Published:Updated:

"கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.... இந்தியாவில் குறைவு என்பது சரியா?" - மருத்துவர் விளக்கம்

டெஸ்ட்
டெஸ்ட்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி 15 நாள்கள்வரை மூன்று கட்டங்களாக கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை.

`கோவிட்-19' கொரோனா வைரஸ்! - உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படையெடுத்திருக்கும் ஒரு நுண்ணுயிரி. சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் இதன் தாக்கமும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள அதே நேரத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சில ஆயிரங்களிலேயே இருக்கிறது.

கொரோனா
கொரோனா

இந்தியாவைவிட மேம்பட்ட மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டிக்கொண்டிருக்கும் வேளையில், குறைந்த மருத்துவ வசதிகளும், அதிக மக்கள் தொகை நெரிசலும் கொண்ட நம் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது உண்மைதானா...?

உண்மைநிலை என்ன என்பது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்
டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்

"நம்மைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் குறைவாக இருப்பதற்குக் காரணம் இங்கு அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதில்லை. நாம் நம் நாட்டில் நோய்த்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து தற்போதுவரை அதிகம் பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்து பார்க்கவில்லை என்பதே உண்மை.

நம்மைவிடச் சிறிய நாடுகள் எல்லாம் ஒரு நாளைக்கு 5 லட்சம் மக்கள் வரையில் பல கட்டங்களாக கொரோனா டெஸ்ட் செய்துகொண்டிருக்கும் வேளையில் நாம் இதுவரை ஏறக்குறைய 50,000 மக்களுக்கு மட்டுமே டெஸ்ட் செய்துள்ளோம். இதன் விளைவாகவே இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாகத் தெரிகிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்
"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

சீனா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்தவுடன் அங்கிருந்த இந்திய மாணவர்கள், வேலை பார்த்த மக்கள் எனக் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஆனால், அவர்கள் யாருக்கும் முறையான கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. மார்ச் 22 அன்று நம் நாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டன. அதற்குள் நாம் 10 லட்சம் மக்களுக்காவது கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், நாம் செய்யத் தவறவிட்டுவிட்டோம். பொதுவாகவே கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் சென்றவுடன் அறிகுறிகளை வெளிப்படுத்தக் குறைந்தபட்சம் 4-5 நாள்களாவது எடுத்துக்கொள்ளும்.

எனவே, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி 15 நாள்கள்வரை மூன்று கட்டங்களாக கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. அதுபோல் மற்ற நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லாதவர்களுக்கும் டெஸ்ட் செய்கிறார்கள்.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

ஆனால், நாம் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் சந்தேக வளையத்தின்கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே டெஸ்ட் செய்து வருகிறோம். மேலும், இந்தியாவில் உள்ள எல்லாருக்கும் டெஸ்ட் செய்வதற்கான மருத்துவ வசதிகளும் நம்மிடம் போதுமான அளவுக்கு இல்லை. இங்கு வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை டெஸ்ட் செய்வதற்கென்றும், அவற்றை ஆய்வு செய்வதற்கென்றும் தனித்தனி லேப்கள் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய விஷயமாக உள்ளது.

கொரோனா தொற்று ஏற்படும் மக்களில் பெரும்பான்மையான சதவிகிதத்தினருவருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் ஏற்பட்டு பின்பு சரியாகிவிடுவதாலும், குறிப்பிட்ட சதவிகித மக்கள் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதாலும் நம் நாட்டில் இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

தடுப்பூசி
தடுப்பூசி
மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19... இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவாக இருக்க மற்றொரு யூகமும் கூறப்படுகிறது. அதாவது நாம் ஏற்கெனவே மலேரியா, டெங்கு, ஃப்ளு காய்ச்சல்களுக்கு உட்பட்டு அதற்கான தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொண்ட காரணத்தாலும், பி.சி.ஜி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும், நமக்கு கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸின் முழுமையான இன்குபேஷன் (incubation) காலம் (அதாவது வைரஸ் நம் உடலுக்குள் பல்கிப் பெருகிட எடுத்துக்கொள்ளும் காலம்) 15 நாள்கள் என்பதால் இன்னும் ஒன்றரை மாதம் கழித்தே இந்தியாவில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமா அல்லது குறைவா என்று உறுதியாகக் கூற முடியும்.

மருத்துவ வசதி
மருத்துவ வசதி

அதனால் நமக்கு வரப்போகிற பாதிப்பு குறைவோ, அதிகமோ எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் விதத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் தயாராக வேண்டும். கொரோனா மற்ற நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் தீவிரத்தன்மையை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களும் தங்களைத் தற்காத்துக்கொள்ள சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டில் மருத்துவ வசதிகளையும், நுண்ணுயிரிகளை ஆய்வுசெய்யும் லேப் மற்றும் டெஸ்டிங் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதை இந்த கொரோனா வைரஸின் வழியே உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது!" என்றார் சாந்தி ரவீந்திரநாத்.

அடுத்த கட்டுரைக்கு