Published:Updated:

சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; 2-ம் அலையின் முடிவா, 3-ம் அலையின் தொடக்கமா?

A health worker prepares to administer the vaccine
A health worker prepares to administer the vaccine ( AP Photo / Manish Swarup )

`இது இரண்டாவது அலையின் தொடர்ச்சிதான்’ என்று சிலரும் `மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம்’ என்று சிலரும் தெரிவிக்கும் நிலையில், மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

`கொரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாகக் குறைந்துவருகிறது. இன்னும் சில நாள்களில் தமிழ்நாடு கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறிவிடும்’ என மக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகப் பாதிப்பு அதிகமாவதும், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா ப்ளஸ் பாதிப்புகளில் பத்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `இது இரண்டாவது அலையின் தொடர்ச்சிதான்’ என்று சிலரும் `மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம்’ என்று சிலரும் தெரிவிக்கும் நிலையில், மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

கொரோனா முன்களப் பணியாளர்கள்
கொரோனா முன்களப் பணியாளர்கள்

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதியன்று 4,512 பேர் பாதிக்கப்பட்டனர். 30-ம் தேதி 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பின்படி கணக்கிடும்போது பாதிப்பு எண்ணிக்கை சற்றுக் குறைந்தாலும் திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நாகை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், நீலகிரி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் 29-ம் தேதியைவிட 30-ம் தேதி பாதிப்பு சற்று அதிகரித்திருந்தது.

அதேபோல, 1-ம் தேதியன்று 4,481 பேர் பாதிக்கப்பட்டனர். 2-ம் தேதி அது 4,230 ஆகக் குறைந்தாலும் அரியலூர், கரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1-ம் தேதியைவிட 2-ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமானது. 2-ம் தேதி 4,230 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3-ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 4,013 பேராகக் குறைந்தாலும் மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2-ம் தேதியைவிட 3-ம்தேதி ஓரிருவர் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக நாகையில் 32 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. 3-ம் தேதிக்கும் 4-ம் தேதிக்கும் இடையிலும் அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 3-ம் தேதி 69 ஆக இருந்த பாதிப்பு 4-ம் தேதி 75 ஆக உயர்ந்திருந்தது.கொரோனா

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
`தனியார் மருத்துவமனைகளில் தேங்கியிருக்கும் கொரோனா தடுப்பூசிகள்!’ - கொள்கையை மாற்றுமா ஒன்றிய அரசு?

இவையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதற்கிடையில், தமிழகத்தில் 10 பேர் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஆனால், `இது மூன்றாம் அலை கிடையாது’ என்று ஐ.சிஎம்.ஆரின் தொற்று நோயியல் துறைத்தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ள கருத்துதான் ஆறுதல் அளிக்கிறது.

இதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த அவர், ``இந்தியாவில் பத்து மாநிலங்களில் வெறும் 49 டெல்டா ப்ளஸ் பாதிப்புகள்தான் கண்டறியப்பட்டுள்ளன. (இப்போது 56 ஆக உயர்ந்துள்ளது. 12 மாநிலங்களில் உள்ள பாதிப்புகளைச் சேர்த்து இந்த எண்ணிக்கை) இது மூன்றாவது அலையின் ஆரம்பம் என்பதைக் குறிக்கவில்லை. ஆகவே இது மூன்றாவது அலையின் ஆரம்பம் என்று கூறுவது தவறான முடிவாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், ``கொரோனா இரண்டாவது அலையைப் போல மூன்றாவது அலை கடுமையாக இருக்காது. தடுப்பூசி செலுத்துவதும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதும் மூன்றாவது அலையைத் தணிப்பதற்கு உதவியாக இருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மொத்தமாகப் பாதிப்பு குறையும் சூழலில், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதற்கான காரணம் அரசின் அலட்சியம்தான். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் இன்னும் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என எதிர்க்கட்சியினர் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரான கோவை மகேஸ்வரி, ``மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளித்தாலும் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மாறி மாறி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மகேஸ்வரி
மகேஸ்வரி

ஒன்று இரண்டு எண்ணிக்கைதானே என்று அதை இயல்பாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இப்போது மக்கள் நடமாட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கொரோனா அச்சத்தைக் கடந்து கடைகளில் கூடுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, தமிழக அரசு இதை உடனடியாகக் கண்காணிக்க வேண்டும். இப்போது போடப்படும் ஊரடங்கு ஏதோ கடமைக்காகப் போடப்பட்ட ஊரடங்காகத்தான் இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியின்போது போடப்பட்ட ஊரடங்கில் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தனர். அதைக் காவல்துறையினர் உறுதி செய்தனர்.

ஆனால், இவர்களோ மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலேயே காவல்துறையினரின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டனர். அதனால் மக்களும் ஊரடங்கினை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே இப்படித்தான் சூழல் இருந்தது. இப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும்போது சொல்லவா வேண்டும்? பொருளாதார முடக்கத்தைச் சரி செய்வதற்குத் தளர்வுகள் அவசியம்தான். அதற்காக தளர்வுகளே கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும்.

அப்படி வெளியே வரும் மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டதைப்போல மைக்ரோ லெவல் கண்காணிப்பைச் செய்ய வேண்டும். ஆனால், அவையெல்லாம் இப்போது நடக்கவே இல்லை. அரசும் கண்டும் காணாமல் இருந்ததால்தான் இரண்டாவது அலையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலை இன்னும் தொடருமானால் மூன்றாவது அலை என்று ஒன்று வந்தால் நம்மால் சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக மக்கள் பின்பற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?

அண்மையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுதொடர்பாகப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``சில மாவட்டங்களில் ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. அது சம்பந்தமாகச் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருக்கிறேன். சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மாவட்டங்களில் தளர்வுகளைக் கட்டுப்படுத்துவதா அல்லது வேறு என்ன மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு