Published:Updated:

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

டிப்ளோமா நர்சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ளோமா நர்சிங்

சேவை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

1987ஆம் ஆண்டு தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று பத்துப் பதினைந்து செவிலியர்கள் சீருடையுடன் கோரிக்கை மனுவையும் ஏந்தி நிற்கின்றனர். முதல்வரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. செவிலியர்களோ அங்கேயே நிற்கின்றனர்.

அந்த வழியாக முதல்வரின் கார் செல்கிறது. சீருடையில் நிற்கும் செவிலியரைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி என்னவென்று விசாரிக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர். இருவர் மட்டும் வந்து தன்னை உள்ளே சந்திக்குமாறு சொல்கிறார். உள்ளே செல்கிறார் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாப்புராஜன் என்ற பெண்மணி.

சேவை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. அதனால் பெண்களுடன் ஆண்களையும் செவிலியர் படிப்பில் (டிப்ளோமா நர்சிங்) சேர்க்க அனுமதியளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதைக் கோரிக்கையாக வைக்கிறார் அவர். அப்போது, எங்க வீட்டு மகாலட்சுமி படத்தில் வரும், `ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது. அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது...’ என்ற வரிகளையும் எடுத்துக்கூறி அனுமதிக்குமாறு கூறுகிறார். ஆண்களும் செவிலியர் படிப்பில் சேருவதற்கு அனுமதியளிக்கிறார் எம்.ஜி.ஆர்.

நிர்வாக நடைமுறைகள் எல்லாம் நிறைவடைந்து 1989-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10 மாணவிகளுக்கு ஒரு மாணவர் என்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் மீண்டும் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு ஆண் செவிலியர்களுக்கான இடங்களைக் கைவிட்டுவிட்டது. பெண்கள் மட்டும் தற்போது படித்துவருகின்றனர். தனியார் கல்லூரிகளில் மட்டும் ஆண்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டுவரை படித்த ஆண்கள் மட்டுமே தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவருகின்றனர்.

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கும் போதே சக வயது ஆண்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி, குடும்பச் சூழல், பொருளாதாரத் தேவை காரணமாக படித்தவுடன் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலான ஆண்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்...அதுவும் வேண்டா வெறுப்புடன்.

“பி.எஸ்ஸி மூன்றாவது வருடம் படித்துக்கொண்டிருந்தேன். ஒரே ஒரு செமஸ்டர் மட்டும்தான் எழுத வேண்டியிருந்தது. அப்போதுதான் நர்சிங் படிக்க அழைப்பு வந்தது. அப்பா பணியிலிருந்து ரிடையர்டு ஆகிவிட்டார். குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். சகோதரியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதால் பி.எஸ்ஸி படிப்பை நிறுத்திவிட்டு நர்சிங்கில் சேர்ந்தேன்” என்று சொல்லும் மணிகண்டன் 1989-ம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்த முதல் பேட்ச் மாணவர். தற்போது செவிலிய கண்காணிப்பாளராக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். பெண்களால் கையாள முடியாத கடினமான வேலைகள் அல்லது சிக்கலான பணிகளுக்கு ஆண் செவிலியர்கள்தான் செல்கிறார்கள். மத்திய சிறைச்சாலைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, முதல்வர், பிரதமர் போன்ற முக்கியஸ்தர்களுக்காக உடன் செல்லும் மருத்துவக் குழு, அவசரங்கள் மற்றும் விபத்துகளில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை, மனநல மருத்துவமனை போன்றவற்றில் ஆண் செவிலியர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர்.

ஆண் செவிலியர்களுக்கான பிரதான பிரச்னையே அவர்களுக்கான அங்கீகாரம்தான்.

“யாராவது என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்கும்போது ஸ்டாஃப் நர்ஸ் என்று சொன்னால், ‘என்னது...கம்பவுண்டரா?’ என்றுதான் கேட்பார்கள். செவிலியர் என்று சொன்னால், ‘பெண்கள்தானே அந்த வேலையைச் செய்வார்கள். நீங்க எப்படி...?’ என்று அடுத்த கேள்வி வரும். அவர்களுக்கெல்லாம் விளக்கம் கொடுப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

திருமணத்துக்குப் பெண் தேடும்போது நான் செவிலியர் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். இதனால் பல வரன்கள் தட்டிப்போயிருக்கின்றன. என் மனைவி எனக்கு உறவினர்தான். ஆனாலும்கூட அவர்கள் குடும்பத்தினருக்கு நம்பிக்கையில்லாமல் பலமுறை விசாரித்துதான் பெண்ணைக் கொடுத்தார்கள்” எனும் கீதா கிருஷ்ணன், மனநல மருத்துவமனையில் 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.

“ஒருமுறை அட்மிஷனுக்காக வந்த ஒரு நோயாளி தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னை வீட்டுக்கு அனுப்பும்படியும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரின் குடும்பத்தினரும் உடன் வந்திருந்தார்கள். நான்தான் அவரை உள்நோயாளியாக அனுமதிப்பதற்கான நடைமுறை களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே சென்ற அவர் இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து இடுப்பிலே செருகிக்கொண்டு வந்துவிட்டார். இதை யாரும் கவனிக்கவும் இல்லை. உள்ளே வந்ததும் ‘நீ தான என்ன வெளியே விடமாட்டேங்குற’ என்று சொல்லித் தாக்க வந்தார். சில அடி தூரமே எனக்கும் அந்த நோயாளிக்குமிடையில் இருந்தது. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனர். உடனே அந்த நோயாளியிடம் பேசத் தொடங்கினேன். ‘உங்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடைமுறைகளைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். சீக்கிரம் நீங்கள் கிளம்பிவிடலாம். அந்தக் கம்பியைக் கீழே போட்டால்தான் நான் வேலை செய்ய முடியும்’ என்று பேசத் தொடங்கினேன். உடனே கம்பியைக் கீழே போட்டுவிட்டார். அதற்குப் பிறகு அவரைப் பேசிப் பேசியே சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைத்தேன். இதுபோன்ற சூழல்களில் பெண் செவிலியர்களால் நோயாளிகளைக் கையாள இயலாது. பெண் செவிலியர்களுக்கு நாங்கள் ஓடிச்சென்று உதவி செய்யவும் நேரிட்டிருக்கிறது. மனநல மருத்துவ மனையில் சில நோயாளிகள் மிகவும் உக்கிரமாக நடந்துகொள்வார்கள். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன” என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

நோயாளிகளை அக்கறையாகக் கவனிப்பதிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் பெண்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் ஆண் செவிலியர்கள்.

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் நான் முன்பு பணியாற்றிய மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். படுக்கையிலே இருப்பதால் தனக்குத் தேவையான அடிப்படையான வேலைகளைக்கூடச் செய்ய முடியாத நிலை. அப்படியே அழுக்காகப் படுக்கையில் கிடப்பார். நான் ஒவ்வொரு நாளும் பணிக்குச் சென்றதும் அவருக்கு டவல் பாத் எடுக்க வைத்து அவரைச் சுத்தம் செய்து கவனித்துக்கொள்வேன். சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வீட்டுக்குச் சென்றபோது கணவனும் மனைவியும் கையெடுத்து வணங்கினார்கள். வீட்டுக்கு வந்து அவரைக் கவனித்துக்கொள்ளும்படியும் கேட்டார்கள், ஆனால் ஒரு நிபந்தனையோடு. `எங்கள் மகனைப் போன்று எங்கள் வீட்டிலேயே இருக்கச் சம்மதிக்க வேண்டும்’ என்பதுதான் அந்த நிபந்தனை. அன்பான கட்டளையை மீற என்னால் முடியவில்லை. தினமும் மருத்துவமனையில் வேலை முடிந்ததும் அந்த முதியவரின் வீட்டுக்குச் சென்று அவரைக் கவனித்துக்கொள்வேன். அங்கேயே சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். இன்றும் அந்தக் குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினர்தான்” என்கிறார் மதுரை தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு காசநோய் மருத்துவமனையில் பணியாற்றும் சோ.சிவராமன். இவர் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டவர். “மேல் படிப்பு படித்து செவிலியர் கல்லூரிக்கு வகுப்பெடுக்கச் சென்றுவிட்டால் நோயாளிகளைத் தினமும் சந்திக்க முடியாதே. அதனால் உயர்கல்வி படிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் மறுத்துவிட்டேன்” என்கிறார்.

பொறுமை காத்துச் செயல்படுவதிலும் ஆண் செவிலியர்கள் தங்களை நிலைநாட்டிவருகிறார்கள்.

“நான் சிறைச்சாலைக்குப் பணி நியமனம் செய்யப்பட்ட பிறகுதான் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் பணியாற்றப் பழகிக்கொண்டேன். சிறைச்சாலைக்கு வருவோரில் பலர் குடிநோயாளிகளாகவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும் இருப்பார்கள். உள்ளே வந்துவிட்டால் அவையெல்லாம் கிடைக்காது என்பதால் மிகவும் உக்கிரமாக நடந்துகொள்வார்கள். அடிதடிவரைகூடச் சென்றுவிடும். அவர்களையும் கட்டுப்படுத்தி, சிகிச்சையளித்து, போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவைத்து வெளியில் அனுப்பும்போது, கண்ணில் நீர்நிறைய கையெடுத்து வணங்கிச் செல்வார்கள். அப்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி எந்த விருது பெற்றாலும் கிடைக்காது” என்கிறார் திருச்சி மத்திய சிறைச்சாலையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியர் சிலம்பரசன்.

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

20,000 பெண் செவிலியர்களுக்கு மத்தியில் 2,000 ஆண் செவிலியர்கள் மட்டுமே பணியாற்றிவருகிறார்கள். 2043ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆண் செவிலியர்களுக்கான தேவை ஏற்படும் என்று கூறி, தற்போது படிப்பையும் நிறுத்தி வைத்திருக்கிறது தமிழக அரசு.

ஓர் அவசரத்துக்கு பணியை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது தொடர்ச்சியாக இரண்டு, மூன்று ஷிஃப்டுகள் பணியாற்ற வேண்டும் என்றாலும் இன்முகத்தோடு எங்கள் பணியை ஆற்றிவருகிறோம். பெண் செவிலியர்களும் இதுபோன்ற உதவிகளைத் தயங்காமல் எங்களிடம்தான் கேட்பார்கள். சலிக்காமல் அதுபோன்ற உதவிகளையும் செய்துவருகிறோம் என்பதுதான் நாம் பேசிய அனைவரின் பதிலாகவும் இருந்தது.

சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்!

கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வேண்டா வெறுப்புடன் படிக்கத் தொடங்கி, மருத்துவச் சேவைக்குள் நுழைந்ததும் அதன் முக்கியத்துவம் புரிபடத்தொடங்கியிருக்கிறது ஆண் செவிலியர்களுக்கு. இப்போதும் கொரோனா வார்டில் அதிக அளவில் ஆண் செவிலியர்கள் தைரியத்துடனும் துணிச்சலுடனும் பணியாற்றிவருகின்றனர். சேவைக்கு ஆண், பெண் என்ற வேற்றுமை கிடையாது என்பதை நிரூபிக்கும் ஆண் செவிலியர்களும் சேவை தேவதைகள்தாம்!