Published:Updated:

இந்தியா இழைத்த தவறுகள்...

ரமணன் லட்சுமிநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
ரமணன் லட்சுமிநாராயணன்

உலக அளவில் என் பேட்டியும் கட்டுரைகளும் வெளிவராத இதழ்களோ மொழிகளோ இல்லை.

இந்தியா இழைத்த தவறுகள்...

உலக அளவில் என் பேட்டியும் கட்டுரைகளும் வெளிவராத இதழ்களோ மொழிகளோ இல்லை.

Published:Updated:
ரமணன் லட்சுமிநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
ரமணன் லட்சுமிநாராயணன்
‘உலக அளவில் இந்தியாதான் அடுத்த ஹாட் ஸ்பாட்டாக இருக்கப்போகிறது.

கொரோனாத் தொற்று விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் இந்திய மக்கள்தொகையில் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்படலாம்’ என்ற அதிர்ச்சித் தகவலை மார்ச் மாதமே கணித்துச் சொன்னவர் ரமணன் லட்சுமிநாராயணன். ‘தி வயர்’ இதழில் கரண் தாப்பருடனான நீண்ட உரையாடலில் இப்படிச் சொல்லி யிருக்கும் ரமணன், வாஷிங்டனின் ‘சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ அமைப்பின் இயக்குநர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளர். சென்னையில் படித்து வளர்ந்தவர். இவரது கணிப்பை நம்ப மறுத்த பலருக்கும், இன்றைய இந்தியாவின் நிலை யதார்த்தத்தை உணர்த்தியிருக்கிறது.

‘`உலக அளவில் என் பேட்டியும் கட்டுரைகளும் வெளிவராத இதழ்களோ மொழிகளோ இல்லை. ஆனந்த விகடனுக்குப் பேசுவது இவை எல்லாவற்றையும்விட ரொம்பவே ஸ்பெஷல்... விகடன் என் மனதுக்கு நெருக்கமானவன்’’ என்று மகிழ்ச்சியும் உற்சாகமுமாகப் பேசத் தொடங்கினார் ரமணன்.

ரமணன் லட்சுமிநாராயணன்
ரமணன் லட்சுமிநாராயணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`இன்ஜினீயரிங்கும் எகனாமிக்ஸும் முடித்துவிட்டு எபிடெமியாலஜி படித்தேன். என்னுடைய பெரும்பாலான ஆய்வுகள் தொற்றுநோய்கள், தொற்றுநோயியல் மற்றும் உலகளாவிய பெருந்தொற்றுக்காகத் தயாராவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. டெல்லியில் சில நாள்கள், பிரின்ஸடனில் சில நாள்கள் என ஓடிக்கொண்டிருக்கிறேன். கமல் சாருடன் ‘மய்யம் டாக்ஸ்’-ஸில் பேசியபிறகு, நிறையபேர் அழைக்கிறார்கள். நான் ஒரு தமிழன் என்று தெரிந்து அவரின் குழுவினர் என்னைத் தொடர்புகொண்டு அழைத்தார்கள். யாருக்குத்தான் மறுக்கத் தோன்றும்? கமல் ரசிகனாகவும் இதற்கு சம்மதித்தேன். அந்த உரையாடலில் துளியும் அரசியல் பேசவில்லை’’ என்றவரிடம் கேள்விகளை முன்வைத்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“மார்ச் மாசமே அடுத்த ஹாட் ஸ்பாட் இந்தியாதான் என்று கணித்திருந்தீர்கள். எதை வைத்து அப்படிச் சொன்னீர்கள்?”

“அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்ட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மோசமான பாதிப்புகளைக் கொண்ட, காற்று மாசுள்ள, சுகாதார அமைப்பில் பலவீனமான எந்த நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காவது எளிது. இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாவிட்டால், ஜூலையில் 30 கோடி இந்தியர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்று சொல்லியிருந்தேன். அது இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்ற அப்போதைய கணிப்பின்படி சொல்லப்பட்டது. வெப்பமான சூழல், இந்தியர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி, பிசிஜி தடுப்பூசியின் பலன், குளோரோகுயின் பயன்பாடு போன்றவற்றுக்கு இந்த வைரஸ் எப்படி ரியாக்ட் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவற்றில் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. நம் மக்கள்தொகையில் இளவயதினரின் எண்ணிக்கை அதிகம். இது ஒன்றுதான் இப்படியொரு மோசமான சூழலில் இறப்பு விகிதத்தை அதிகரிக்காமல் இந்தியாவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.”

இந்தியா இழைத்த தவறுகள்...

“அடுத்து வரப்போகிற நாள்கள் இந்தியாவுக்கு எப்படியிருக்கும்?”

“அதை இப்போதே கணிப்பது இயலாதது. பரிசோதனைகளின் மூலம் இந்தியாவின் துல்லியமான நிலை இன்னும் நமக்குத் தெரியவில்லை. இதற்குப் பிரத்யேக சர்வே ஒன்று தேவை. செரலாஜிகல் சர்வே எனப்படும் அது, மக்களில் எத்தனை பேருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ கோவிட் 19 தொற்று அனுபவம் இருந்தது என்பதைக் காட்டும். இப்போதைக்கு மூன்று விஷயங்களை உறுதியாகச் சொல்ல முடியும். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முன் இன்னும் ஆறு மாதங்களாவது இந்த வைரஸின் தாக்கம் இருக்கும். மருத்துவ முன்னேற்றங்களின் பலனாக அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை இன்னும் சீரடையும். ஓரளவு தயாராக உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் நிலைமை வட மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`கொரோனா உயிர்க்கொல்லியா? உலகம் முழுவதிலும் இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கும்போது ஏன் கோவிட் 19 வைரஸைக் கண்டு இவ்வளவு பயப்பட வேண்டும்?”

“பெரும்பாலான கோவிட் 19 தொற்றாளர்கள் குணமடைந்துவிடுவார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இறக்க நேரிடும். ஆனால் தற்போதைய நிலவரப்படி, 60 வயதுக்குமேல் உள்ள 10 சதவிகிதத் தொற்றாளர்கள் இறக்கக்கூடும். மக்கள்தொகையில் 60 சதவிகிதம் இதனால் பாதிக்கப்படக்கூடும். நோய்ப்பரவல் அதிகரிக்கும்போது சிறிய அளவிலான இறப்பு விகிதம்கூடக் கவலையளிப்பதாக இருக்கிறது. கோவிட் 19 வைரஸைக் கண்டு பயப்படுவதற்கு பதில், அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பகுத்தறிவைப் பயன்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதுதான் எல்லோருக்குமான பரிந்துரை.”

இந்தியா இழைத்த தவறுகள்...

“மாநில முதல்வர்கள் தொடங்கி, மருத்துவ நிபுணர்கள்வரை அனைவரும் மக்களை கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளச் சொல்கிறார்கள். இதை அரசின் கையாலாகாத்தனமாகப் பார்க்கலாமா?”

“அரசால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கான அங்கீகாரமாகவே இதைப் பார்க்கலாம். நம்முடைய சொந்த முயற்சிகளால் மட்டுமே நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். லாக்டௌன் என்பது கொரோனா நோயாளிகளை எதிர்கொள்ளத் தயாராகவும், மருத்துவமனைகளைத் தயாராக வைக்கவும் பயன்படுத்தப்பட்ட காலம். இனி யாருக்கு டெஸ்ட் தேவைப்படுகிறதோ, அதைச் செய்வதும், யாருக்கு ஐசியூ படுக்கை தேவைப்படுகிறதோ அதைக் கொடுப்பதுமே அரசின் உடனடி பொறுப்புகளாக மாற வேண்டும்.”

``எல்லா மக்களும் ஒருமுறையாவது கொரோனாத் தாக்குதலுக்கு உள்ளாகி மீள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?’’

“எல்லோரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றாலும், பெரும்பான்மை நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் உள்ளவர்கள் முறையான சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும். பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைத்தே ஆக வேண்டும். மருத்துவ அறிவியலின் மேல் நம்பிக்கை வையுங்கள்.”

இந்தியா இழைத்த தவறுகள்...

“கொரோனாவோடு வாழப் பழகுவது என்றால் என்ன? அது சாத்தியமா?”

“பகுத்தறிவைப் பயன்படுத்தி நம்மைப் பாதுகாத்துக்கொள்வதுதான். வேறொன்று மில்லை. அடிக்கடி கைகளைக் கழுவுவது, முகக்கவசம் அணிவது, இருமும்போதும் தும்மும்போதும் முழங்கையால் மறைத்துக் கொள்வது, பொதுவிடங்களில் எச்சில் துப்பாமலிருப்பது, சுய சுகாதாரத்தைப் பேணுவது போன்றவற்றைச் செய்தாலே போதும். இதையெல்லாம் தாண்டியும் சிலர் பாதிக்கப்படுவார்கள். அதற்காக பயப்படத் தேவையில்லை. ஆரோக்கியமாக சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுங்கள்.”

“ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் கும்பல் எதிர்ப்புச் சக்தி இந்தியாவுக்கு சாத்தியமா?”

“இந்திய மக்கள்தொகையில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். எனவே அதிக உயிரிழப்புகளைச் சந்திக்காமல் ஹெர்டு இம்யூனிட்டி என்ற கும்பல் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவது சாத்தியம்தான். ஆனால் அதற்கு முன் முதியோர்களை வெளியில் விடாமல் வீடுகளுக்குள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். முதியோர் தவிர்த்து மற்றவர்கள் மட்டுமே இயல்பு வாழ்க்கைக்கும் வேலைகளுக்கும் செல்ல வெளியே வர வேண்டும். ஹெர்டு இம்யூனிட்டி என்பதை ஒரு உத்தியாகப் பார்க்க வேண்டாம். இந்தப் பெருந்தொற்று முடிவுக்கு வர, 100 சதவிகித மக்களும் இதற்கு இலக்காக வேண்டியிருக்காது என்பதை நல்ல செய்தியாகவே பார்க்க வேண்டும். என்னுடைய கவலையெல்லாம் வயதானவர்களையும் உடல்நலக்கோளாறுகள் உள்ளவர்களையும் பற்றியதுதான்.”

“ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் உபயோகத்தில் தொடங்கி, டிஸ்இன்ஃபெக்டன்ட்டை உடலில் ஏற்றச் சொன்னதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கொரோனா அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“விஞ்ஞான அறிவும் தலைமையும் சரியாக இல்லாததையே இது குறிக்கிறது. அமெரிக்காவில் இப்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. விஞ்ஞானத்தை மதித்த அரசின் திறன் கடந்த நான்காண்டுகளில் மாறியிருப்பது ஏமாற்றத்தையே தருகிறது. இந்த நிலை விரைவில் மாறும்.”

“உங்களுடைய பார்வையில் கொரோனாத் தடுப்பில் இந்தியா சரியான பாதையில்தான் செல்கிறதா? வேறு எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?”

“இந்தியா நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருப்பதுபோலவே சில தவறுகளையும் செய்திருக்கிறது. ஆரம்பத்திலேயே ஊரடங்கை அறிவித்தது நல்ல விஷயம். ஆனால் அதைத் தொடர்ந்திருக்கத் தேவையில்லை. ஆன்டிபாடி டெஸ்ட்டைக் கைவிட்டது, செரலாஜிகல் சர்வே செய்யாமலிருப்பது. சமூகப் பரவல் இல்லை எனப் பிடிவாதம் பிடிப்பது, தனியார் ஆய்வகங்களில் பரிசோதனைகளை அனுமதித்தது போன்ற விஷயங்கள் இந்தியா இழைத்த தவறுகள். இந்த நாள்களை அடுத்தகட்டத் தயார்நிலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்ட தமிழ்நாடுபோன்ற மாநிலங்களுக்குப் பிரச்னை யிருக்காது. மற்ற மாநிலங்கள் அப்படியில்லை.”

``கோவிட் 19 வைரஸுடனான போரில் இந்தியாவில் எந்த மாநிலத்தை நல்ல மாடலாகச் சொல்வீர்கள்?’’

“தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவை வேறு வேறு காரணங்களுக்காக நன்றாகவே செயல்படுகின்றன. இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. கேரளா குறைவான பரிசோதனை களை மேற்கொண்டாலும் நோய்த்தொற்றுச் சங்கிலியைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டது. கர்நாடகாவும் தமிழ்நாடும் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு பாதிப்புகள் அதிகமிருக்கும்.”

“கொரோனாவுக்கு முடிவு வருமா?’

“கும்பல் எதிர்ப்புச் சக்தியை அடைந்ததும் அல்லது பாதுகாப்பான, பலன் தரக்கூடிய, பரவலாகப் பயன்படுத்தக்கூடிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த வைரஸ் தொற்று நிச்சயம் முடிவுக்கு வரும். 2020-ன் இறுதியில் அல்லது 2021 ஜூன் மாதத்துக்குள் இது சாத்தியமாகலாம் என்பது என் கணிப்பு.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism