Published:Updated:

`மருத்துவர்களின் இந்த சேவைக்குத் தலைவணங்குகிறேன்!’ –கொரோனாவிலிருந்து மீண்ட தி.மலை இளைஞர் நெகிழ்ச்சி

கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞர்.
கொரோனாவிலிருந்து மீண்ட இளைஞர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதில், 28 வயது இளைஞர் ஒருவர் 14 நாள்களில் முழுமையாகக் குணமடைந்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றினார். அங்கு, தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இந்த இளைஞருக்கும் லேசான காய்ச்சல், இருமல் இருக்கவே, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது, இவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்படு, கடந்த 14 நாள்களாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இளைஞர்
இளைஞர்

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால், 14 நாள்களில் அந்த இளைஞர் பூரண குணமடைந்திருக்கிறார். இதையடுத்து, அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு, அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் சிறப்புப் பிரசாதம் மற்றும் பழங்களைக் கொடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பிவைத்தார், ஆட்சித் தலைவர் கந்தசாமி. அப்போது, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமாள்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோர் கைதட்டி அந்த இளைஞருக்கு மேலும் ஊக்கம் அளித்து வழியனுப்பினர்.

கொரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய அந்த இளைஞரிடம் பேசினோம்.``சென்னை மாலில் பணியாற்றியபோது என்னுடன் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால், எனக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகித்து, கம்பெனியில் இருந்து போன் செய்து,`ஏதாவது காய்ச்சல், இருமல், தொண்டை வலி பிரச்னை இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நானும் லேசாக இருக்கிறது என்று சொன்னேன். உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய் என்று சொல்லிவிட்டு, உடனே கம்பெனி நிர்வாகமே அரசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறது.

இளைஞர்
இளைஞர்

நானும், மருத்துவமனைக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். உடனே மருத்துவக்குழு என்னை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றது. அங்கு பரிசோதனை செய்ததில், எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது. உடனே என்னை முழுப் பாதுகாப்போடு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். முதலில் 4 நாள்கள் ரொம்பப் பயமா இருந்துச்சு. நான் பயப்படுவதைப் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் எனக்கு முழு அளவு நம்பிக்கைகொடுத்தனர். அதனால், எனக்கும் முழு நம்பிக்கை வந்துச்சு. அதுவே என்னைக் குணமடையச் செய்தது. மேலும், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

`அனைத்தும் நன்றாகவே நடந்தது!’ - கொரோனாவை வென்ற நெல்லை இளைஞர் உற்சாகம்

தினமும் காலையில் இட்லி, சப்பாத்தி, பூரி. மதியம் சாதம், முட்டை, பொரியல், அப்பளம். இரவு இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளைக் கொடுத்தார்கள். என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். மருத்துவர்களின் இந்த சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்களுக்குத் தலைவணங்குகிறேன்” என்றார் அந்த இளைஞர்.

இளைஞர்
இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 10 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களில் முதல் நபராக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர், இந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு