Published:Updated:

"தாயின் வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வந்த பிஞ்சுக்கை..." அனுபவம் பகிரும் டாக்டர் தமிழிசை #DoctorsDay

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

"வயிற்றுக்குள்ளிருந்து வெளியே தெரிந்த பிஞ்சுக்கை 'என்னை யாராவது காப்பாற்றுங்கள்' என்று அழைப்பதுபோல இருந்தது." - Dr.தமிழிசை சௌந்தரராஜன்

கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மருத்துவ சேவையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. ஓவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருத்துரு 'கோவிட்-19 உயிரிழப்புகளைக் குறைப்போம்!' என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தினத்தில் தலைசிறந்த மருத்துவராக அறியப்பட்டு தற்போது தெலங்கானா ஆளுநராக உயர் பதவியை அலங்கரித்துக்கொண்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம்.

Happy Doctors day
Happy Doctors day

கைராசியான மருத்துவர் என்று சாமானியர்களின் அன்பைப் பெற்றவர் தமிழிசை சௌந்தரராஜன். ஸ்கேன் பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் ஆயிரம் ரூபாய் செலவுள்ள பரிசோதனையை, ஏழைப் பெண்களுக்காக வெறும் 100 ரூபாய்க்குச் செய்தவர். எளிய மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர். மருத்துவராகவும் பேராசிரியராகவும் உச்சத்தில் இருந்த நேரத்தில், மக்களோடு இன்னும் நெருங்கி சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.

மருத்துவராக இருந்தாலும் அதிகாரம் கையிலிருந்தால்தான் சாமானியர்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்று உணர்ந்தார். இருப்பினும் மருத்துவ சேவையைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார். அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று முடித்து நோயாளிகளைப் பார்க்க நள்ளிரவு மருத்துவமனைக்குச் செல்வார். தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோதுகூட தன்னை நாடி வந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கத் தவறியதில்லை.

Doctors
Doctors

"அரசியலில் நுழைந்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்போது சிறிது சிறிதாக மருத்துவம் பார்ப்பதைக் குறைக்க நேர்ந்தது. நான் நினைத்திருந்தால் எவ்வளவோ சம்பாதித்திருக்க முடியும். ஆனால் பணம் என் நோக்கமாக இருக்கவில்லை. எளிய மக்களுக்குச் செய்யும் சேவையே எனக்கு மகிழ்ச்சியளித்தது" என்பவர், தான் மகப்பேறு மருத்துவத்தைத் தேர்ந்தெக்க காரணமாக இருந்த நிகழ்வைக் குறிப்பிட்டார்.

கர்ப்பிணியால் ஏற்பட்ட திருப்புமுனை!

"தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவியாக இருந்தபோது, வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் எல்லாம் கருகி, வெந்துபோன நிலையில் வயிற்றுக்குள்ளிருந்த குழந்தையின் கை வெளியே தெரிந்தது. அந்தப் பிஞ்சுக்கை 'என்னை யாராவது காப்பாற்றுங்கள்' என்று அழைப்பதுபோல இருந்தது.

நான் நினைத்திருந்தால் எவ்வளவோ சம்பாதித்திருக்க முடியும். ஆனால் அது என் நோக்கமாக இருக்கவில்லை!
தமிழிசை சௌந்தரராஜன்
ப்ளாஸ்மா தெரபி கொரோனா சிகிச்சையில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? #VikatanExplainer

தீக்காயம் அதிகமாக இருந்தபோதும் அந்தப் பெண் தெளிவாகப் பேசினார். 'ஏன் இது போன்று முடிவெடுத்தீர்கள்' என்று கேட்டதற்கு, 'திருமணத்துக்கு எங்க அப்பா போடுவதாகச் சொன்ன நகையிலேயே இன்னும் 10 சவரன் பாக்கியிருக்கிறது. குழந்தை வேறு பிறந்துவிட்டால் அதற்கும் தங்கத்தில் நகை செய்துபோட்டு என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏற்கெனவே வறுமையில் வாடும் என் குடும்பத்துக்கு இது மேலும் பாரம் என்பதால் இந்த முடிவெடுத்தேன்" என்றார்.

'படித்த பெண் நீங்கள். டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைத்தால்கூட உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளலாமே. ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள்?' என்றேன்.

"உங்களை மாதிரி ஒருவர் எனக்கு ஆலோசனை கொடுத்திருந்தால் இந்த முடிவையே எடுத்திருக்க மாட்டேன் டாக்டர்!" என்றார். கலங்கிவிட்டேன். எவ்வளவோ முயன்றும் தாய் சேய் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதை என்னுள் விழுந்தது

கொரோனா பாதித்த மருத்துவர்களைச் சந்திக்கச் சென்ற தமிழிசை
கொரோனா பாதித்த மருத்துவர்களைச் சந்திக்கச் சென்ற தமிழிசை

மறக்க முடியாத நிகழ்வு!

தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நிறைமாத கர்ப்பிணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் வயிறு அசாதாரணமான அளவு பெரியாதாக இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் தலையில் நீர் கோத்து இருந்தது. 9 செ.மீ சுற்றளவு இருக்க வேண்டிய குழந்தையின் தலை நீர் கோத்து 39 செ.மீ இருந்தது. ஏன் இவ்வளவு அலட்சியமாக இருந்தீர்கள் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு, 'அந்தக் காலத்திலெல்லாம் நாங்க ஸ்கேன் எடுத்தா பார்த்தோம். அதெல்லாம் வேண்டாம் என்று என் மாமியார் தடுத்துவிட்டார்' என்றார்.

கருத்தரித்த பத்து வாரத்தில் ஸ்கேன் செய்திருந்தால் ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். ஸ்கேன் எடுக்காததால் பத்தாவது மாதம்வரை பிரச்னை வளர்ந்துகொண்டேயிருந்திருக்கிறது. இந்த நிலையில் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை. சிசேரியன் செய்து அவ்வளவு பெரிய தலையுள்ள குழந்தையை வெளியே எடுக்கும்பட்சத்தில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்னைக்குத் தீர்வு காண்பது சற்று கடினம். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு சிகிச்சையளிப்பது குறித்த படிப்பை நான் வெளிநாட்டில் முடித்திருந்தேன் என்பதால் தைரியமாக சிகிச்சையில் இறங்கினேன். வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தையின் தலைப்பகுதியில் ஓர் ஊசியைச் செலுத்தி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சி வெளியே எடுத்தேன்.

Gynecologist experience
Gynecologist experience

சுமார் 3 லிட்டர் தண்ணீரை வெளியேற்றினோம். அதற்குப் பிறகு குழந்தையின் தலை சாதாரண அளவுக்குச் சுருங்கிவிட்டது. சிசேரியன்கூட செய்ய இயலாத நிலையிலிருந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது" என்று நினைவுகளை அசைபோட்டவர், இதுபோல பல மறக்க முடியாத நிகழ்வுகள் பசுமையாக நிழலாடுவதாகக் கூறினார்.

கொரோனா போர்!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கிய நேரத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் அணியும் நீல வண்ண உடையில் தமிழிசை இருக்கும் புகைப்படம் வெளியானது. அதுபற்றி கேட்டபோது, "தெலங்கானாவில் ஒரே நேரத்தில் 40 மருத்துவர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ். இது மருத்துவர்களை மனதளவில் மிகவும் தளர்வடையச் செய்துவிட்டது என்று அறிந்தேன். உடனே அவர்களை நேரில் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன். கொரோனா பரவும் வாய்ப்புள்ளது என்பதால் பலர் போக வேண்டாம் என்று தடுத்தனர். சக மருத்துவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியது என் கடமையல்லவா?

Fight against corona
Fight against corona

நேரில் சென்று அவர்களிடம் உரையாடினேன். மனதுக்கு உற்சாக மூட்டும் வார்த்தைகளைப் பேசிவிட்டு வந்தேன். நான் பேசியது அவர்களுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து ஒரு மருத்துவராக தெலங்கானா அரசுக்கு என் ஆலோசனைகளை அளித்து வருகிறேன். இதுவரை 5 கடிதங்களை எழுதியிருக்கிறேன்" என்பவர், மருத்துவர்களைத் தளர்ந்து போகச் செய்யும் மக்களின் செயல்பாடுகள் குறித்த கவலையையும் பகிர்ந்துகொண்டார்.

"கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்திருக்கிறோம். அந்தச் சூழலிலும் அயராது மக்களின் நலனுக்காக மருத்துவர்கள் பாடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்வது, இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பது போன்ற நிகழ்வுகள் கலக்கமடையச் செய்கின்றன.

தமிழிசை
தமிழிசை
கொரோனா கொசுவை அடிக்கும் கோடாரி... பலன் அளித்துள்ளதா 100 நாள் ஊரடங்கு?

மருத்துவர்கள் தினத்தில் பொதுமக்களுக்கே செய்தி சொல்ல விரும்புகிறேன். உயிர் காக்கும் உன்னதப் பணியிலிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள்" என்று கூறி நிறைவு செய்தார்.

அடுத்த கட்டுரைக்கு