கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் தேவை எந்தவித தடையும் இன்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இது ஒருபுறம் என்றால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்கள், தமிழகம் முழுவதும் முழுமையாக சப்ளை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், காலாவதியான உணவுப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, தேனியும் விதிவிலக்கல்ல.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய உணவு கட்டுப்பாட்டுத்துறை மாவட்ட அதிகாரி, “ சில கடைகளில், உணவுப் பொருள்கள் சப்ளை முழுவதுமாக இருப்பதில்லை. அதுபோன்ற கடைகளை உடனே மூட வலியுறுத்தி மூடியுள்ளோம். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது குற்றம். அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உணவுப்பொருள்கள் விற்பனைக் கடைகளில் சோதனை நடந்துவருகிறது. தேனி, போடி பகுதிகளில் இதுவரை 250 கிலோவுக்கும் மேலான காலாவதியான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மக்களும் கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கும்போது, பாக்கெட்டில் உள்ள உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதியைப் பார்க்க வேண்டும். அப்படி, காலாவதியான உணவுப் பொருள்களை உங்களுக்கு விற்பனை செய்திருந்தால், எங்களுக்குப் புகார் தெரிவிக்கலாம்.

அப்படிச் செய்தால், அடுத்த சில நிமிடங்களில் எங்களுடைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்துவிடுவார்கள். எனவே, மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. அப்போதுதான் தேனி மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.