Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவசங்கள்! - ஆர்வம்காட்டாத தாராவி மக்கள்

தாராவி சென்டரில் தடுப்பூசி
தாராவி சென்டரில் தடுப்பூசி

சோப்பு, ஜூஸ் என்று இலவசங்களை அள்ளிக்கொடுத்தாலும் கொரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மும்பை தாராவி மக்கள் ஆர்வம்காட்டாமல் இருந்துவருகின்றனர்.

கொரோனா முதல் அலையின்போது மும்பை தாராவியில் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தது. மாநகராட்சி நிர்வாகம் போராடி தாராவியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியது. தாராவி ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியாகவும், குட்டித் தமிழ்நாடாகவும் இருக்கிறது. தற்போது மீண்டும் தாராவியில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதையடுத்து தாராவியில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 60 அடி சாலையில் மிகவும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசி போடத் தொடங்கிய நாள்களிலிருந்து இதுவரை பெரிய அளவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்காட்டாமல் இருக்கின்றனர். தினமும் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிட்டு அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மக்கள்தான் வர மறுக்கின்றனர்.

முண்டியத்து ரயிலில் ஏறும் பயணிகள்
முண்டியத்து ரயிலில் ஏறும் பயணிகள்

மார்ச் 22-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் தடுப்பூசி சென்டரில் இதுவரை 6,500 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த சென்டருக்கான மருத்துவ அதிகாரி ஆப்ரின் கான் இது குறித்துக் கூறுகையில், ``தினமும் ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடலாம் என்ற இலக்குடன்தான் இதை ஆரம்பித்தோம். ஆனால், இதுவரை 6,500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடவரும் மக்களை ஊக்கப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு சோப்பு, குடிக்க ஜூஸ், தண்ணீர் பாட்டில் போன்றவை கொடுக்கப்படுகின்றன. சோப்பு மற்றும் ஜூஸ் வகைகளைத் தனியார் நிறுவனங்களும் அமைப்புகலும் கொடுக்கின்றன. இதை வாங்குவதற்கென்றே அதிக அளவில் பெண்கள் வருகின்றனர். ஆனால் அதிகமான பெண்களிடம் ஸ்மார்ட்போன் இருப்பதில்லை. இதனால் அவர்களைப் பதிவு செய்வது சிரமமாக இருக்கிறது. தடுப்பூசி பதிவுக்காக இரண்டு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன' என்றார் .

இலவசங்களைக் கொடுத்தும் தினமும் ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை ஒரு நாளும் தாராவி சென்டர் எட்டவில்லை. ஆனால், இந்த இலவசங்களால் மற்ற பகுதி மக்களும் இதே போன்று கேட்க வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மும்பையில் வேறு சில சென்டர்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பிஸ்கெட், டீ அல்லது காபி கொடுக்கப்படுகிறது.

தாராவி
தாராவி

இதற்கிடையே கொரோனா அதிகரிப்பு காரணமாக வருமானம் இல்லாமல் மும்பையிலுள்ள டாக்ஸி டிரைவர்கள் 50 சதவிகிதம் பேர் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். மும்பையில் 48,000 டாக்ஸிகள் ஓடுகின்றன. மேலும், ஆட்டோ டிரைவர்களும் 35 சதவிகிதம் பேர் மும்பையை காலி செய்துவிட்டுத் தங்களது சொந்த ஊருக்கு, சொந்த ஆட்டோவிலேயே சென்றுவிட்டனர். மேலும் பலர் தொடர்ந்து சொந்த ஊருக்குச் சென்றவண்ணம் இருக்கின்றனர்.

மும்பையில் இரவு நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இரவில் இயக்க முடியாது. எனவே, வருமானமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இது குறித்து மும்பையைக் காலி செய்துவிட்டு செல்லும் ராம்தார் என்ற டாக்ஸி டிரைவரிடம் கேட்டதற்கு, ``முன்பு தினமும் 70 கிலோமீட்டர் அளவுக்கு வண்டியை ஓட்டுவேன். ஆனால் இப்போது 20 கிலோமீட்டர் அளவுக்கு மட்டுமே வண்டி ஓடுகிறது. எனவேதான் சொந்த ஊருக்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தார்.

மும்பையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் சுபாஷ்பாண்டே, போதிய வருமானம் இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ``கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவேதான் சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்குச் செல்ல மிகவும் போராடி டிக்கெட் எடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மும்பை புறநகர்ப் பகுதியில் மட்டும் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. மே மாதம் பள்ளிகளுக்கும் விடுமுறைவிடப்படும் என்பதால், மும்பையிலிருந்து அனைத்துத் தரப்பினரும் சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

மகாராஷ்டிரா: `எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் கிடைத்தால்..!’ - சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு