Election bannerElection banner
Published:Updated:

அதிகரிக்கும் எண்ணிக்கை, ஊரடங்கு, உச்சநிலை... தமிழகத்தின் உண்மை நிலை என்ன?

கொரோனா
கொரோனா

பொதுமக்களுக்கு உணர்வு வரும் வகையில் கொரோனாவின் தீவிரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால், சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதில், “கொரோனா வைரஸ் நோயை எப்படித் தடுப்பது என்ற படிப்பினையை நாம் அறிந்துகொண்டுள்ளோம். லாக்டௌன் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் நோயைக் கட்டுப்படுத்த உதவியிருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைபவர்கள் அதிகரித்துள்ளனர். நோயின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. நாம் அனைவரும் இதே போன்று இணைந்து பணியாற்றினால் இந்தியாவில் உச்சக்கட்ட பாதிப்பு ஏற்படாமலேயே போகவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு பணியாற்றத் தவறினால் பல கொடூரங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

Fight against Corona
Fight against Corona

பல்வேறு நிபுணர்கள் இந்தியாவில் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத நடுவில் உச்சபட்ச பாதிப்பு (Peak) ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லாவ் அகர்வாலின் கூற்று சற்று முரணாகவே படுகிறது.

ஆனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியாவும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். “தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் மருத்துவ கட்டமைப்புகளையும் பரிசோதனை வசதிகளையும் மேம்படுத்துவதற்கான நேரத்தை அளித்திருக்கின்றன. நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்காமல் நிலையாகவே அதிகரித்து வருகிறது. அப்படிப் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, பாதிப்பே இல்லாத பச்சை மண்டலங்களில் புதிதாக யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படாமலும் தடுக்க வேண்டும். எனினும், இந்தியாவில் குளிர்காலத்தின்போது மீண்டும் கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பார்வை இப்படியிருக்கத் தமிழகத்திலோ நாளுக்கு நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உச்சக்கட்ட பாதிப்பு என்பது இந்தியாவில், தமிழகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி மாரியப்பனிடம் பேசினோம்:

ஊரடங்குக்குள் ஓர் ஊரடங்கைச் சரியாக அமல்படுத்த அரசு தவறிவிட்டது.
சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

“இந்தியாவை வடகிழக்கு பகுதியிலுள்ள எல்லைப்புற மாநிலங்கள், வடகிழக்கு, மேற்கு, தெற்கு என்ற பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்து பார்க்கும்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே அதிகப்படியான பாதிப்பும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. காரணம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிகப்படியான பயணிகளை அந்த நகரம் கையாண்டதுதான். அதற்கு அடுத்தபடியாகத் தெற்கு பகுதியில் கேரளம், தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதைத் தவிர்த்து நாட்டின் பிற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

``குழந்தை பிறந்த பிறகு பிரித்துவிட்டனர்"- காதல் மனைவியின் `கொரோனா வேதனை'யைப் பகிரும் கணவர்

அதே போன்று தமிழகத்தை 10 மண்டலங்களாகப் பிரித்துப் பார்த்தால் அதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில்தான் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. உயிரிழப்பும் 20-க்கும் மேல் உள்ளது. பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. பல மாவட்டங்களில் உயிரிழப்புகளே இல்லை என்ற நிலை உள்ளது. நோய்ப் பரவல் அதிகமுள்ள சென்னையில் கூடுதல் கண்காணிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ICMR Former Scientist Mariappan
ICMR Former Scientist Mariappan

தமிழகத்தைப் பொறுத்தவரை நோயாளியுடன் தொடர்புடைய மற்றவருக்குத்தான் நோய் கண்டறியப்படுகிறது. அதனால் நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிவதும் அவர்களைக் கண்காணிப்பதும் எளிதாக இருக்கிறது. நமது மாநிலத்தில் சமூகப் பரவலே இன்னும் ஏற்படவில்லை என்ற நிலைதான் இருக்கிறது. அதனால் இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி உச்சக்கட்ட நிலை என்பது அத்தனை தீவிரமாக இருக்காது. சில பகுதிகளில் மட்டும் நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும்” என்றார்.

இந்த விவரங்களை வைத்துப் பார்க்கும்போது நாடும் மாநிலமும் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழும்புகிறது.

“நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. அது ஓரளவுக்குச் சரியாக இருந்தாலும், அரசின் பக்கம் சில குளறுபடிகளும் இருக்கவே செய்கின்றன.

Dr.Ravindranath
Dr.Ravindranath

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஆரம்பத்திலிருந்தே சரியாகக் கையாளவில்லை. அவர்களைத் தங்கள் மாநிலத்துக்கு அனுப்பாமல் அந்தந்த மாநிலத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பரிசோதனை, உணவு போன்ற விஷயங்களையும் அந்தந்த மாநிலம் கவனித்துக்கொண்டது. தற்போது அந்தத் தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்குத் திரும்ப அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் அவர்கள் மாநிலத்துக்குச் செல்லும்போது அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேறு மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வருவோருக்கும் இதே நிலைதான்.

தொடக்கத்திலேயே அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால் இரட்டை வேலைப்பளுவையும், பல்வேறு விரயங்களையும் தவிர்த்திருக்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்துக்கு வரவுள்ளனர். அவர்கள் அனைவரையும் கையாள்வதும் சிரமம்தான்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகின்றனர். ஊரடங்குக்குள் ஓர் ஊரடங்கைச் சரியாக அமல்படுத்த அரசு தவறிவிட்டது. இன்னும் எளியமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பொதுமக்களுக்கு உணர்வு வரும் வகையில் கொரோனாவின் தீவிரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதனால் நோய்ப் பரவலில் உச்சக்கட்ட நிலைக்கு செல்வதைத் தவிர்க்க இயலாது” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

Lockdown
Lockdown
"எபிடெமிக்கில் தமிழகம்!" - கொரோனா உண்மை நிலவரம் என்ன?

இந்த விஷயத்தை தமிழக அரசு எவ்வாறு கையாள்கிறது, தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்று தமிழக பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் வடிவேலிடம் கேட்டோம்:

“தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்படாத வகையில் அனைத்துப் பணிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் எங்கும் கொத்துக்கொத்தாக பாதிப்பு ஏற்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் கோயம்பேடு சந்தையில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த இடம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது.

தற்போது சென்னை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள் (Containment Zones) உருவாக்கப்பட்டு, அங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் சென்று, யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா என்று சோதனை செய்கின்றனர். இதனால் விடுபட்ட நோயாளிகளைக்கூட கண்டறிய முடியும்.

Corona spread
Corona spread

கொரோனா வைரஸ் என்பது முற்றிலும் ஒரு புதிய நோய். இதன் தீவிரம் எப்படி இருக்கும் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. பிற நோய்களின் பரவல் முறைபோன்று இதை கணிக்க முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்ட நிலையை அடையுமா இல்லையா என்று கூற முடியாது. ஆனால் தீவிரம் அதிகரிக்காமல் இருப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வருகிறோம்” என்றார் அவர்.

நோயின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு