Published:Updated:

கொரோனா: '10% மேல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள்' - மத்திய அரசு

கொரோனா முன்களப் பணியாளர்கள்
கொரோனா முன்களப் பணியாளர்கள்

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பேரிடரில் இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. தேசிய அளவில் ஐந்து சதவிகிதம் என்ற அளவில் தொற்று பதிவு ஆகிறது. இருந்த போதிலும், ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகப்படுத்த அம்மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலையில் கடுமையான பாதிப்புகளுக்கு உருமாறிய டெல்டா வகை வைரஸ் பரவல் முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார். தற்போது, உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் அதிவேகமாகப் பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், சிக்கிம், ராஜஸ்தான், அசாம், ஒடிசா, உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில், கொரோனா பாதிப்பு விகிதம் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று குறைத்துவந்தாலும், மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் கண்காணிப்பை அதிகப்படுவது மிக அவசியம்.

மாநில அளவில் கட்டுப்பட்டுத் தளர்வுகளை அறிவிக்கும்போது அதிக கவனமுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும் - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலையின் பாதிப்பிற்கு டெல்டா வைரஸ் 90 சதவிகித காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கவலைக்குரிய மாறுபாடுகள் 175 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்கனா போன்ற மாநிலங்களில் அதிகளவில் டெல்டா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே வேளையில், நாடுமுழுவதும் 75 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும். 92 மாவட்டங்களில் 5-10 சதவிகிதம் வரையும் தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இரண்டாம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாது, டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களில் வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கூறியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்ட நேரத்தில் நாளொன்றுக்கு 36,000 வரை சென்ற பாதிப்பு குறித்து தற்போது 5,000-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் பதிவாகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.60 லட்சத்திற்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,191 ஆக உள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை கொரோனா தொற்றின் பாதிப்பு தன்மைக்கு ஏற்ப மூன்று வகையாகப் பிரித்துத் தளர்வுகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

இதில், வகை இரண்டு (23 மாவட்டம்) மற்றும் மூன்றில் (4 மாவட்டம்) உள்ள மாவட்டங்களில் பெரும்பாலும் நோய்த் தொற்று குறைந்திருப்பதால் பேருந்து இயக்கம், வணிக வளாகங்கள், கோவில்கள் திறக்க அனுமதி, டாஸ்மாக் செயல்பட அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ளது. அதே வேளையில் வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றின் தன்மையைக் கருதி இங்கு சில தளர்வுகளை அறிவிக்காமல் உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஜூலை 5-ம் தேதியோடு முடிவடையும் நிலையில். இந்த 11 மாவட்டங்களிலும், மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மேலும் சில தளர்வுகள் வழங்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன என்பது குறித்து, தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்து வருகிறதே தவிர கொரோனா வைரஸ் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. தொற்று குறைந்துவிட்டது நமது மாவட்டங்களுக்கு அரசு தளர்வுகள் வழங்கிவிட்டார்கள் என்றதுமே மக்கள் நமது ஊரில் கொரோனா இல்லை என்று தவறாகப் புரிந்துகொண்டு முகக்கவசம் அணியாது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாது கவனக்குறைவாக இருக்கிறார்கள். இது அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மட்டுமில்லை. அனைத்து இடங்களிலும் இதுபோன்ற செயல் காணமுடிகிறது" என்று கூறினார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், ``அரசு மக்களின் நலனுக்காக மட்டுமே பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. அந்த தளர்வுகளை மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு இடத்திலிருந்தாலும் அது அந்த ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா வைரஸில் உருமாறிய பல்வேறு வகைகள் உள்ளது. அதில் எல்லா வகை வைரசுமே ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவும் தன்மை கொண்டதுதான். அனைத்துமே கொரோனா வைரஸ் தான். நோய் அதிகரித்து வரும் மாவட்டங்கள் மட்டுமில்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதும், கொரோனா பேரிடரை வெல்வதும் சாத்தியம் இல்லை" என்று பேசினார்.

ஒவ்வொரு தனிநபரும் முகக்கவசம் அணிந்து, சரியான சமூக இடைவெளிகளைப் பின்பற்றி அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். நமது வாய்ப்பு வரும்போது தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமே இந்த கொரோனா பேரிடரிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் வழிமுறை. மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை வழிமுறைகளை நடைமுறைப் படுத்தினாலும், அவை அனைத்துமே பின்பற்றுவது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு