Published:Updated:

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... உண்மை நிலை என்ன?

சென்னையில் குறையும் கொரோனா தொற்று
சென்னையில் குறையும் கொரோனா தொற்று

"லாக்டௌன் நடவடிக்கைகளின் மூலம் சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனாவின் உச்சநிலையைத் தாமதிப்படுத்தியிருக்கிறோமே தவிர, இன்னும் கடந்துவிடவில்லை."

கொரோனா வைரஸிலிருந்து சென்னைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதா?

- இந்தக் கேள்விதான் சென்னைவாசிகள் உட்பட அனைத்து தமிழக மக்களின் மனதிலும் எழுந்துள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 2,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அரசின் செய்திக் குறிப்பில் சென்னையில் 1,168 நோயாளிகளே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று சென்னையில் 1,140 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai
Chennai

படிப்படியாக உயர்ந்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே முறையில் (Pattern) தான் நோய் பரவியது. நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது போலவேதான் தொற்றும் படிப்படியாகக் குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் மட்டும் திடீரென்று தடாலடியாக எண்ணிக்கை குறைந்தது எப்படி என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

மிரட்டும் அரசு!

இது தொடர்பாக சென்னையில் பணியாற்றும் மருத்துவரிடம் விசாரித்தபோது, அவர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாகவே இருந்தன.

"சென்னையில் கொரோனா நோயாளிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. நிலைமை அரசின் கையை மீறிப் போய்விட்டதால், உண்மையை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாகத் தனியார் பரிசோதனை மையங்களை அதிகமான எண்ணிக்கையில் கோவிட்-19 பரிசோதனை செய்யக் கூடாது என்று அரசின் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

லாக்டௌனுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் கொரோனா தீவிரம் ஜூலை 15-ம் தேதி வாக்கில்தான் தெரிய வரும்.
மருத்துவ செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்
Corona Live Updates: தமிழகத்தில் 2,000-த்தைக் கடந்த பலி எண்ணிக்கை! புதிதாக 4,328 பேருக்கு பாதிப்பு

அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஆய்வகங்கள் அரசின் சார்பாகவே செயல்படும் என்பதால் அங்கும் அதே வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும். தவறான தகவல்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்குப் பதில் அலட்சியமான மனநிலையில் செயல்படுவார்கள். அரசு உண்மை நிலையை மறைப்பது நோயின் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும்" என்கிறார்.

உண்மைதான்! ஆனால்...

சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், அரசு தெரிவிக்கும் அளவுக்கு குறைவாக இருக்கிறதா என்பது சந்தேகமே என்கின்றனர் மருத்துவ சமூக செயற்பாட்டாளர்கள்.

இது தொடர்பாகப் பேசிய மருத்துவச் செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், "சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படுக்கைகளே இல்லாமல் நிரம்பி வழிந்து வந்த நிலையில், தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் காலியாக உள்ளன. மருத்துவமனையில் அட்மிஷனுக்காகச் செல்வோருக்கு எளிதாக இடங்கள் கிடைக்கின்றன.

Covid-19 testing labs
Covid-19 testing labs

லாக்டௌன் நீட்டிக்கப்பட்டதன் விளைவாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். தற்போது லாக்டௌனுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் தொற்றின் தீவிரம் எப்படி உள்ளது என்பது ஜூலை 15-ம் தேதி வாக்கில்தான் தெரிய வரும். ஆனால், அதற்குள்ளாகவே பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை.

தற்போது சராசரியாக 100 பேரைப் பரிசோதித்தால் 35 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை 5 அல்லது அதற்கும் கீழ் குறைந்தால்தான் தொற்று பாதிப்பு உண்மையாகவே குறைந்துவிட்டது என்று அர்த்தம். பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தால் சரியான கணக்கீடு கிடைக்காது.

உச்சநிலை எப்போது?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநிலையைக் கணித்தன. அதில் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி செப்படம்பர் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகத்தில் உச்சநிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் இதற்கு முந்தைய நிலையை வைத்து கணிக்கப்பட்டவை. லாக்டௌன் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் உச்சநிலை குறித்த புதிய கணக்கீட்டை ஆராய்ச்சி அமைப்புகள் வெளியிட வேண்டும்.

Dr.Santhi Ravindranath
Dr.Santhi Ravindranath

லாக்டௌன் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் உச்சநிலையை சற்று தாமதிப்படுத்தியிருக்கிறோமே தவிர, அதை இன்னும் கடந்துவிடவில்லை. அதனால் அரசு அதிக விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இதுதான். பரிசோதனை, நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்" என்கிறார்.

தீவிர கண்காணிப்பு

சென்னையின் நிலை பற்றிப் பேசியுள்ள தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர், "சென்னையில் லாக்டௌன் நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளிலிருந்ததால், ஒவ்வொரு வார்டிலுல் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் பங்கேற்றனர். அதன் மூலம் கோவிட்-19 கண்காணிப்பு தீவிரமாகியது. தற்போது லாக்டௌன் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அலுவலகங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக வெளியே செல்வர்.

pharmacy
pharmacy

அதனால் நடமாடும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் அலுவலகங்களிலேயே சென்று பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும். கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு பரிசோதனைக்குச் செல்லாமல் அலட்சியப்படுத்த வாய்ப்புண்டு. அதனால் மருந்துக் கடைகள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சிறிய மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டு நோயாளிகளைக் கண்டறிய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அரசு என்ன சொல்கிறது?

சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் மருத்துவர் வடிவேலிடம் பேசினோம்.

"தீவிர கண்காணிப்பு, காய்ச்சல் முகாம் உள்ளிட்ட பல்வேறு உத்திகளின் மூலம் நோயாளிகள் கண்டறியப்பட்டதன் விளைவு சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகளே அதற்குச் சான்று. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படத் தீர்மானித்திருக்கிறோம்.

கொரோனா: `அவள் இல்லாமல் எப்படி இருப்பேன்?' - இறப்பிலும் பிரியாத கணவன், மனைவி
aggressive screening
aggressive screening

கொரோனா பரிசோதனைகளை ஏற்கெனவே செய்த எண்ணிக்கையிலேயே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை தவிர, பிற மாவட்டங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என்றார் அவர்.

சென்னையில் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது சற்று ஆறுதலாகவே உணர்கிறோம். ஆனால், உண்மை நிலை குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்கள் கவலையளிக்கின்றன. நோயாளிகள் குறைந்துவிட்டனர் என்று அலட்சியமாக இருக்காமல் தொடர்ந்து செயல்பட்டு நோயை இல்லாமல் ஆக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு