Published:Updated:

சென்னையில் தொடங்கப்படும் தென் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம்... என்ன நன்மை?

மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம்
மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம்

தென் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம் அமைக்க சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகள் தென் மண்டலத்துக்குள் அடங்கும்.

சென்னையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் `தென் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம் (Regional Raw Drug Repository - Southern Plateau Region)' அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Regional Raw Drug Repository
Regional Raw Drug Repository

தேசிய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம் (Regional Raw Drug Repository) மற்றும் தேசிய மருந்துப் பொருள் அருங்காட்சியகம் (National Raw Drug Repository) போன்றவற்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகமும் சுமார் 5 கோடி ரூபாய் செலவிலும், தேசிய மருந்துப் பொருள் அருங்காட்சியகம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலும் நிறுவப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தென் மண்டல பகுதியின் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகமானது, சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அமையவுள்ளது. இதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனமானது முதன்மை நிறுவனமாகவும், யூனானி மருத்துவத்தின் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் இணை நிறுவனங்களாகவும் செயல்பட உள்ளன.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

தென் மண்டலத்திலிருந்து கிடைக்கப்பெறும் மருந்து மூலப் பொருள்கள் மற்றும் மருத்துவ தாவரங்களின் தன்மை, இயல்பு, மருத்துவ பண்புகள், வளரியல்பு, சாகுபடி தொழில் நுட்பங்கள், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஆராயப்பட்டு ஒரு பெரிய தரவுத்தளம் (Data base) நிறுவப்பட உள்ளது.

சென்னையில் அமையவிருக்கும் இந்த தென் மண்டல மருந்துப்பொருள் அருங்காட்சியகம் குறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர், பேராசியர் மரு. மீனாகுமாரியிடம் பேசினோம்.

மீனாகுமாரி
மீனாகுமாரி

``ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவத்திற்குத் தேவையான மூலிகை தாவரங்கள், கடல் பொருள்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பொருள்கள் இந்தியா முழுவதும் நிறைந்துள்ளன. அவற்றை மண்டல வாரியாக பிரித்து தனித்தனியே பதிவு செய்வதற்காகவே, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் இந்த அருங்காட்சியகங்கள் தொடங்கப்படுகின்றன. இதில் தென் மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம் அமைக்க தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகள் இந்த தென் மண்டலத்திற்குள் அடங்கும்.

கோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா? #DoubtOfCommonMan

இந்த ஆறு பகுதிகளிலிருந்தும் ஏறக்குறைய 500 வகையான மருத்துவ பொருள்கள் சேகரிக்கப்படும். இந்த மருத்துவ பொருள்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு பகுதிகளிலும் காணப்படும் பொதுவான ஒன்றாக இருக்கும். அதாவது அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு நிலவேம்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்றால், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட ஆறு பகுதிகளிலிருந்தும் அந்த தாவரம் சேகரிக்கப்படும்.

நிலவேம்பு
நிலவேம்பு

தாவர மூலிகை பொருள்கள் (நிலவேம்பு, நொச்சி, கண்டங்கத்தரி), விலங்குகளிடமிருந்து கிடைக்கும் மருத்துவ பொருள்கள் (மான்கொம்பு, தந்தம்), கடல் பொருள்கள் (சிப்பி, சங்கு) முதலானவை இதில் அடங்கும். இதுபோல் ஒவ்வொரு மருந்துப்பொருளும் ஆறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, பின்பு அடுத்தடுத்த செய்முறைகளுக்குக் எடுத்துச் செல்லப்படும்.

மூலிகை தாவரத்தின் மருத்துவ குணங்கள் அது வளரும் இடங்களின் தட்பவெப்பநிலை, மண்ணின் தன்மை, நீரின் தன்மை போன்றவற்றை பொறுத்து மாறுபடும். கேரளாவில் காணப்படும் நிலவேம்பின் தன்மை தமிழகத்தில் காணப்படும் நிலவேம்பின் தன்மையோடு பொருந்திப்போகாது. அவற்றில் காணப்படும் ரசாயனங்கள், தாது உப்புக்கள், நோய் தீர்க்கும் குணங்கள் தங்களுக்குள் சிறிது வேறுபடும். இதேபோல்தான் விலங்கு மற்றும் கடலிலிருந்து கிடைக்கும் பொருள்களும்.

மருத்துவ பொருள்கள்
மருத்துவ பொருள்கள்
கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை பலன் அளிக்குமா?

இந்த வித்தியாசங்களை எல்லாம் கண்டறிந்து ஆவணப்படுத்துவதே எங்களின் நோக்கம். இதில் மூன்று குழு ஈடுபடவுள்ளது. முதல் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்மண்டல பகுதிகளுக்குச் சென்று மூலிகைகளையும், மருத்துவ பொருள்களையும் சேகரித்துக்கொண்டு வருவார்கள். இரண்டாம் குழுவினர் சேகரித்து வந்த மூலிகைகளைப் பதப்படுத்தவும், அவைகளினுடைய மருத்துவ மற்றும் வேதியியல் தன்மையினை ஆராய்ந்து ஆவணப்படுத்துவார்கள். மூன்றாம் குழுவான தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இதற்கான இடவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உலக தரத்தில் ஏற்படுத்தி, இதனை மக்களுக்கும், மருத்துவ உலகுக்கும் பயன்படும் வகையில் காட்சிப்படுத்த உள்ளது. இதற்கான நிதியை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்களின் குழுமம் வழங்கியுள்ளது.

இந்த மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகமானது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது உலகளவில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் தாவரவியல் வல்லுநர்கள், மருத்துவ மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் அவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்குப் பயனுள்ளதாக அமையும்.

மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம்
மண்டல மருந்துப் பொருள் அருங்காட்சியகம்

மேலும் விவசாயிகளுக்கு மூலிகை சாகுபடிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் சித்த மருத்துவ கல்வி சார்ந்த துறையில் இது ஒரு முக்கிய அங்கமாக அமைய உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த மருத்துவ குணமிக்க தாவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு இது மூலிகை மருத்துவ பொருள்களின் நூலகமாகப் பயன்படும்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு