Published:Updated:

`மக்களின் அச்சம் போகணும்!' - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

கொரோனா தடுப்பூசி குறித்த பொதுமக்களின் அச்சத்தை போக்கி அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதத்தில், திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து முற்றிலும் மீண்டு வர தடுப்பூசி எப்போது கண்டறியப்படும் என ஆராய்ச்சியாளர்களை உலகமே எதிர்பார்த்துக் கிடந்தது. இந்நிலையில் அறிவியலின் வெற்றியாக தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது குறித்த எதிர்மறையான வதந்திகள் உலவத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி குறித்த தேவையற்ற அச்சத்தினை போக்கும் விதத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சுகாதாரத்துறையைச் சேர்ந்த முக்கிய அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், தமிழகத்தில், முதல் மாவட்ட ஆட்சியராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin

திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கென 13,500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த பொதுமக்களின் அச்சத்தை போக்கி அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதத்தில், திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

``கொரோனா தடுப்பூசி என்பது இந்த நெருக்கடியான காலத்தின் மிக அவசியமான தேவை. மருத்துவ அறிவியல் மூலம்தான் நாம் பல நோய்களை வென்று வந்திருக்கிறோம். கொரோனா தடுப்பூசி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகே உறுதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் எழுந்து வருகின்றன. இது போன்ற அநாவசிய வதந்திகளால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மக்களுக்கு இருக்கும் தேவையற்ற அச்சத்தை போக்கும் வகையில் இத்தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றியே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது என்பதால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை. இத்தடுப்பூசியால் எந்த வித பக்கவிளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை. இதனை உணர்த்தும் பொருட்டே தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்” என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்ட ஆட்சியரான விஜய கார்த்திகேயன், குறிப்பிட்ட நேரம் வரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு அனுப்பப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு