Published:Updated:

`இலவச பீர், குலுக்கல் பரிசு, மாஸ்க் தேவையில்லை!’ - அமெரிக்காவில் தடுப்பூசி நிலவரம் பகிரும் தமிழர்கள்

அமெரிக்கா
அமெரிக்கா

மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இங்குள்ள மாகாண அரசுகள் பல முன்னெடுப்புகளைச் செய்தன.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை அமெரிக்கா எப்படிக் கையாண்டது என்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் உற்றுக் கவனிக்கும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். முதல் அலையில் கொரோனாவுக்கு ஏராளமான உயிர்களைப் பலிகொடுத்த அமெரிக்காவில் இப்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கு பாதிப்பின் நிலவரம் இப்போது எப்படி இருக்கிறது, தடுப்பூசி போடுவதில் அரசு என்னென்ன யுக்திகளைக் கையாள்கிறது என்று கேட்டால் தடுப்பூசி போட்டால் இலவச பீர், குலுக்கல் பரிசு என ஆச்சர்யப்படும் தகவல்களைப் பகிர்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் கடந்த 21 வருடங்களாக வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த வீரபத்திரகுமாரிடம் பேசினோம், ``நியூ ஜெர்சி 88 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாகாணம். இங்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதாவது சராசரியாக 8 பேரில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 26,000-க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 4,500 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 8,000 முதல் 9,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து 200 என்ற அளவில் வந்திருக்கிறது.

தடுப்பூசி முகாமில் நியூ ஜெர்சி கவர்னர் முர்பி
தடுப்பூசி முகாமில் நியூ ஜெர்சி கவர்னர் முர்பி

ஒட்டுமொத்த அமெரிக்காவையும் எடுத்துக்கொண்டோமானால், இரண்டாவது அலை உச்சம் தொட்ட ஜனவரி மாதத்தில் ஒருநாள் பாதிப்பின் அளவு மூன்று லட்சம் என்ற அளவிலிருந்தது. இப்போது படிப்படியாகக் குறைந்து 13,000 என்ற அளவில் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தடுப்பூசி போட்டதுதான்” என்று சொல்லும் வீரபத்திரகுமார் அங்கு தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டது எப்படி என்பது குறித்து நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்…

­``நியூ ஜெர்சியைப் பொறுத்தளவில் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் 54 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசம்தான். ஃபெடரல் கவர்மென்ட்தான் இதற்கு ஸ்பான்ஸர் செய்கிறது. நம் ஊரில் மத்திய அரசு போல இங்கு ஃபெடரல் கவர்மென்ட்.

வீரபத்திரகுமார்
வீரபத்திரகுமார்
Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் என மூன்று வகையான தடுப்பூசிகள் இங்கு கிடைக்கின்றன. அதில் எது விருப்பமோ அதை நாம் போட்டுக்கொள்ளலாம். ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசி எடுத்துக்கொள்வோர் முதல் டோஸ் போட்டதிலிருந்து மூன்று வார இடைவெளியில் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். ஜான்சன் & ஜான்சன் ஒரே டோஸ்தான்.

ஆரம்பத்தில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை வந்ததால் அதை நிறுத்தி வைத்திருந்தார்கள். மீண்டும், இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சிங்கிள் டோஸ் என்பதால் மக்கள் அதைத்தான் இப்போது விரும்பிப் போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசியால் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பெரியளவில் எந்தப் புகார்களும் இல்லை. முதல் டோஸில் சிலருக்கு அலர்ஜி பிரச்னை ஏற்பட்டால் இரண்டாவது டோஸ் போடுவதை நிறுத்திவிடுகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது இங்கு கட்டாயம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம். பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் இந்தியாவில் தயக்கம் நிலவுவதைப்போல இங்கும் ஆரம்பத்தில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கினர். இதையடுத்து, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இங்குள்ள மாகாண அரசுகள் பல முன்னெடுப்புகளைச் செய்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஆங்காங்கே மிகப்பெரிய தடுப்பூசி மையங்களை அமைத்தார்கள். தெருவுக்கு ஒரு தடுப்பூசி மையம், லோக்கல் மால்கள், பெரிய ஃபார்மா நிறுவனங்கள் எனப் பல இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கித் தொடர் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தார்கள்.

Covid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா?

உங்கள் அடையாள அட்டையைக் காட்டினால் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இப்படி எளிமையாக எங்கும் தடுப்பூசி கிடைக்கும் சூழலை உருவாக்கியதுதான் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணம். அதையும் மீறி தடுப்பூசி போடத் தயங்கும் மக்களும் இருக்கத்தானே செய்வார்கள்… அவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதற்கு அரசு விதவிதமான திட்டங்களை அறிவித்து ஆச்சர்யப்படுத்தினார்கள். கலிஃபோர்னியா மாகாணத்திலும் நெவிடா மாகாணத்திலும் குலுக்கல் பரிசுத்தொகை, இன்சென்டிவ் புரோகிராம்கள், கிஃப்ட் கார்ட்ஸ் போன்ற விஷயங்களையெல்லாம் முன்னெடுத்தார்கள்.

நியூ ஜெர்சியில் `shot and a beer’ என்ற திட்டத்தை அறிவித்தார் கவர்னர் முர்பி. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அட்டையைக் காண்பிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு பீர் இலவசமாக வழங்கப்பட்டது. இப்படி மக்களை ஈர்ப்பதற்கு பல விஷங்களைச் செய்தனர். கவர்ச்சிகரமான இந்த அறிவிப்புகளைத் தாண்டி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான மிக முக்கியமான காரணம், தடுப்பூசி போட்டுக்கொண்டால் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டியதில்லை; தனிமனித இடைவெளியையும் பெரியளவில் கடைப்பிடிக்க வேண்டியதில்லை; அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதுதான்.

இதுமட்டுமல்ல `ஃபெடரல் எமெர்ஜன்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி’ என்ற அரசு நிறுவனம் கொரோனா மரணங்களுக்கு 6,756 டாலர்கள் நிவாரணமாக வழங்குகின்றது. இறுதிச் சடங்கு செலவுகளைச் செய்வதற்கு உதவியாகவே இந்தப் பணம் வழங்கப்படுகிறது. இதுவரை 278 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர வேலையற்றோருக்கான உதவிகளெல்லாம் தனி” என்றார்.

நியூஜெர்சியில் முதன்முதலாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ரிச்சர்ட் சத்தியவான் என்ற தமிழர். நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்து தற்போது நியூஜெர்சியில் செட்டில் ஆகியிருக்கும் அவரிடம் பேசினோம், ``2021 ஜனவரி 15-ம் தேதி, நியூ ஜெர்சியில் உள்ள எடிசன் நகரில் தடுப்பூசி போடுவதற்கான ஒரு மெகா சென்டரை முதன்முதலாகத் தொடங்கினார்கள். அந்தப் பகுதியில் அதிக அளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

ரிச்சர்ட் சத்தியவான்
ரிச்சர்ட் சத்தியவான்

நான் இந்தியர் என்பதாலும் தன்னார்வலராகச் செயல்பட்டு வருவதாலும் என்னை முதன்முதலாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்தனர். நான் உடனடியாக சம்மதித்தேன். கவர்னர் மர்பி முன்னிலையில் முதல் ஆளாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இப்போது நாங்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்குத் தடுப்பூசிதான் மிக முக்கியமான காரணம். ஆகையால், இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் உள்ள நம் மக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து மீண்டு வர வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு