Published:Updated:

`மது வருமானத்துக்கு மாற்று வழி தேடச்சொன்ன ரஜினி!' `திட்ட அறிக்கை' தயாரித்த தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் - ரஜினிகாந்த்
தமிழருவி மணியன் - ரஜினிகாந்த்

'மதுக் கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. எனவே, மாற்று வழியில் கஜானாவை நிரப்புங்கள்' என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கிடையில், 'மது வருமானத்துக்கு மாற்றாக, திட்ட அறிக்கையே தயார் செய்து வைத்திருப்பதாக'க் கூறுகிறார் தமிழருவி மணியன்.

'டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது! இதையடுத்து, 'வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற அரசு, எப்படி மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியைத் தர முடியும்' என்று எதிர்க்கட்சிகள் காரசார கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு 40 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளோடு டாஸ்மாக் கடைகளை அவசரம் அவசரமாகத் திறந்தது தமிழக அரசு. ஆனாலும், தவித்துக்கிடந்த மதுப்பிரியர்கள், அரசு விதித்த கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு, கடைதோறும் கூட்டமாகக் கும்மியடித்தனர். இதையடுத்து, கடைகள் திறந்த இரண்டே நாள்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டது உயர் நீதிமன்றம். அதிர்ந்துபோன தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

டாஸ்மாக் திறப்பு
டாஸ்மாக் திறப்பு
என்.ஜி.மணிகண்டன்

இதன் தொடர்ச்சியாக இப்போது, 'டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டுமா, கூடாதா' என்று தமிழகத்தில் பரபர பட்டிமன்றமே நடந்துவருகிறது! சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டரில் 'இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் 'காந்திய மக்கள் இயக்க'த் தலைவருமான தமிழருவி மணியனிடம் பேசினோம்... ''மது வருமானத்தை மறந்து, மாற்று வழிகளில் அரசின் கஜானாவை நிரப்ப வழி தேடுங்கள் என்று ரஜினிகாந்த் ஆலோசனை கூறியிருக்கிறார். மாற்று வழிகளைத் தேட அரசு, சிரமப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே, 2012-ம் ஆண்டே 'மது வருமானத்துக்கான மாற்றுவழி' என்ற பெயரில், துறை வாரியாக எப்படியெல்லாம் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற புள்ளிவிவரங்களை காந்திய மக்கள் இயக்கம் சார்பில், திட்ட அறிக்கையாகத் தயார் செய்திருக்கிறோம். இந்த அறிக்கையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.

அந்தத் திட்ட அறிக்கையின் சாராம்சம் இப்போதைய சூழ்நிலையிலும் மிகப்பொருத்தமாகவே இருக்கிறது. அதாவது, 2012-ம் ஆண்டில் மதுவினால் ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானமாகக் கிடைத்துவந்தது. இப்போது அது, 36,000 கோடியாக... அதாவது இரண்டு மடங்கு தொகையாக உயர்ந்திருக்கிறது.

'பூரண மதுவிலக்கு' கொள்கையை அமல்படுத்தினால், 'இவ்வளவு பெரிய தொகையை அரசு இழக்க வேண்டியிருக்கும். பின் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும்...' என்பதுதான் ஆட்சியாளர்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. அதனால்தான், 'ஊரடங்கை முன்னிட்டு 40 நாள்களாக டாஸ்மாக் கடைகளை மூடி வைத்ததால் 2,300 கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று அரசே இப்போது கணக்கு சொல்லியிருக்கிறது. மதுக் கடைகள் திறக்கப்படாத இந்த 40 நாள்களிலும் தமிழ்நாட்டிலுள்ள பெண்மணிகள் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்ற கணக்கைப் பார்க்க அரசு தவறிவிட்டது. அதாவது, 'மக்களின் மகிழ்ச்சியைவிடவும் எங்களுக்கு வருமானம் மட்டுமே முக்கியம்' என்று அரசு, சொல்லியிருக்கிறது. வருமானத்தைப் பெருக்க அரசுக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
`மதுவுக்கு முன்னோட்டமாக கள்ளுக்கடைத் திறப்பு!' - கேரளாவில் கணநேரத்தில் காலியான பாட்டில்கள்

இப்போதும் குஜராத் மாநிலத்தில் 'மது விலக்கு' அமலில் இருக்கிறது. ஆண்டுதோறும் மது வருவாய் மூலம் தமிழகத்துக்கு கிடைத்துவரும் 36,000 கோடி ரூபாய் அம்மாநிலத்துக்குக் கிடைப்பதில்லைதான். ஆனாலும் வருடம்தோறும் அம்மாநிலம் உபரி பட்ஜெட் போடுகிற அளவுக்கு தன்னிறைவு அடைந்திருக்கிறது. ஆனால், இத்தனை கோடி வருமானமிருந்தும் நாம் வருடம்தோறும் பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகிறோம். காரணம்... அளவுக்கதிகமாக 'மது வருவாய்' கிடைத்துவருவதால், மற்ற வரி வருவாய்களை நாம் மறந்தே போய்விட்டோம். அதனால்தான் இன்றைய தேதிவரை சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையையும் நம் மாநிலத்தின் மீது ஏற்றி வைத்திருக்கிறோம்.

மது வருவாய் இல்லாத, குஜராத் மாநிலத்தில் 100 சதவிகிதம் விற்பனை வரியை முழுமையாக வசூலிக்கிறார்கள். எனவே, வரி வருவாய் சீர்திருத்தம் மற்றும் முழுமையான வரி வசூல் ஆகியவற்றில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். இதுவரையிலும் இங்கே முழுமையான வரி வருவாய் வசூலிக்கப்பட்டதே கிடையாது. வரி வசூல் செய்ய வேண்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்துக்கொண்டு தொழில் நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு நாங்கள் தயாரித்த திட்ட அறிக்கையின் கணக்குப்படி, அப்போது ஒரு யூனிட் மணலின் விலை 300 ரூபாய். அரசிடம் இந்தத் தொகையை செலுத்தி, ஆற்றிலிருந்து ஒரு யூனிட் மணலை எடுத்துச் செல்லும் நபர், சாலைக்கு வந்து இதே மணலை 1,600 ரூபாய் விலைக்கு விற்கிறார். பின்னர் இதே மணல், கடைகளுக்குப் போய் வீடு கட்டுகிறத் தேவைக்காக நம்மிடம் வந்து சேருகிறபோது, ஒரு யூனிட் மணலின் விலை 3 ,000 ரூபாயாக உயர்ந்துவிடுகிறது. அதாவது 10 மடங்கு விலை உயர்வு. இத்தனை லாபமும் தனியார் கைகளுக்குத்தான் போகிறது. ஏன் அரசே, மணல் வியாபாரம் செய்யக் கூடாது? அத்தனை லாபமும் நேரடியாக அரசின் கஜானாவுக்கே போய்ச் சேருமே! மது விற்கிற அரசு, மணல் விற்பது ஒன்றும் கேவலமல்லவே..! இது ஓர் உதாரணம் மட்டும்தான். இதேபோல், கனிம வளத்துறையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தனியார் முதலாளிகள்தான் அரசியல்வாதிகளோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக, முத்திரை வரி வருவாயிலும் அரசு கவனம் செலுத்தலாம். நகர்ப்புறத்தில் அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டு விலைக்கும் சந்தை விலைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வேறுபாட்டால் கறுப்புப் பணம் உருவாவதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் நிலப் பரிவர்த்தனை வழி வகுத்து கொடுத்துவிடுகிறது. எனவே, நிலத்துக்கு சரியான வழிகாட்டு விலையை நிர்ணயித்து, முத்திரை வரியை முறைப்படுத்த வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அடுத்து, மக்களை வாக்குவங்கி அடிமைகளாக வைத்திருப்பதற்காக இரண்டு திராவிடக் கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு கோடிகளை செலவுசெய்து இலவசங்களை வாரி வழங்கிவருகிறார்கள். வேட்டி-சேலையில் ஆரம்பித்து தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என மக்களுக்கு அள்ளிக்கொடுத்து ஏழ்மையைப் போக்கப் போராடுகின்றன இந்தக் கட்சிகள். இது ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்புவது போன்று... ஒருநாளும் மக்களின் வறுமை ஒழியாது. இப்படி கோடிக்கணக்கில் இலவசத் திட்டங்களுக்கு செலவு செய்வதற்காகவே, டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்குப் பதிலாக மதுக் கடைகளை மூடினாலே அந்த எளிய மக்கள் உழைத்துக் கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக நல்வாழ்வு வாழ முடியும்தானே?

'பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்' என்ற உணர்வு உண்மையிலேயே இந்த அரசுக்கு வர வேண்டும். இல்லையென்றால், 'பக்கத்து மாநிலங்களில் கடை திறந்துவிட்டார்கள், மக்கள் நலன் திட்டங்களுக்கு வருமானம் வேண்டும்' என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் சொல்கிற காரணங்கள் எல்லாம் குஜராத் மாநிலத்துக்கும் பொருந்தும்தானே... அப்படியென்றால், அந்த மாநிலத்தில் மட்டும் எப்படி மது விலக்கை அமல்படுத்த முடிகிறது?"

காந்திய மக்கள் இயக்கத்தின் திட்ட அறிக்கை மற்றும் தமிழருவி மணியனின் ஆவேசக் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசினோம்... ''மது விலக்கு அமலில் இருந்த அன்றைய காலகட்டம் வேறு; இன்றைய சூழ்நிலையே வேறு. குஜராத்தில் தொடர்ச்சியாக 'மது விலக்கு' அமலில் இருந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மது விலக்கு கைவிடப்பட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே, உடனடியாக 'மது விலக்கை' அமல்படுத்திவிட முடியாது. அதனால்தான், 'படிப்படியாக மது விலக்கு' என்ற கொள்கையின்கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை மூடியிருக்கிறோம்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி
`அது கார்த்தி சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து!’ -டாஸ்மாக் விவகாரத்தில் திருநாவுக்கரசர் விளக்கம்

இப்போது ஊரடங்கு நேரத்திலும்கூட 'எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை' என்ற நோக்கோடுதான் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமலேயே இருந்தோம். ஆனால், பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக் கடைகளைத் திறந்துவிட்டார்கள். உடனே நம் மக்களும் அந்த மாநிலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆக, மதுவோடு சேர்த்து, கொரோனாவையும் வாங்கிக்கொண்டு மக்கள் வரும் சூழல் உருவாகிவிட்டது. இதுமட்டுமல்ல... மதுவுக்கு மாற்று என நினைத்து கிருமிநாசினிகளைக் குடித்து இறந்துபோனவர்கள் எத்தனைபேர்... இப்படி சூழ்நிலைகள் அழுந்தித் தள்ளியநிலையில்தான் வேறு வழியில்லாமல் நாமும் டாஸ்மாக்கைத் திறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

மணல் விற்பனை மற்றும் கனிம வளங்களை தனியார் வசம் கொடுக்காமல், அரசே ஏற்று நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வரும் துணை முதல்வரும் அதிகாரிகளோடு ஏற்கெனவே ஆலோசித்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு நல்லதொரு முடிவு கிடைக்கும்!'' என்கிறார் நம்பிக்கையாக.

அடுத்த கட்டுரைக்கு