கொரோனா டெஸ்ட்டிங்... டெல்லியில் 800 ரூபாய் கட்டணம்... ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் 3000?

தற்போது டெல்லி அரசும் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணத்தை 2400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறது
கொரோனா என்ற வார்த்தை 2020-ம் ஆண்டையே கொள்ளைகொண்டுவிட்டது. உலகின் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகம் நீக்கமற ஒப்புக் கொண்ட விஷயம் ஒன்றுதான். கொரோனா பரிசோதனைகளை எளிமையாக்குவதும், அதிகப்படுத்துவதும் தான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி. ராபிட் டெஸ்ட், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, சீராலஜி டெஸ்ட் என மருத்துவர்கள் பல பரிசோதனை முறைகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு பரிசோதனையின் விலையும், சோதனை முடிவுகள் தெரிவதற்கான கால அளவும் வெவ்வேறாக இருக்கின்றது.

மார்ச் மாத இறுதியிலிருந்த அளவு மக்களிடம் பயமோ, பதற்றமோ இல்லை. அதேசமயம், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும், மருத்துவமனைகள் செல்வதற்குத் தயக்கமும் அதிகரித்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், முக்கிய காரணமாக அரசின் சில தவறுகளைச் சொல்லலாம். ஒருபக்கம் ஊரடங்கிலும், ஊரடங்கு தளர்விலும் அரசின் முடிவுகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. மறுபக்கம் பெரும் செலவு செய்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராபிட் டெஸ்ட் கிட் தோல்வியைச் சந்தித்தது. ஏறத்தாழ 60 % அதிக விலை கொடுத்து ராபிட் டெஸ்ட் கிட்டுகள் வாங்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து சில வழக்குகளும் தொடரப்பட்டன. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஏப்ரல் மாதம் ராபிட் டெஸ்ட் விலை ரூபாய் 400 மட்டுமே இருக்க வேண்டும் எனத் தீர்ப்பும் வந்தது. ஆனால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் விலையை மருந்தை விநியோகிக்கும் நிறுவனங்களோடு பேசி மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதனால் பரிசோதனைக்குச் செலவிடும் கட்டணம் பல மாநிலங்களில் அதிகமாக இருந்தது. இது, பலரைப் பரிசோதனை எடுத்துக் கொள்ளத் தயங்கச் செய்தது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 3000 ரூபாய் வரை இருந்த ராபிட் டெஸ்ட்களின் விலை, பல்வேறு மாநிலங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜூன் மாதம் முதல்வர் அறிவிப்பின் பேரில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை 3000 ரூபாய்க்கு எடுக்கப்படுகிறது. இதுவே ஒருவர் வீட்டிற்கே சென்று பரிசோதனை எடுக்கும் பட்சத்தில் கூடுதலாக 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில தனியார் பரிசோதனை கூடங்களில் இதே போல இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் நடக்கிறது. அதேபோல சில இடங்களில் தள்ளுபடி விலையில் பரிசோதனைகள் நடத்தப்படும் என விளம்பரங்களையும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் இந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் கட்டணம் இதுவரையிலும் குறைக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த பரிசோதனையின் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறது தமிழக அரசு.
ஆனால், ராஜஸ்தானில் இந்த பரிசோதனையின் விலை 1200 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ரூ.600 (தனியார்- ரூ.1600), மகாராஷ்டிராவில் 980, ஹரியானாவில் ரூ.650 (தனியார் - 1200), மேகாலயாவில் ரூ.1000 என பல்வேறு மாநிலங்கள் கடந்த இரு மாதங்களில் பரிசோதனை விலையைக் குறைந்திருந்த நிலையில், தற்போது டெல்லி அரசும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை 2400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகள், தனியார் பரிசோதனை கூடங்கள் என அனைத்திலும் இந்த கட்டணக்குறைப்பு அமலுக்கு வருகிறது. இதேபோல தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு விலை குறைப்பை அமல்படுத்தவேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய அடக்க விலை ரூபாய் 200 மட்டுமே. அதனால் இந்த பரிசோதனைக்காகத் தேசிய விலையாக ரூபாய் 400 மட்டும் நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜய் அகர்வால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் பேசுகையில், "அறிவியலை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு தரமுடியும் என நம் அரசுகள் நம்புவதே இல்லை. டெல்லி மற்றும் பிற மாநிலங்களை போலவே பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்படுவது என்பது தமிழகத்திலும் சாத்தியம்தான். தமிழகத்தில் ஒவ்வொரு டெஸ்ட்க்கும் கமிஷன் கிடைப்பதால், நிறைய சோதனைகள் செய்ய திட்டமிடுகிறார்கள். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சிக்கனமான சோதனைகளைக் கூட தமிழகம் கண்டுகொள்ளவில்லை. இப்போது தமிழகத்தில் 3000 ரூபாய் சோதனைக் கட்டணமும், வீட்டுக்கு வர விசிட்டிங் கட்டணமாக 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அதிகம். அரசால் சோதனை செய்ய முடிந்த அதிகபட்ச எண்ணிக்கையைத் தாண்டும்போதெல்லாம், அரசே தனியார் மருத்துவமனைகளுக்குச் சோதனைக்காக அனுப்பியது. அப்போதும் அரசு சார்பில் தனியாருக்கு தரப்படுவது 3000 ரூபாய்தான். மற்ற மாநிலங்களில் சராசரியாக 1000 ரூபாயில் நடத்தப்படும் சோதனைக்கு நம் ஊரில் மட்டும் ஏன் 3000 ரூபாய் செலுத்தவேண்டும். மக்கள் வரிப்பணம்தான் இதில் வீணாகிறது. பேண்டமிக் சூழலில் கூட ஊழல் செய்யவும், பணம் சம்பாதிக்கவும் எப்படி மனம் வருகிறதோ எனத் தெரியவில்லை.
கொரோனாவின் ஆரம்பக்கட்டத்தில் இருந்த சோதனை முறையை வேறு வழியின்றி எல்லோரும் பயன்படுத்தினோம். அதன் வெற்றி சதவிகிதம் குறைவு என்றாலும் அப்போது வேறு வழியில்லை. ஆனால், நவம்பர் மாதமே ஃபெலுடா(feluda) என்ற கோவிட் சோதனை கிட் வந்துவிட்டது. அதன் விலை 500 ரூபாய்க்குள்தான். மேலும், அந்தக் கருவிக்கான ஆரம்பக்கட்ட செலவும் சில ஆயிரங்கள்தான். முன்பிருந்த சோதனைக்கருவிக்கு அதுவே 10-15 லட்சத்தைத் தாண்டியது. முடிவுகளும் ஒரு மணி நேரத்தில் கிடைத்துவிடும். அதன் பின், Covirap என்ற சோதனை கிட்டும் சந்தைக்கு வந்துவிட்டது. அதையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவும் ஃபெலூடா போலவே குறைந்த ஆரம்ப விலை, குறைந்த சோதனை விலை, குறைவான நேரம், துல்லியமான முடிவுகள் என எல்லா விதத்திலும் இப்போது நாம் பயன்படுத்தும் சோதனை கிட்டை விட சிறந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்காக அரசு செயல்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் விருப்பம்" என்றார்.