Published:Updated:

கொரோனா தடுப்புப் பணி... தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பயிற்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம்!

கொரோனா
கொரோனா

பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் கோவிட்-19 தொற்றுகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை அளிக்க முடியும் என்பது இந்தப் பயிற்சி முகாமின் நோக்கமாகும்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலம் முழுவதும் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

தமிழகத்தில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தன்னார்வல அமைப்புகள் களத்தில் இறங்கியிருக்கின்றன; உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இயலாதோருக்கு வழங்குவது தொடங்கி, நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களை அடக்கம் செய்வது வரை தன்னார்வலர்களின் பணி தொடர்கிறது.

'வட சென்னையில் ஆக்ஸிஜன் ஆட்டோ' - மக்களின் உயிர்காக்கும் தன்னார்வலர்!
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF), கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாகத் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை அறிவித்துள்ளது. பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் கோவிட்-19 தொற்றுகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை அளிக்க முடியும் என்பது இந்தப் பயிற்சி முகாமின் நோக்கமாகும்.

இந்தப் பயிற்சி முகாம் 13-05-2021 தொடங்கி 15-05-2021 வரை நடைபெறவிருக்கிறது. ஆறு தலைப்புகளில் காலை 11 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை என பத்து மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

சுந்தர ராமன், அமலோர்பவநாதன், ஃபரூக் அப்துல்லா, காசி, ரெக்ஸ் சற்குணம், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், நுண்ணுயிர் துறைப் பேராசிரியர் திருநாவுக்கரசு, பேராசிரியர் கிருஷ்ணசாமி என மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கின்றனர்.

பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் கோவிட்-19 தொற்றுகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை அளிக்க முடியும்; பயிற்சிக்குப் பிறகும் களத்தில் உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு நிபுணர்கள் குழு தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

பயிற்சி வகுப்புகள் தமிழிலேயே நடைபெறும். ஆறு பயிற்சி வகுப்புகளிலும் முழுமையாகக் கலந்துகொள்வோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்; இதுதவிர கருத்துத் தாள்கள், மின் நூல்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கோவிட்-19 தடுப்புப் பணிகளில் ஈடுபட விருப்பமுள்ள அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு பெறலாம். பங்கு பெற விரும்புவோர் இந்த கூகுள் படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

https://forms.gle/8D2empMu1KPC869AA

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி

பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் வழியாகப் பயிற்சிக்கான இணைப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு