத் தளர்வும் இல்லாமல் இப்போதிருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதே அதிகாரிகள் வட்டாரத்திலி ருந்து கிடைக்கும் தகவல். இதன்படி பார்த்தால், தமிழகச் சூழலில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஐந்து பேருக்கு மேல் கூட தடைவிதிக்கும் 144 தடை உத்தரவு தமிழகத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவெடுக்கவேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்ன அறிவிக்கப்போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு