Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

தூய்மைப் பணியாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தூய்மைப் பணியாளர்கள்

மக்கும், குப்பை, மக்காத குப்பையைத் தனியா பிரிச்சுக் கொடுக்குறாங்க.

கொரோனாவுக்குப் பிறகும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

மக்கும், குப்பை, மக்காத குப்பையைத் தனியா பிரிச்சுக் கொடுக்குறாங்க.

Published:Updated:
தூய்மைப் பணியாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தூய்மைப் பணியாளர்கள்
அதிகாலை ஐந்தரை மணி... எந்த சலசலப்பும் இன்றி அமைதியில் உறைந்திருந்தது விழுப்புரம். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கண்சிமிட்டி, இருட்டோடு மல்லுக்கட்டிய மெர்க்குரி விளக்கு மனித இனம் போன்றே உயிரைத் தக்க வைக்கப் போராடிக்கொண்டிருந்தது.

காய்கறிக் குப்பைகள் நிறைந்து வழிந்த குப்பைக் கிடங்கில், பன்றிகளும் மாடுகளும் தனக்கான இரையைத் தேடிக்கொண்டிருந்தன. பேருந்து நிலையத்தின் முகப்பில், ஊரின் உறக்கத்தை உலுக்கும் விதமாக பலத்த சத்தத்துடன் வந்து நின்றது ஓய்வுவெடுக்கக் கதறும் நகராட்சி வண்டி ஒன்று. பல வண்ணப் புடவைகளில் வந்திறங்கிய பெண்கள் அடுத்த சில நிமிடங்களில், அடர் ஊதாநிறச் சேலை, அதன்மீது அழுக்குகள் தோய்ந்த ஆண் சட்டையில் தங்களைப் புகுத்திக்கொண்டனர். ஆள் உயரத் துடைப்பம், தள்ளுவண்டி, இரும்புத் தட்டுகள் ஏந்திவந்தவர்களை, “செல்வி நீ இந்தப் பக்கம், சூர்யா நீ அந்தப் பக்கம், ஜீவிதா இந்தப் பக்கம்’’ என அதிகாரி ஒருவரின் குரல் வழிகாட்ட, பரபரப்பாக இயங்க ஆரம்பிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இரண்டு மணிநேர வேலைக்குப் பின், வழியும் வியர்வையைத் தன் புடவையில் துடைத்துக்கொண்டே சுவரில் சாய்ந்தார் செல்வி அக்கா. 15 வருடங்களாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர். தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தூய்மைப் பணியாளராக உருவெடுத்தவர். அவரிடம், ‘`கொரோனா நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை சமுதாயம் கொண்டாடுகிறார்கள், மனிதர்களாக மதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், பாத பூஜைகூடச் செய்கிறார்கள். மக்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்’’ என செல்வி அக்கா மற்றும் அவரின் தோழிகளுடன் பேச ஆரம்பித்தோம்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

“என் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு இந்த வேலைக்கு வந்தேன். 15 வருஷம் ஓடிப் போச்சு. ஆரம்பத்தில் குப்பைகளில் கை வைக்கவே அருவருப்பா இருக்கும், குப்பை அள்ளி முடிச்சு பிறகு கையெல்லாம் அரிக்கும். அலர்ஜி வரும். அழுதிருக்கேன். ஆனா குழந்தைகளுடைய எதிர்காலம் கண் முன்னாடி வந்து நிக்கும். நாம் அழுதா அவங்க சந்தோஷமா இருப்பாங்கன்னு, கண்ணீரைத் துடைச்சுட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிருவேன்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

கிலோ கணக்கில் சேர்ந்த குப்பையை வண்டியில வெச்சு நாத்தத்தோட வெயிலில் தள்ளிட்டு வரும்போது உடம்பே ரணமா இருக்கும். ஆனா இப்போ நாத்தமும் அரிப்பும் பழகிப்போச்சு. நான் இந்த வேலைக்கு வந்ததில் எங்க அப்பாவுக்குத்தான் ரொம்ப மனவருத்தம். மகாலட்சுமியா கொண்டாடுன என்னைத் தூய்மைப் பணியாளர் உடையில் பார்த்து நொந்துபோயே சீக்கிரம் செத்துப்போயிட்டாரு” கண்ணீர் வடியக் குரல் தழுதழுக்கிறது செல்வி அக்காவிற்கு. சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

“ கொரோனா நேரங்கிறதால பஸ்ஸையெல்லாம் நிறுத்திட்டாங்க. தினமும் எங்க கிராமத்துல இருந்து நடந்துதான் வேலைக்கு வர்றோம். நகராட்சி அலுவலகம் வந்த பிறகு, அங்க இருந்து எங்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பத்து ரூபாய் கொடுத்தா நகராட்சி வண்டியில கொண்டு வந்து விடுவாங்க. ஆனா அதுகூட கொடுக்க முடியாமல் சில நாள் நடந்தே வந்துருவோம். அந்தப் பத்துரூபா இருந்தா எங்க புள்ளைக்கு ரெண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கலாம்னு தோணும்மா. நாங்க ஒப்பந்தப் பணியாளர்கள், மாசம் 8,500 ரூபாய் சம்பளம். பயோ மெட்ரிக்ல உங்க ரேகை ஒழுங்கா பதியலைன்னு மாசம் ரெண்டு மூணு நாள் கூலியைப் பிடிச்சுட்டுதான் கொடுக்குறாங்க. கொரோனா நேரத்தில் அரசு அறிவிச்ச கூடுதல் சம்பளப் பணம்கூட இன்னும் கொடுக்கலம்மா.ஆனாலும் அடுத்த மாசம் வேலை வேணுங்கிறதால் நாங்களும் எதிர்த்துப் பேசாம கொடுக்குற கூலியை வாங்கிட்டு இருக்கோம்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

ஊரடங்கு விதிக்கப்பட்டு ஜனங்க எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தாலும், தெருக்களில் குப்பை சேராமலா இருக்கு, வழக்கம்போல தினமும் வண்டிக் கணக்கில் குப்பைகளை அள்ளத்தான் செய்றோம். நாங்க வேலைக்கு வரலைனா குவியுற குப்பையில் இருந்து வேற எதாவது புது வியாதி வந்துரும். அரசாங்கத்தில் இருந்து கிளவுஸ், மாஸ்க்லாம் கொடுத்திருக்காங்க. கிளவுஸ் போட்டா தொடப்பத்தைப் பிடிச்சுக் கூட்ட சிரமமா இருக்கு. நாங்க அதைப் போடுறது இல்ல. கடைகள் எதுவும் இல்லை. திறந்திருக்கும் சில கடைகளில்கூட விலைவாசி அதிகமா இருக்கிறதால், வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே பத்தல. இத்தனை கஷ்டத்தை மறக்கடிக்கிற மாதிரி நல்ல விஷயம் ஒண்ணு நடந்திருக்கு. மக்கள் எங்களையும் மனுஷங்களா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. மரியாதை கொடுக்குறாங்க. ஏய், இந்தான்னு சொல்லிக் கூப்பிட்டவங்க அக்கான்னு கூப்பிடுறாங்க. ஆச்சர்யமா இருக்கு.

முன்னாடியெல்லாம் குடிக்கத் தண்ணி கேட்டாக்கூட கையில படாம வந்து, பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் கொடுத்துட்டுப் போவாங்க. அதை வாங்கிக் குடிக்கும்போது விஷத்தைக் குடிக்குற மாதிரி இருக்கும். நாங்களும் மனுஷங்கதான்னு கத்திச் சொல்லணும் போல இருக்கும். கிலோ மீட்டர் கணக்கில் நடந்தே வருவோம், லிப்ட் கேட்டா, யாரும் வண்டியில ஏத்த மாட்டாங்க. ‘நாப்கின்களை கவரில் சுத்திப்போடுங்கம்மா, கையில எடுக்க வேண்டியிருக்குன்னு சொன்னா, சம்பளம் வாங்குறீங்க. இதை எடுக்க கஷ்டமா இருக்கா?’ன்னு கேட்பாங்க. எட்டாயிரம் சம்பளத்துக்கு அத்தனையையும் கேட்டுட்டு துடைச்சு எறிஞ்சுட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிருவோம். நாங்களும் பாதிக்கப்படுவோம்னு யாருமே யோசிச்சது இல்ல. எங்கள மாதிரி துப்புரவுப் பணியாளர்கள் நிறைய பேர் 50 வயசிலேயே சுவாசப் பிரச்னை வந்து இறந்திருக்காங்க.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

ஆனா இந்த ஒரு மாசம் அப்படியில்ல, வீடுகளுக்குக் குப்பை வாங்கப் போனா முகம் கொடுத்து ரெண்டு நிமிஷம் பேசுறாங்க. கிளவுஸ் போடு, மாஸ்க் போடுன்னு உரிமையா சொல்றாங்க. சாப்பாடு கொடுக்குறாங்க. மக்கும், குப்பை, மக்காத குப்பையைத் தனியா பிரிச்சுக் கொடுக்குறாங்க. அட, ஏதோ ஒரு ஊரில் பாத பூஜையெல்லாம் பண்ணாங்களாம். என் புள்ளைகள் சொல்லுச்சு. சந்தோஷமா இருக்கு. ஏதோ அடையாளம் கிடைச்ச மாதிரி இருக்கு” என்று செல்வி அக்கா சொல்லும்போதே அவரை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் தூய்மைப் பணியாளர் சூர்யா.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

“எங்களுக்கும் குழந்தைகள் இருக்காங்க. வேலை முடிச்சுப் போனதும் ஓடி வரும் குழந்தைகளைத் தூக்கக்கூட பயமாதான் இருக்கு. ஆனால் இப்போ வேலை செய்யணுங்கிறது அவசியமான ஒண்ணு. எங்களை மனுஷங்களா பாக்கணுங்கிறது மக்களுக்கு வேணும்னா சாதாரண விஷயமா இருக்கும். அவசியம் இல்லாத ஒண்ணுன்னுகூடத் தோணலாம். ஆனா எங்களுக்கு அது ஒரு ஆசை. இப்போ அந்த ஆசை நிறைவேறியிருக்கு. டாக்டருக படிச்சுட்டு உயிரைக் காப்பாதுறாங்கனா, நாங்க எங்க உயிரைப் பணயம் வெச்சு ஊரைச் சுத்தம் செய்யுறோம். சில தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இருக்கு. மனசுக்குள்ள பயம் இருந்தாலும் அங்கேயும் நாங்க தினமும் குப்பைகள் வாங்கத்தான் செய்றோம். ஒதுக்கப்படுறதோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும். அதை நாங்க யாருக்கும் எப்போதும் கொடுக்க மாட்டோம்.

நாங்க செய்யுற வேலைக்காக யாரும் பத்துப் பைசா எங்களுக்குக் கொடுக்க வேணாம். மனுஷங்களா பாருங்க போதும். இப்ப டிவியில காட்டுறதனால எங்க கஷ்டம் உங்களுக்குப் புரியுது.

மரியாதை கொடுக்குறீங்க. ஆனா இத்தனை வருஷமாகவும் நாங்க இதே வேலையைத்தான் செஞ்சுட்டிருந்தோம். எங்க வலியை நீங்க புரிஞ்சுக்க 20 வருஷம் உழைச்சிருக்கோம். ரெண்டு நிமிஷம் எங்களை நிப்பாட்டிப் பேசியிருந்தா இத்தனை வருஷ அவமானங்களாவது குறைஞ்சிருக்கும்.கொரோனா முடிஞ்ச பிறகு மக்கள் எங்களை எப்படி நடத்துவாங்கன்னு தெரியாது. அதை எதிர்பார்க்கவும் இல்ல. ஜனங்க மரியாதை கொடுத்தாலும், கொடுக்கலைன்னாலும் நாங்க எங்க வேலையை சந்தோஷமா செஞ்சுட்டுதான் இருப்போம். சுத்தம்தான் எங்களுக்குச் சோறு போடுது. உழைப்புதான் எங்கள் ஆயுதம்” என்று விடைபெறுகிறார்கள் இந்தச் சகோதரிகள்.

க்ளீன் சல்யூட்.