Published:Updated:

நியூ நார்மலும் உளவியல் சிக்கலும்... இந்திய நகரங்களில் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

இந்தியாவைப் பொறுத்தவரைத் தற்கொலைகளை வெறும் உளவியல் பிரச்னையாகச் சுருக்கிவிட முடியாது. அதற்கு மேலும் புறநிலையான சமூகவியல் சிக்கல்களே முன்னணியில் நிற்கின்றன.

இந்தியாவின் முக்கியமான வர்த்தக நகரங்களில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா. வட இந்தியாவில் பல மாநிலங்களிருந்து இடம்பெயர்ந்து இங்குத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். கொரோனாவுக்கு பிறகான லூதியானாவின் நிலையைச் சுருக்கமாக மூவரின் கதை வழியாகப் பார்ப்போம்.

42 வயதுடைய ஹர்ஜித் சிங் வெளிநாட்டுப் பயணச் சீட்டு முகவராகப் பணிபுரிந்தார். ஊரடங்குக்குப் பிறகு பன்னாட்டு விமானங்கள் மற்றும் விசா செயற்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இறுதியாக ஏற்கனவே ஒன்றிரண்டு நபர்களிடம் விசா பெறப் பணம் பெற்றிருந்தார். தொழில் முடங்கியவருக்கு அதற்கு மேல் பிழைக்க வழியில்லை. கடந்த ஜூலை 12 அன்று காணாமல் போனார். லூதியானா சாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஜூலை 28 அன்று மோகா கால்வாய் அருகே பிணமாகக் கிடைத்தார் ஹர்ஜித் சிங்.

தற்கொலை
தற்கொலை

அஜித் குமார் ராய்க்கு வயது 38. லூதியானாவில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்குக்குப் பிறகு ரேஷன் உணவை அவரால் பெறமுடியவில்லை. அவரது மனைவி சவிதாவையும் தொழிற்சாலையிலிருந்து இடைக்கால வேலை நீக்கம் செய்தார்கள். மத்திய அரசின் உதவி எண்ணிற்கு அழைத்துப் பதிவு செய்தார் அஜித் குமார். இறுதியாக, மே 9 அன்று தனது ராஜிவ் காந்தி காலணி இல்லத்தில் தூக்கிட்டுக்கொண்டார். கணவர் இறந்தபிறகு தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊரான உத்திர பிரதேச கிராமத்திற்குச் சென்றுவிட்டார் சவிதா.

சஹில் அரோரா (22) பஞ்சாப் தொழில்நுட்ப கல்லூரியில் பார்மஸி இறுதி ஆண்டு படித்து வந்தார். இறுதி தேர்வு எழுதி விரைவில் வேலைக்குச் சென்றுவிடலாம் என்று காத்துக் கொண்டிருந்தவருக்கு ஊரடங்கு பேரிடியானது. தேர்வுகள் தள்ளிப்போனது. நிலைமை முற்றிலும் மாறியது. வருங்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் சூழ, வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாளுக்கொரு தற்கொலை செய்தியை லூதியானாவில் கேட்டுவிடலாம். கடந்த ஏப்ரல் 1-லிருந்து ஜூலை 31 வரை அங்குத் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 120. இது முதல் மூன்று மாத சராசரியை விட இருமடங்கு அதிகம். லூதியானா ஓர் உதாரணம் மட்டுமே. ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும் ஒரு துயர் இருப்பதுபோல், இந்தியாவின் ஒவ்வொரு நகரும் இதன் சாட்சியமாகியிருக்கிறது.

தற்கொலை
தற்கொலை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கை அறிவித்தது இந்திய அரசு. ஊரடங்கு, சமூக இடைவெளி, தீவிர கண்டிப்பு, முகக்கவசம் என 'புதிய யதார்த்தத்தை' கண்டது நாடு. இந்தப் புதிய வாழ்க்கை உளவியலாகப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அருகில் யாருமின்றி, போக்குவரத்தின்றி நகரங்களில் மாட்டிக்கொண்ட தனிமனிதர்களை வெறுமை சூழ்ந்தது. மன அழுத்தங்களும் நிச்சயமற்ற நிலையும் வாழ்வை நகர்த்தியது. இது பலருக்கும் தற்கொலை எண்ணங்களுக்குக் காரணமாகியது. மதுபான கடைகள் மூடப்பட்ட ஊரடங்கின் ஆரம்ப நாள்கள் பலரையும் பாதித்ததாக ஒரு பொதுக் கருத்து உள்ளது.

இவையன்றி நாளுக்கு நாள் அதிகரித்த நோய் குறித்த எண்ணம் பலரை அச்சுறுத்தியது. மேலும், பழக்கமற்ற ஊரடங்கு வாழ்க்கை பல வழிகளில் நமக்கு ஏற்றவிதமாக இல்லை. வீட்டுக்குள் முடங்கிய சிறுவர்களுக்கு மொபைல் மட்டுமே உலகமானது. பெற்றோர்கள் மொபைலை வழங்க மறுத்தால் அது விபரீதமாகிறது. ஊரடங்கில் மொபைலை பிடுங்கிவிட்டார்கள் என்று சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த மதுமிதா என்ற பெண் தற்கொலை செய்தது இவ்வாறுதான். பல இடங்களில் குடும்ப வன்முறையும் அரங்கேறியது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சண்டை ஏற்பட்டாலும் தீர்க்க முடியாத பிரச்னையாக மாறியது. லூதியானா குருதேவ் நகரைச் சேர்ந்த கணவன் ஒருவன், கடந்த ஜூன் 23 அன்று தனது மனைவியைக் கோடாரியாலேயே அடித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான். இதே நகரில் தாந்திரான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தன் அண்ணன் விளையாட மொபைல் தரவில்லை என்று மே 16 அன்று தற்கொலையில் பலியானார்.

தற்கொலை
தற்கொலை

ஊரடங்கு சவாலான காலமாக இருந்தாலும் அதன் முதன்மை சவாலாகப் பொருளாதார நிலையே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைத் தற்கொலைகளை வெறும் உளவியல் பிரச்னையாகச் சுருக்கிவிட முடியாது. அதற்கு மேலும் புறநிலையான சமூகவியல் சிக்கல்களே முன்னணியில் நிற்கின்றன. வேலையிழப்பு, வருமானமின்மை, பசி, வறுமை, எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றிலான தற்கொலைகளே அதிகம். பல புள்ளி விவரங்களும் இதனை நிரூபிக்கின்றன. குறிப்பாக, இந்த ஊரடங்கு இந்தியாவின் நகர வாழ்க்கையில் மீள முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

`கொண்டாட்டத்தின் நகரமாக' கருதப்படும் கொல்கத்தாவே இன்று வேதனையாக காட்சியளிக்கிறது. ஏப்ரலிலிருந்து ஜூன் வரை இங்கு நிகழ்ந்த தற்கொலைகள் 113.

உதவும் நிலையின்மையும் முறையற்ற வாழ்வும் அவர்களை அதிகம் பாதித்திருக்கிறது. பலரும் இயற்கைக்கு மாறான எதிர்பாராத இறப்புகள் என்கிறார்கள் கொல்கத்தா போலீசார். சலூன் கடைக்காரர் தொடங்கி தொழில்நுட்ப வல்லுநர் வரை வருமானமிழப்பால் தமிழகத்தில் கணிசமாகத் தற்கொலைகள் நிகழ்கின்றன. தமிழகத் தற்கொலைகளின் முதன்மை காரணமாகக் கடன் நிறுவனங்கள் உள்ளன. அரசு போதிய நேரம் கொடுத்தும் சாமானிய மக்களை மிரட்டும் தனியார் வங்கிகள் மற்றும் முறைசாரா நிறுவனங்கள் முக்கிய காரணியாகின்றனர். இதன் பொருட்டே சமீபத்தில் தஞ்சாவூரில் வெல்டராக பணிபுரியும் ஒருவர் தீவைத்துக் கொண்டது பரபரப்பானது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்களின் பொருளாதார சுமையைத் தீர்க்க அரசு மத்திய அரசு சரியான முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. அவசர உதவி எண்ணை வழங்கியதுதான் இந்த அரசின் மிகப்பெரிய சாதனையா என்ற கேள்வியை எதிர்கட்சிகளும் முன்வைக்கின்றன. பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையையும் மனநல உறுதியையும் வழங்க ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது. பெரும்பாலான நாடுகள் சுகாதார பட்ஜெட்டில் மனநல மருத்துவத்திற்கென 2% சதவீதம் ஒதுக்குகின்றன. ஆனால் இந்தியா செலவழிப்பதோ வெறும் 0.05% மட்டுமே.

கொல்கத்தாவில் தற்கொலைகளைத் தடுக்க முடியாமல் போனதற்கு மனநல மருத்துவ பற்றாக்குறைதான் காரணம் என்கிறார்கள் போலீசார். சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு மன அழுத்தத்திற்கான சிகிச்சை முக்கியப் பேசுபொருளானது. கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கே இங்கு போதிய சிகிச்சை கிடைக்காதது நடைமுறை யதார்த்தமாக உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவரின் தற்கொலை இதை உறுதிப்படுத்தியது. 2001-ம் ஆண்டிலிருந்து சுகாதாரத்திற்கான செலவுகளைக் குறைத்துக்கொண்டே வரும் இந்தியா, கடந்த பட்ஜெட்டில் மொத்த ஜிடிபியில் 3.5% மட்டுமே சுகாதாரத்திற்கு ஒதுக்கியது என்று உலக வங்கி குறிப்பிடுகிறது. ஆனால், உலக சராசரி 10% உள்ளது.

கொரோனா: நீண்டகால பாதிப்பு முதல் அக்டோபர் அச்சம் வரை... இனிதான் நாம் ரொம்ப உஷாரா இருக்கணும்!
கொரோனா
கொரோனா

இந்திய ஊரடங்கையும் அதன் பிரச்னைகளையும் பிரிக்கும்போது ஆரம்பக் கட்டம் மட்டுமே தனிமை மற்றும் நோய் குறித்த அச்சம் இருந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல வாழ்வாதாரம் மட்டுமே முதன்மை நோக்கமாக மாறியது. பொது போக்குவரத்து போன்றவை முடங்கியிருந்த நிலையில் பலரும் வாழ்க்கையை இழந்து விளிம்புக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய சமூக அமைப்பின் தோல்வியே தற்கொலைகளாகின்றன.

அடுத்த கட்டுரைக்கு