Published:Updated:

``எப்படியிருக்கிறது கோயம்பேடு மார்க்கெட்?'' - விவரிக்கும் சிறு வியாபாரிகள்

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிவந்ததையடுத்து, கடந்த மாதம் கோயம்பேடு மார்க்கெட்டை மூடியது தமிழக அரசு. தற்போது, 'மார்க்கெட்டைத் திறந்து வியாபாரத்துக்கு அனுமதியுங்கள்' என்று கோரிக்கை எழுப்பிவரும் கோயம்பேடு சிறு வியாபாரிகள், மார்க்கெட்டின் தற்போதைய நிலை குறித்தும் விவரிக்கிறார்கள்.

'கோயம்பேடு மார்க்கெட்டை மூடுங்கள்... மூடுங்கள்' என்று தமிழகம் முழுக்க எழுந்த கதறல்கள் அனைத்தும் கரைந்துபோய், இப்போது 'மார்க்கெட்டைத் திறந்துவிடுங்கள்' என்ற கூக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக மாறி, தமிழகமெங்கும் கொரோனா பரவல் ஏற்படுவதையறிந்து, கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூடியது தமிழக அரசு. அதற்குப் பதிலாக திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் ஒன்றையும் கட்டமைத்து, காய்கறி விற்பனை தடையாகாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டின் தற்போதைய நிலை என்ன, அங்கே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா...' போன்ற கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், அதுகுறித்த புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

இந்த வழக்கு விசாரணையை உதாரணம் காட்டிப் பேசுகிற 'கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் நல சங்க'த் தலைவர் தியாகராஜன்,

''கோயம்பேடு மூலமாக கொரோனா தொற்று பரவிவிட்டதாக மார்க்கெட்டை மூடி ஒரு மாதம் கடந்துவிட்டது. இங்குள்ள மொத்த வியாபாரிகள், திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள புது மார்க்கெட்டுக்கு வியாபாரத்தை மாற்றிவிட்டார்கள். ஆனால், சில்லரை வியாபாரிகளுக்கு கடைவசதி எதுவும் செய்துதரப்படவில்லை. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கெனவே சில்லரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 3,941 கடைகளின் வியாபாரிகளான நாங்கள், தற்போது தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டுவருகிறோம். இதன் தொடர்ச்சியாக, மார்க்கெட்டிலுள்ள 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன.

திருமழிசை மார்க்கெட்டிலும் போதுமான எண்ணிக்கையில் சில்லரை வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்யாததால், தினம்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் வேஸ்ட்டாகக் கொட்டப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட், இப்போது சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் உள்ளது. இந்த நிலையில், தனி மனித விலகலுக்கு இடையூறு செய்யும் நடைபாதைக் கடைகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். பொது இடங்கள், பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, கோயம்பேடு மார்க்கெட்டை உடனடியாகத் திறக்க வேண்டும்.

அரசின் விதிகளைப் பின்பற்றி வியாபாரம் செய்வதற்கு சிறு வியாபாரிகளான நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசுதான் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். எங்கள் சங்கத்தின் சார்பில் இதுகுறித்த கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளோம்'' என்றார்.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சுடலைமணி நம்மிடம் பேசும்போது,

''கொரோனா தொற்று வீடு, தெரு என எல்லா இடங்களிலும்தான் பரவுகிறது. உடனே கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடித்து ஊர் உலகம் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது. அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டையும் சுத்தமாகப் பராமரித்து, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறார்கள். எனவே, கட்டுப்பாடுகளோடு கடைகளைத் திறந்து, விதிமுறைகளைப் பின்பற்றி வியாபாரம் செய்யவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும். மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பாதி எண்ணிக்கையை ஒரு நாள் வியாபாரத்துக்கும் மீதி கடைகளை அடுத்தநாள் வியாபாரத்துக்குமாக சுழற்சி முறையில் அனுமதிக்கலாம். திருமழிசை மொத்த வியாபாரிகளிடமிருந்து நாங்கள் வாங்கிவரும் காய்கறிகளை, மத்திய தர வியாபாரிகள் மட்டும் வந்து எங்களிடம் வாங்கிச் செல்லுமாறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். சிறு வியாபாரிகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு வாங்கிச் செல்பவர்களை மார்க்கெட்டுக்குள் அனுமதித்தால், மறுபடியும் கூட்டம் சேர்ந்துவிடும். எனவே, அதை மட்டும் அனுமதிக்கக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைகளிலும்கூட தேவையில்லாமல் அதிக ஆள்கள் இருந்துகொண்டு வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு கடையில், ஒரு நபர் மட்டுமே வியாபாரத்தைக் கவனிக்கச்சொல்லி உத்தரவிடவேண்டும். இப்படியெல்லாம் நடைமுறையை ஒழுங்குபடுத்தினால், திருமழிசை புதிய சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளான நாங்களும் காய்கறிகளை வாங்கிவந்து விற்பனை செய்ய வழிகிடைப்பதோடு, கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும். மாறாக இதே நிலை தொடர்ந்தால், கொரோனா பாதிப்பை விடவும் பொருளாதார பாதிப்பு பெரிய அளவில் எங்களைப் பாதித்துவிடும்'' என்றார் எதார்த்தமாக.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்துப் பேசும் சமூக ஆர்வலர் கண்ணன், ''ஆரம்பத்தில், பெரு வணிகர்கள் 200 பேர் செய்த தவற்றால், இன்றைக்கு சிறு வியாபாரிகளோடு ஒட்டுமொத்த சென்னையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெரிய வியாபாரி 5 இடங்களில் கல்லா அமைத்து வியாபாரம் செய்யும்போது, அதிகக் கூட்டம் கூடுகிறது. எனவே, பெரிய வியாபாரிகளை கட்டுப்படுத்திவிட்டு, சிறிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் விதமாக கடைகளைத் திறக்கச் செய்து 'தனி மனித இடைவெளி'யைக் கடைப்பிடிக்கவும் அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தியாகராஜன் - சுடலைமணி - கண்ணன்
தியாகராஜன் - சுடலைமணி - கண்ணன்

வரும் காலங்களில், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வண்டலூர், ரெட்ஹில்ஸ் என புறநகர்ப் பகுதிகளிலும் நிரந்தர மார்க்கெட்டுகளை அமைக்க வேண்டும். இப்படி அமைத்தால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் காய்கறி வாகனங்களும் எல்லையிலேயே சரக்குகளை இறக்கிவிட்டுச் செல்ல நேரும்போது, நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும். வியாபாரமும் பரவலாகப் பெருகி, புதிய வியாபாரிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்'' என்றார்.

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறனை ஸ்டாலின் கண்டிக்கவில்லை... ஆர்ப்பாட்டத்துக்கு காரணம் சொல்லும் அ.தி.மு.க

'கோயம்பேட்டில் கடைகள் திறக்கப்படுவது எப்போது...' என்ற கேள்வியோடு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம்...

''சென்னை மாநகராட்சியோடு இணைந்து, நகர் முழுவதும் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானம் என 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. இதன்படி சிறு வியாபாரிகளில் பெரும்பான்மையோர் நகர் முழுக்க வியாபாரம் செய்துவருகின்றனர். ஆனால், சங்கங்களைச் சேர்ந்த சிலர்தான் 'கோயம்பேடு மார்க்கெட்டைத் திறந்துவிடுங்கள்' என திரும்பத் திரும்ப கோரிக்கை வைத்துவருகின்றனர்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்
கொரோனா ஹாட்ஸ்பாட் கோயம்பேடு! - யார் காரணம்?

கோயம்பேட்டினால், எந்த அளவு பிரச்னைகள் வந்தன என்று அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது, மறுபடியும் மார்க்கெட்டை உடனடியாகத் திறப்பதென்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வியாபாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும். கொரோனா பாதிப்புகள் குறைந்தவுடன், மார்க்கெட் திறப்பது குறித்து தமிழக அரசே அறிவிக்கும். அதுவரையில் பொதுமக்களின் நலன் கருதி அரசின் முயற்சிக்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.'' என்கிறார் கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு