Published:Updated:

``கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை!" - ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தகவல்

A vaccine volunteer receives an injection Johannesburg
A vaccine volunteer receives an injection Johannesburg ( AP / Siphiwe Sibeko )

தமிழகத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வந்த பரிசோதனையும் நிறுத்தப்பட்டிருந்தது.

கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட பக்கவிளைவுக்கு தடுப்பு மருந்து காரணமல்ல என்ற அதிரடி தகவலை, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதனால் தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன்னார்வலர்களாக கோவிஷீல்டு தடுப்பு மருந்தை செலுத்திக்கொண்ட நபர்களில் ஒருவருக்கு மூட்டு பலவீனம் மற்றும் உணர்ச்சி பாதிப்பு ஆகிய நரம்பு சம்பந்தப்பட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து பல நாடுகளில் நடைபெற்று வந்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.

தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து
Pixabay

இந்தியாவிலும், 17 மையங்களில் நடைபெற்று வந்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து பரிசோதனையும் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வந்த பரிசோதனையும் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா' நிறுவனம் பரிசோதனைக்கான மருந்துகளைத் தயாரித்து அளித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னார்வலர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்குச் செய்யப்படும் ரத்தம், சிறுநீர் பரிசோதனை, கொரோனா பரிசோதனை, தடுப்பு மருந்து பரிசோதனைக்கு அவர்களைத் தயார்படுத்துவது போன்ற அடிப்படைப் பணிகள் மட்டும் நம் நாட்டில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பரிசோதனையின்போது கூடுதல் பாதுகாப்பு, தன்னார்வலர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்தியாவில் பரிசோதனையைத் தொடரலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் அனுமதியளித்தது. இந்தத் தகவலை சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்திருந்தார். மேலும் நிறுத்தப்பட்ட பரிசோதனைகள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே, தடுப்பு மருந்துப் பரிசோதனையின் சுதந்திர ஆராய்ச்சி கமிட்டி மற்றும் தேசிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்ததன் பேரில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் பரிசோதனை தொடங்கிவிட்டது.

கோவிஷீல்டு / Representational image
கோவிஷீல்டு / Representational image
Pixabay

இந்நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டது தொடர்பான தனிப்பட்ட தன்னார்வல ஆய்வைச் செய்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், 'குறிப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டுக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், தடுப்பு மருந்தினால்தான் அந்தக் குறைபாடு ஏற்பட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. அதேபோல, மருந்துக்கும் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிப்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில நாடுகள் மீண்டும் பரிசோதனையைத் தொடங்கிவிட்ட நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பரிசோதனையின் வேகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு