Published:Updated:

`தீவிர சிகிச்சையில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்' - மருந்து அனுப்பி உதவிய ஆளுநர் தமிழிசை

தமிழிசை அனுப்பி வைத்த மருந்து
தமிழிசை அனுப்பி வைத்த மருந்து

கொரோனா பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெ.அன்பழகன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தேவையான மருந்துகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை மாநகரில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தி.மு.க-வினர் நிவாரண உதவிகளைச் செய்து வந்தனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் நிவாரண உதவிகள் வழங்குவதில் வேகம் காட்டிவந்தார். 

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

இதன் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

`தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்’ - மருத்துவமனை நிர்வாகம் #NowAtVikatan

ஜெ.அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் ரேலா மருத்துவமனையில் இருந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை ஐதராபாத் நகரில் இருந்து கொண்டுவர விரும்பியுள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் remdesivir 100mg என்ற மருந்து பவுடரை உடலில் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஏற்கெனவே இந்த மருந்து அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த மருந்து உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பதால் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் அலுவலகத்தை மருத்துவமனை நிர்வாகம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளது.

தமிழிசையின் உத்தரவுப்படி அந்த மருந்து உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த மருத்துவர்களிடம் கேட்டபோது, ``கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப என்ன மாதிரியான மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

தமிழிசை அனுப்பி வைத்த பரிசோதனை கருவி
தமிழிசை அனுப்பி வைத்த பரிசோதனை கருவி
அந்த மருந்து ஐதராபாத் நகரில் தயாரிக்கப்படுகிறது. அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால் அங்கு மட்டுமே கிடைக்கக்கூடியது. உயிர் காக்கும் விஷயம் என்பதால் சிறப்பு அனுமதி பெற்று அந்த மருந்தை வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.
டாக்டர்.சௌந்தரராஜன்

தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்து வைரஸ் எதிர்ப்புக்குப் பயன்படுத்தக் கூடியது. கொரோனா நோய் தடுப்பு மருந்துதான் கண்டுபிடிக்கப்படவில்லையே தவிர, நோய் வந்த பின்னர் அதை முறியடிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களே முடிவு செய்வார்கள்” என்றார். 

இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கணவர் டாக்டர்.சௌந்தரராஜனிடம் பேசினோம். ``உண்மைதான். அந்த மருந்து ஐதராபாத் நகரில் தயாரிக்கப்படுகிறது. அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால் அங்கு மட்டுமே கிடைக்கக்கூடியது. உயிர் காக்கும் விஷயம் என்பதால் சிறப்பு அனுமதி பெற்று அந்த மருந்தை வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.

இதை நாங்கள் வெளியே தெரிவிக்க விரும்பவில்லை. விமானத்தில் அதை அனுப்பியிருந்ததால் அதில் இருந்த முகவரியின் பெயரையும் மருந்துப் பொருளின் பெயரையும் பார்த்துவிட்டு யாரோ வெளியே தெரியப்படுத்திவிட்டார்கள் என நினைக்கிறேன்.

தெலங்கானாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்கூட மருத்துவமனைக்குச் செல்லாத நிலையில், நேற்று அவர் (தமிழிசை) மருத்துவ சீருடையில் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். கொரோனா பாதிப்புக்குள்ளான மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினார். அவர் ஒரு டாக்டர் என்பதால் உயிரின் மதிப்பு தெரியும். அதனால்தான் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து அக்கறையுடன் மருந்து அனுப்பி வைத்த தமிழிசை சௌந்தரராஜனின் மனிதாபிமானச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு