Published:Updated:

``கமிஷன் ஒருபுறம்… பழைய பகை மறுபுறம்!” - விஜயபாஸ்கருக்கு வில்லங்கமான விவகாரங்கள்!

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

``அமைச்சருக்கும் செயலாளருக்கும் ஒத்துப்போனாலும் பழைய பகையை மனத்தில் வைத்திருந்தவர், சமயம் பார்த்து அமைச்சருக்கு சிக்கலை உண்டுபண்ணிவிட்டார்’’ என்கிறார்கள்

``கொரோனா பீதியால் நாடே பதறிவரும் நிலையில், அதை வைத்து நடந்த கமிஷன் பேரத்தினாலேயே இப்போது விஜயபாஸ்கர் ஓரம்கட்டப்பட்டிருக்கிறார்” என்கிற செய்திதான் அ.தி.மு.க வட்டாரத்தில் இப்போது பரபரப்பான பேச்சாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் தென்பட ஆரம்பித்தது முதல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் முகம் தொடர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்துவந்தது. அப்போது, சட்டமன்றம் நடந்துவந்த நிலையில்கூட, நாள்தோறும் மருத்துவமனையில் ஆய்வு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை என்று சுழன்றுவந்தார் விஜயபாஸ்கர். ஒருகட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் விஜயபாஸ்கர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

ஆனால் இப்போது, அதற்கு வேறு ஒரு முக்கியக் காரணம் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய முக்கிய அதிகாரிகள் சிலர், ``கொரோனா தடுப்பிற்கான மாஸ்க், சானிடைசர், வென்டிலேட்டர் உள்ளிட்ட பொருள்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. இதை உடனே கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்ப வேண்டியது சுகாதாரத்துறையின் முக்கியமான பணி. ஆனால், அதை வாங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்பட்டிருக்கிறது. தான் சொல்லும் நிறுவனத்தில் மட்டுமே இவற்றை வாங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சொன்னதாகவும், இதற்காக 40 சதவிகிதம் வரை கமிஷனும் பேசப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது. இதற்கு மருத்துவக் கழகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் தாமதமாகியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ உபகரணங்கள் எல்லாம் போதிய அளவிற்கு கையிருப்பில் உள்ளன என்று முதல்வர் சொல்லிக்கொண்டிருந்த நேரத்திலேயே பற்றாக்குறை இருப்பதாக பல மாவட்டங்களிலிருந்து தலைமைச் செயலகத்திற்குத் தகவல்கள் வர ஆரம்பித்தன. அதேநேரத்தில்தான், அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளங்களில் கதாநாயகனாக வலம் வந்துகொண்டிருந்தார். இதையெல்லாம் உளவுத்துறை மோப்பம் பிடித்து முதல்வர் காதில் பற்றவைத்தது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதேபோன்று தமிழக மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஜப்பான் நிதியுதவியுடன் நடந்து வரும் `ஜிகா’ திட்டத்திலும் அமைச்சர் தரப்பு பெருமளவில் கமிஷனில் விளையாடியிருப்பது பற்றியும் உளவுத்துறை அதிகாரிகள் அரைகுறையான சில தகவல்களை முதல்வர் அலுவலகத்திற்குப் பகிர்ந்துள்ளனர். இதற்குப் பின், முதல்வர் அலுவலகத்திலிருந்து துறையின் செயலாளருக்கும், மற்றொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் அழைப்பு வந்துள்ளது. அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, கமிஷன் விவகாரங்களை விலாவாரியாக சொல்லியிருக்கிறார். துறைச்செயலாளர் பீலா ராஜேஷும் `இதுபற்றியெல்லாம் என்னிடம் அமைச்சர் கேட்பதே இல்லை’ என்று சொன்னதாகத் தெரிகிறது. இதைக் கேட்ட முதல்வர் கொதித்துவிட்டார்’’ என்று விவரித்தனர்.

அமைச்சருக்கும் துறைச் செயலாளருக்கும் இடையில் சுமுக உறவு இருந்ததே என்று துறையின் அதிகாரிகளிடம் கேட்டதும், அமைச்சரைப் பற்றி முதல்வரிடம் துறைச் செயலாளர் பற்ற வைக்க, பழைய கணக்கு ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ``மருத்துவத்துறையின் செயலாளராக பீலா ராஜேஷ் பதவிக்கு வந்தபோது, ஒரு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க நான்கு கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றிற்கு ஓ.கே சொல்லி கையெழுத்து போட்டுள்ளார். ஆனால், அந்த உபகரணம் வாங்க வேறு ஒரு நிறுவனத்திடம் அமைச்சர் தரப்பு டீலிங் பேசியிருந்தது. நிறுவனத்தை செயலாளர் மாற்றியது தெரிந்த அமைச்சர் தரப்பு, செயலாளரைக் கடுமையாகப் பேசியுள்ளது. அதன்பின்பு, அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு அமைச்சருக்கும் செயலாளருக்கும் ஒத்துப்போனாலும் பழைய பகையை மனத்தில் வைத்திருந்தவர், சமயம் பார்த்து அமைச்சருக்கு சிக்கலை உண்டுபண்ணிவிட்டார்’’ என்கிறார்கள்.

பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்
பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்

அதோடு, உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில், மக்கள் நல்வாழ்வுத்துறை கொடுக்கும் விளம்பரங்களில் உங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நோட் போட்டுள்ளார்கள். அதையும் முதல்வர் மனத்தில் வைத்துக் கொண்டு நேடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இனி அடக்கிவாசியுங்கள்; துறைக்குதான் நீங்கள் அமைச்சர், தமிழகத்தின் முதல்வர் அல்ல” என்று சொல்ல, அமைதியாக ஒதுங்கிவிட்டாராம் விஜயபாஸ்கர்.

இந்த விவகாரம் இப்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து, `தங்க மங்கை, வீரப்பெண்மணி’ என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவிவருவதும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால் அவர் மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

``ஏற்கெனவே எங்கள் துறைக்கு இந்த மேடம் செயலாளராக வந்தபோது மூத்த அமைச்சர் ஒருவர் `பார்த்து நடந்துகொள்’ என்று எச்சரித்தார். அது இப்போது நடந்துவிட்டது. எங்கள் அமைச்சரை நம்பவைத்து காலிசெய்துவிட்டார். அமைச்சரால் அவர் அடைந்த பலன்களைப் பட்டியலிட்டால் நிலைமை வேறுமாதிரியாகிவிடும்” என்று செயலாளரைப் பற்றி குமுறுகிறார்கள், விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ``எனது துறையில் உள்ள மூத்த அதிகாரிகள்தான் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். என்னை சந்திக்க வேண்டாம் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. தேவையிருந்தால் நானும் விளக்கம் சொல்லுவேன். என் துறையில் உள்ள அதிகாரிகள் மிகவும் மூத்த அதிகாரிகள். எந்த முறைகேட்டிலும் ஈடுபடுகிறவர்கள் அல்ல. நீங்கள் சொல்லுவது போல எந்த முறைகேடும் என் பெயரைச் சொல்லி நடக்கவில்லை. அதை நானும் அனுமதிக்க மாட்டேன்” என்று முடித்துக்கொண்டார்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதற்குக் காரணமான விவகாரங்கள் பற்றி தகவல்கள் சேகரித்து, துறையின் மீது பொதுநல மனு தாக்கல் செய்வதற்கு சில தன்னார்வ அமைப்புகள் முயன்றுவருகின்றன. இதற்கும் துறையிலுள்ள சிலரே தூண்டுதலாக இருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.

கொரோனாவைவிட கொடூரமாக இருக்கிறது தமிழக சுகாதாரத்துறை பாலிடிக்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு