கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

எப்படியாச்சும் ஊருக்குப் போய்டணும்னு தோணுது” என்கிறார்கள்.

எங்கும் இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தமிழக - ஆந்திர எல்லையில் இருந்த நெடுஞ்சாலை ஒன்றில் நின்றுகொண்டிருந்தேன். தாங்கள் இதுவரை உழைத்துச் சேர்ந்திருந்த உடைமைகளோடு புலம்பெயர் தொழிலாளர்கள் மூச்சிரைக்க நடந்துகொண்டிருந்தார்கள். இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தைக் கடந்து ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டால் அங்கிருந்து எப்படியாவது தங்கள் மாநிலங்களுக்குச் சென்று சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்களை நடக்க வைத்திருந்தது. எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து புதர்களிலும், சாலையின் ஓரங்களிலும் அவர்கள் ஒளிந்து கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் சிலர் தலையில் சுமைகளை வைத்துக் கொண்டு இரண்டு பனைமர அகலமுடைய நீர்த்தேக்கம் ஒன்றினைக் கடந்து கொண்டி ருந்தார்கள். உடனடியாக அவர்களை நோக்கி ஓடத் தொடங்கினேன். அருகில் சென்று பார்த்தால் அத்தனை பேரும் இளைஞர்கள். தங்கள் உடைகளை அணிந்துகொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியவர்களிடம் விசாரித்ததில் “உத்தரப்பிரதேசத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தோம், எங்களை வேலைக்கு அழைத்து வந்தவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சாலையில் நடந்தால் காவல்துறையினர் அடிக்கிறார்கள். எங்களோடு நடந்து வந்த சிலரை ஒரு லாரியில் ஏற்றி மீண்டும் சென்னைக்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். அதனால்தான் தண்ணீரில் இறங்கி நடந்து வந்தோம்” எனச் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!
துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பத்துப் பேர் கொண்ட குழு ஒன்று நீர்த்தேக்கத்தின் எதிர்க்கரைக்கு வந்து சேர்ந்தது. அவர்களில் ஒரு இளைஞன் வேகமாகத் தனது உடைகளைக் களைந்துவிட்டு ஆற்றில் குதித்து ஆழம் பார்த்துக்கொண்டிருந்தான். உடனடியாக அங்கே சென்றேன். எல்லோரும் உடைகளைக் களைந்துவிட்டு நீரில் இறங்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ‘‘இதில் இறங்கிக் கடக்க வேண்டாம், ஆழம் அதிகமாக இருக்கிறது. சாலையிலேயே நடந்து செல்லுங்கள்’’ என்றேன். அவர்கள் யாரும் என் வார்த்தைகளைக் கேட்கத் தயாராக இல்லை.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!
துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

“இப்போதுதான் நிலைமை சரியாகிக் கொண்டிருக்கிறதே, நீங்கள் பணிபுரிந்த இடத்திலேயே பாதுகாப்பாகத் தங்கியிருந்து, ரயிலில் பயணிக்கலாமே?” எனக் கேட்டேன். இதற்கு அவர்களில் பெரும்பாலானோர் “எங்களுக்கும் இந்த வெயிலில் இவ்வளவு தூரம் நடப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்களுக்கு உணவு கிடைப்பதிலும், தங்கியிருக்கும் இடத்திலும் பிரச்னைகள் வருகிறது. முன்பு கொடுத்ததைவிட பல மடங்கு குறைவான சம்பளத்தைத்தான் கொடுக்கிறார்கள். கேட்டால் இவ்வளவுதான் சம்பளம், இஷ்டமிருந்தா வேலை செய் இல்லனா இப்போவே கிளம்புன்னு சொல்றாங்க. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. போலீஸ் ஸ்டேஷன்ல போய்க் கேட்டோம். எல்லாரோட விவரங்களையும் கேட்டு வாங்கி வெச்சுக்கிட்டு. உங்க போனுக்கு ட்ரெயின் எப்போ கிளம்பும், என்னைக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரணும்னு மெசேஜ் வரும். அதுவரைக்கும் உங்க இடத்துலயே இருங்கன்னு சொல்றாங்க. இங்கே இருக்கவே பிடிக்கல சார். எப்படியாச்சும் ஊருக்குப் போய்டணும்னு தோணுது” என்கிறார்கள்.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

தமிழகத்திலிருந்து அரசிடம் அனுமதி பெற்று, தங்களது சொந்தச் செலவில் பேருந்துகளை ஏற்பாடு செய்தும் பல்வேறு தொழிலாளர்கள் பயணிக்கிறார்கள். ஒருவருக்கு ரூ.8,000 முதல் 12,000 வரை வசூலிக்கிறார்கள். ஒரு பேருந்துக்கு இருபது பேர் வரை பயணிக்கலாம். அதற்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் வழியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. தன்னார்வலர்கள் மூலமாகவும் பலர் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடி ஒன்றில் பேருந்துகளிலிருந்து பொதுமக்களை இறக்கி அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்தும் அரசின் அனுமதிக் கடிதத்தை சோதனை செய்த பின்னருமே ஆந்திராவுக்குள் அனுமதிக்கின்றனர். அந்த இடமே ஏதோ சர்வதேச எல்லையைப்போலக் காட்சியளித்தது.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்குச் செல்லும் வழியெங்கும் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தங்களது காவல்நிலைய எல்லைக்குள் பயணிக்கும் தொழிலாளர்களைப் பிடித்து, கிடைக்கும் வண்டிகளில் ஏற்றி மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பதையும் பார்க்க முடிந்தது. இதற்கு பயந்தே பகல் முழுவதும் கிடைக்குமிடங்களில் ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையிலும் இரவுகளிலும் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் புதுவோயலில் தனியார் கல்லூரி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கமாலுதீன் அன்சாரியிடம் பேசினேன். “சரியான வேலை இல்ல சார். சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது. என்னோட சொந்த ஊரு பீகார். ரொம்ப வருஷமா இருக்கிறதால இங்கே உள்ள அட்ரஸ்லயே ஆதார் கார்டுகூட வெச்சிருக்கேன். ஊருக்குப் போயிட்டா கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கு. குழந்தைகளைக் கூட்டிகிட்டு ரொம்ப தூரமெல்லாம் நடக்க முடியாதுன்னு தெரியும். எப்படியாச்சும் ரயில்ல அனுப்பி வெச்சுட்டா நல்லாருக்கும்” என்றார்.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

தன்னார்வலர்கள் கொடுத்த உணவுப் பொட்டலத்தைக் குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துக்கொண்டிருந்த மிதிலேஷ் ராமை சந்தித்துப் பேசினேன். “கும்மிடிப்பூண்டி சிப்காட்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். இந்தக் கொரோனா டைம்ல வேலை பார்க்க பயமா இருக்கு. சென்ட்ரலுக்குப் போயிட்டா ஊருக்குப் போய்டலாம்னு கிளம்பினோம். இப்போ எங்களை இங்க தங்க வெச்சிருக்காங்க. சீக்கிரமே அனுப்பிடுவோம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. அந்த நம்பிக்கையிலதான் இங்க இருக்கோம். எனக்கு மூணு பெண் குழந்தைங்க. முதல் பொண்ணுக்கு நாலு வயசு, ரெண்டாவது பொண்ணுக்கு ரெண்டு வயசு, கடைசிப் பொண்ணுக்கு ஒன்பது மாசம்தான் ஆகுது. இவர்களை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் எப்படி ஊருக்குப் போகப் போறோம்னு தெரியல” எனக் கலங்கினார்.

துயரத்தின் சாட்சியங்கள் நாம்!

மொழியும் கலாசாரமும் வேறுபட்டாலும் இத்தனை நாள் இவர்கள் நம்முடன் இருந்தவர்கள்; வெயிலையும் மழையையும் நம்மோடு பகிர்ந்துகொண்டவர்கள். நாம் எதற்காக உழைத்தோமோ அதற்காகத்தான் அவர்களும் உழைத்தார்கள். இப்போதோ காலம் கைவிரிக்க, குழந்தைகளுடனும் சுமைகளுடனும் இருளின் நீண்ட பாதையில் பயணித்துக்கொண்டி ருக்கிறார்கள். துயரத்தின் சாட்சியங்களாய் நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கிறோம்.